அ.தி.மு.க.வில் நிறைவேறிய பல அதிரடி தீர்மானங்கள்.! மேகதாது, நீட் தேர்வுக்கு நோ…

இன்று ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் செயற்குழு கூட்டம் நடைபெற்றது. 293 நிர்வாகிகளுக்கு அழைப்பு விடப்பட்டிருந்தது. கொரோனா தொற்று இல்லை என்று ஆதாரத்துடன், அழைப்பு கொண்டுவந்த நிர்வாகிகள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர்.


கட்சியின் அவைத்தலைவர் இ.மதுசூதனன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்-அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்-அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

செயற்குழு தொடங்கப்பட்ட கொஞ்ச நேரத்திலேயே, தீர்மானங்கள் மட்டும் நிறைவேற்றப்பட்டது. அந்த வகையில் 15 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கொரோனா பரவலை தடுக்கும் வகையில் அயராது உழைத்த எடப்பாடி பழனிசாமி, பன்னீர்செல்வம் உள்ளிட்ட நிர்வாகிகளுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. மேலும், கொரோனா பரவலை குறைத்திருப்பதை ஏற்று மத்திய அரசு, தமிழகத்திற்கு தேவையான நிதியை வழங்க வேண்டும்.

எந்த மொழிக்கும் அதிமுக எதிரானதல்ல; ஆனால் மொழி திணிப்பை உறுதியாக எதிர்க்கிறோம். இருமொழிக்கொள்கையே அ.தி.மு.க.வின் கொள்கை என்று கூறப்பட்டிருந்தது. அதேபோன்று மத்திய அரசுகொண்டுவந்துள்ள நீட் தேர்வை கைவிட வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டது.

கலாச்சார ஆய்வுக்குழுவில் தமிழகத்தைச் சேர்ந்த அறிஞர்களுக்கு இடமளிக்க மத்திய அரசுக்கு வலியுறுத்தப்பட்டது. அத்துடன், கச்சத்தீவு மீட்கப்பட வேண்டும், இலங்கைத் தமிழர் நலன் பாதுகாக்கப்பட வேண்டும் என மத்திய அரசுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. 

காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசை கண்டித்து அதிமுக செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.