பிறந்த நாள் கேக்கில் விஷம்..! உடன் பிறந்த அண்ணனை கொலை செய்த தம்பி! இதுதான் ரத்த பாசமா?

சொத்து தகராறு காரணமாக பிறந்தநாள் கேக்கை விஷம் வைத்து அண்ணனையே கொலை செய்த தம்பியை  காவல்துறையினர் தேடி வருகின்றனர்.


தெலங்கானா மாநிலத்தில் சித்திப்பேட்டை எனும் மாவட்டம் அமைந்துள்ளது. இங்கு 40 மதிக்கத்தக்க தொழிலதிபர் ஒருவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணமாகி 9 வயதில் மகனும், 5 வயதில் மகளும் உள்ளனர்.

நேற்று முன்தினம் இவர் தன்னுடைய மகனுக்கு பிறந்தநாள் கொண்டாடினார். பிறந்தநாள் கேக்கை சிறுவனின் சித்தப்பா அனுப்பியுள்ளார். இந்த கேக்கை உண்ட பின்னர் குடும்பத்தார் அனைவரும் மயங்கி விழுந்துள்ளனர். 

உடனே அக்கம்பக்கத்தினர் மருத்துவமனைக்கும், காவல்நிலையத்திற்கும் தகவல் தெரிவித்தனர். சம்பவம் அறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் அனைவரையும் மீட்பதற்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் துரதிஸ்டவசமாக பிறந்தநாள் கொண்டாடிய சிறுவனும், அவனுடைய தந்தையும் ஏற்கனவே உயிரிழந்ததாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

மேலும் சிறுவனின் தாயாரும் தங்கையும் உயிருக்குப் போராடி வரும் நிலையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தினர். கேக் அனுப்பிய சிறுவனின் சித்தப்பாவிடம் காவல்துறையினர் விசாரணையை தொடங்கினர். 

விசாரணையில் தான் விஷம் வைத்த கேக்கை அனுப்பியதை சிறுவனின் சித்தப்பா ஒப்புக்கொண்டுள்ளார். சொத்து தகராறு காரணமாக கொலை செய்ய முயன்றதாகவும் கூறியுள்ளார். சித்தப்பாவின் வாக்குமூலத்தை பெற்ற காவல்துறையினர் அவரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

இந்த சம்பவமானது தெலங்கானாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.