மானஸா தேவியை வழிபட்டால் எதிரிகள் அழிந்தே போவார்கள்! தரிசன மகிமை!

சண்டிகர் தலைநகரம் அரியானா மாநிலம் பஞ்ச்குலா மாவட்டத்திலுள்ள பிலாஸ்பூர் என்ற இடத்தில் இக்கோவில் கட்டப்பட்டது.


இங்கு வரும் வட மாநில பக்தர்கள் அம்மனை சண்டி, காளி, பீடா என்ற பெயரில் அழைக்கின்றனர். இந்த அம்மனை வணங்கினால் மன நிம்மதி, வாழ்வில் வளம், குழந்தைகள் கல்வி வளர்ச்சி பெறுவார்கள் என்பது அவர்களின் தீராத நம்பிக்கை. பிலாஸ்பூரில் மானசா தேவி என்ற பெயரில் இரண்டு ஆலயங்களில் கோயில் கொண்டு அருள்பாலித்து வருகிறாள். மானஸா தேவி வழிபாடு இமய மலைப் பிராந்தியத்தின் கலாசாரத்தையும் நம்பிக்கையையும் பிரதிபலிப்பதாக அமைந்துள்ளது.

சிவாலிக் மலையடிவாரத்திலுள்ள இயற்கை எழில் மிகுந்த அழகிய சிறிய கிராமமான பிலாஸ்பூரில் 100 ஏக்கர் விஸ்தீரணமுள்ள விசாலமான இடத்தில் இரண்டு பழமையான ஆலயங்கள் உள்ளன. மணி மஜ்ரா என்று அழைக்கப்பட்ட இப்பகுதியை ஆண்ட கோபால் சிங் என்ற மன்னரால் இந்த மானஸா தேவி ஆலயம் கட்டப்பட்டுள்ளது. இந்த ஆலயத்தில் இருந்து சுமார் 200 மீட்டர் தொலைவில் பாட்டியாலா மன்னராக இருந்த கரம்சிங் 1840ல் மானஸாதேவிக்கு இன்னொரு ஆலயத்தை கட்டினார். மன்னர் வசமிருந்த இப்பகுதி சுதந்திரம் அடைந்தவுடன் இந்தியாவுடன் இணைக்கப்பட்டது. மானஸா தேவி ஆலய வளாகத்தில் இரண்டு தனித்தனி ஆலயங்கள் உள்ளன.

மன்னர் கோபால் சிங் கட்டிய முதல் ஆலயமான மானஸா தேவி ஆலயம், இப்பகுதியில் வழக்கமாக காணப்படும் நாகரா பாணியாக இன்றி நான்கு மூலைகளிலும் கூர்மையான கோபுரங்கள் மற்றும் நடுவே சிறிய உருண்டையான கோளம் ஆகியவற்றோடு முகலாய பாணியில் கட்டப்பட்டுள்ளது. மேலும் இந்த ஆலயத்தின் நடுநாயகமாக பிரதான தேவதையாக மானஸா தேவியையும், நான்கு மூலைகளிலும் பரிவாக சந்நிதிகளையும் கொண்டு பஞ்சாயதன ஆலயமாக அமைந்துள்ளது.

அக்காலத்தில் கருவறையில் பிண்டி எனப்படும் மூன்று கூழாங்கற்களே துர்கா லக்ஷ்மி சரஸ்வதி தேவிகளாக பக்தர்களால் வழிபடப்பட்டன. ஆனால் துர்க்கையின் அம்சமாக மானஸா தேவியின் திருவுருவமும் கருவறையில் இருக்க வேண்டும் என்பதற்காக அவற்றின் பின்புறம் மானஸா தேவியின் மார்பளவு சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. இப்பொழுது மார்பளவு பளிங்கு விக்கிரகமான மானஸாதேவியோடு, பிண்டி உருவத்திலுள்ள மூன்று விக்கிரகங்களும் சேர்த்தே வழிபடப்படுகின்றன. இந்தப் பிண்டிகளுக்கும் பிரபாவளி அணிவிக்கப்பட்டு அலங்காரங்கள் செய்யப்படுகின்றன. அழகிய இயற்கைச் சூழலில் அமைந்துள்ள இந்த மானஸாதேவி ஆலயத்தின் அருகிலே சண்டி ஹோமம் நடத்தும் பொருட்டு விசாலமான யாகசாலை அமைக்கப்பட்டுள்ளது.

பாட்டியாலா மன்னர் கட்டிய ஆலயத்தில் கருவறையில் வெள்ளி மண்டபத்தில் பளிங்குக் கல்லில் வடிக்கப்பட்ட தேவி, வெள்ள்ளிக் கவசத்தோடு காட்சி தருகிறாள். தேவியின் விக்கிரகத்தோடு இங்கும் பிண்டி என்ற சுயம்பு வடிவங்களும் வணங்கப்படுகின்றன. இந்த இரு ஆலயங்களின் சுவர்களிலும் ராமாயணம் மகாபாரதம் போன்ற புராணக் காட்சிகளும் தேவியின் திருவுருவங்களும் அழகுற வண்ண ஓவியங்களாக தீட்டப்பட்டுள்ளன.

ஏப்ரல் மே மாதங்களில் வசந்த நவராத்திரியும் ஆஸ்வினி மாதமான செப்டம்பர் அக்டோபர் மாதங்களில் சரத் நவராத்திரியும் சிறப்பாக கொண்டாடப்படுகின்றன. பண்டாரா எனப்படும் கோயில் சாப்பாட்டு கூடத்தில் அன்றாடம் அனைத்து பக்தர்களுக்கும் அன்னதானம் செய்யப்படுகிறது.

சக்தி த்வஜம் என்ற கொடி மரத்திலிருந்து ஆலயம் வரை அமைக்கப்பட்டுள்ள நடை பாதையில் பக்தர்கள் தேவியை தரிசிக்க வரிசையில் நின்று தரிசிக்கின்றனர். பக்தர்கள் தாங்கள் தயாரித்த பிரசாதங்களை தேவிக்கு அர்ப்பணிக்கலாம். இந்த பிரசாதங்கள் தேவியின் காலடிகளில் வைக்கப்பட்டு பக்தர்களிடம் திரும்ப தரப்படுகின்றன.