பிடாரி அம்மன் கோவில் சூலத்தில் குத்தி வைக்கப்பட்ட சாரைப் பாம்பு..! பொள்ளாச்சி அதிர்ச்சி!

பாம்பை கொன்று விட்டு கோவிலின் மேல் கம்பியில் குத்திவிட்டு மதுப்பிரியர் ஒருவர் தலைமறைவாகியிருப்பது பொள்ளாச்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


கோயம்புத்தூர் மாவட்டத்தில் பொள்ளாச்சி அமைந்துள்ளது. இதற்கு அருகே குமாரபாளையம் என்ற இடம் உள்ளது. இங்கு மிகவும் பழமை வாய்ந்த பிடாரி அம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலின் வாயிலில் சூலம் கம்பிகள் இருக்கின்றன.

சம்பவத்தன்று மதுபோதையில் மர்ம நபர் ஒருவர் கோவிலுக்கு அருகே வந்துள்ளார். பின்னர் சாரை பாம்பு ஒன்றை அந்த மர்ம நபர் கொன்றுவிட்டு துண்டு துண்டாக வெட்டியுள்ளார். அதன்பிறகு அந்த பாம்பு துண்டுகளை கோவிலின் வேல் மீது வைத்துள்ளார். அவ்வழியாக சென்ற பொதுமக்கள் இந்த சம்பவத்தை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளனர். 

உடனடியாக அப்பகுதி காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் கோவிலின் வாயிலிலிருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். அப்போது பாம்பை கொன்று கோவில் வேல்கள் மீது போட்டது அதே கிராமத்தை சேர்ந்த வேலுச்சாமி என்பவர்தான் என்று காவல்துறையினர் கண்டறிந்தனர்.

தலைமறைவாகியுள்ள வேலுச்சாமியை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவமானது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.