பொதுநலச் சங்கத்தினருக்கு சிறப்பு வரவேற்பு

என்ன செய்தார் சைதை துரைசாமி – அத்தியாயம் 23


நம் வீடு மட்டும் சுத்தமாக இருந்தால் போதும் என்பதே பெரும்பாலான மக்களின் மனநிலையாக இருக்கிறது. அதனால் தான் குப்பைத் தொட்டி நிரம்பாமல் இருந்தாலும், அதற்குள் போடாமல் எட்டி நின்று தூக்கி வீசிவிட்டுப் போய்விடுவார்கள். குப்பை கீழே விழுந்து சிதறி ரோடு அசிங்கமானாலும் கவலைப்பட மாட்டார்கள்.
வீட்டுக்குள் இருந்தபடி தெருவில் குப்பை வீசுவது, குடித்த குளிர்பான பாட்டில்கள், நொறுக்குத்தீனி பிளாஸ்டிக் கவர்களை அங்கங்கே அப்படியே போட்டுவிட்டு நகர்வார்கள். வீட்டுக்குப் பக்கத்தில் கொஞ்சம் காலி இடம் இருந்தாலே, அதை குப்பைக் கிடங்காக மாற்றிவிடுவார்கள்.
இப்படி வீசப்படும் குப்பை காரணமாகவே மழைக் காலங்களில் ரோட்டில் தண்ணீர் தேங்கி நிற்பதுடன் துர்நாற்றம் அடிக்கும். உடனே, ‘அரசாங்கம் சரியில்லை, மாநகராட்சி ஒழுங்காக வேலை செய்யவில்லை’ என்று பெரிதாக குற்றம் சாட்டுவார்கள்.
இது போன்ற தருணங்களில் தெருக்களையும் தெருவையொட்டிய பெரிய ரோடுகளையும் சுத்தமாக வைத்துக்கொள்ளும் பொறுப்பை சில பொதுநலச் சங்கங்கள் தாங்களாகவே முன்வந்து எடுத்துக்கொள்கின்றன. தெருவிளக்கு, குடிதண்ணீர் பிரச்னை, பார்க்கிங் குளறுபடி, கழிவுநீர் அகற்றல், பூங்கா குறைபாடு, தெருநாய் தொந்தரவு, ஆக்கிரமிப்பு போன்ற பல்வேறு பிரச்னைகளை அதிகாரிகள் கவனத்துக்குக் கொண்டுவருவார்கள்.
தாங்கள் வசிக்கும் இடமும் சுற்றுப்புறமும் எப்போதும் சுத்தமாகவும், சுகாதாரமாகவும் இருக்க வேண்டும் என்ற நோக்கத்தில் நிறைய மனுக்களுடன் வந்து அதிகாரிகளிடம் முறையிடுவார்கள். அப்படி வரும் பொதுநலச் சங்கத்தினரை உடனடியாக பேசி அனுப்புவதில் மாநகராட்சி அலுவலர்கள் கவனமாக இருப்பார்கள்.
ஏனென்றால் குறைந்த எண்ணிக்கையிலான ஊழியர்கள் அதிக வேலை செய்யவேண்டிய சூழல் நிலவுகிறது. ஆகவே பொதுநலச் சங்கத்தினர் நிறைய நேரம் எடுத்துக்கொள்வதை அலுவலர்கள் விரும்ப மாட்டார்கள். புகார் மனுக்களை வாங்கிக்கொண்டு அவர்களிடம் விளக்கம் கேட்காமலே அனுப்புவதில் குறியாக இருப்பார்கள்.
ஆனால், இந்த விஷயத்தில் மேயர் சைதை துரைசாமியின் அணுகுமுறை வித்தியாசமாக இருந்தது. ’பொதுநலச் சங்கத்தினர் புகார் மனுக்களுடன் வந்தால் நேரடியாக என்னிடம் அனுப்புங்கள்’ என்று கூறினார்.
ஏன் இப்படி செய்தார் சைதை துரைசாமி?
- நாளை பார்க்கலாம்.