கஷ்டம் மேல் கஷ்டமா..? காலபைரவரை வழிபட்டால் போதும். எளிய வழிபாட்டு வழிகள் இதோ!

மனிதர்களின் வாழ்க்கையில் கஷ்டங்கள் ஏற்படுவது இயல்புதான்.


அப்படி நமக்கு ஓர் கஷ்டம் ஏற்படும்போது நாம் சோர்ந்து போகவேண்டாம், துவண்டுவிடவும் வேண்டாம். சிவபெருமானின் அம்சமாகத் தோன்றிய பைரவரை வழிபட்டு, ஆபத்துகளில் இருந்தும், கஷ்டங்களில் இருந்தும் விடுபடலாம். துன்பங்களும், துயரங்களும் வாழ்க்கையில் தொடர்கதையாகி போனவர்களுக்கு நம்பிக்கை ஊட்டுவதாக பைரவர் வழிபாடு உள்ளது.

கடவுள் வழிபாடு செய்து விட்டு அதற்கான பலன்களை எதிர்பார்க்கும் பக்தர்களுக்கு உடனடி நிவாரணம் தரும் கடவுளாக பைரவர் விளங்குகின்றார். நவகிரகங்களின் வக்கிரத்தால் பலர் வாழ்க்கையில் மிகுந்த துன்பத்தை அடைகிறார்கள். இந்த துன்பங்களிலிருந்து மீள பைரவர் வழிபாடு செய்ய வேண்டும். பைரவர் பூஜை செய்வதனால் கடுமையான தோஷங்களும் நீங்கும்.

நமது ஜாதகத்தில் எந்த கிரகத்தால் தோஷம் உள்ளதோ, அதற்குரிய பைரவரை வழிபட்டு நலம் பெறுதல் வேண்டும். நவகிரகங்களின் தொல்லைகளிலிருந்து மீள ஒன்பது விதமான பைரவ வழிபாடுகள் பரிகாரங்களாக ஜோதிட நு}ல்களில் கூறப்பட்டுள்ளன.

பைரவப் பெருமானுக்கு சர்க்கரைப் பொங்கல், தயிர் சாதம், தேன், செவ்வாழை, வெல்லப் பாயாசம், அவல் பாயாசம் நெய்யில் போட்டு எடுக்கப்பட்ட உளுந்து வடை, சம்பா அரிசி சாதம், பால் மற்றும் பல பழவகைகள் வைத்து வழிபாடு செய்வது மிகவும் உத்தமம்.

பைரவருக்கு மிகவும் உகந்த நாள் அஷ்டமி என கருதப்படுகிறது. பொதுவாக, மக்கள் அஷ்டமி அன்று எந்த நல்லகாரியமும் செய்ய மாட்டார்கள். அதன் உண்மைக்காரணம், இறையாணைப்படி அனைத்து ஜீவராசிகளுக்கும் எல்லா ஐஸ்வர்யங்களையும் அள்ளித்தரும் பணியினை நிறைவேற்றுபவர்கள் அஷ்ட லட்சுமிகள்.

சொர்ண பைரவரிடம், சக்திகளைப் பெற்று தாங்கள் பெற்ற ஐஸ்வர்யங்களையும் பக்தர்களுக்கு விநியோகம் செய்துவருகின்றனர். தாங்கள் பெற்ற சக்தி குறைய குறைய, ஒவ்வொரு அஷ்டமியிலும் பைரவரை வழிபாடு செய்து தங்கள் சக்தியை பெருக்கிக் கொள்ளுகின்றார்கள்.

அஷ்டமி அன்று, அஷ்ட லட்சுமிகளே பைரவ வழிபாட்டில் ஈடுபடுவதால், அவர்களால் அன்று நடைபெறும் நற்காரியங்களில் ஈடுபட முடியாது. ஆகவே, அஷ்ட லட்சுமிகளே வழிபடும் அந்த அஷ்டமி நன்னாளில், நாம் நேரடியாக ஸ்ரீபைரவரை வணங்கிவந்தால், அஷ்ட ஐஸ்வர்யங்களும் கிடைக்கும். தேய்பிறை அஷ்டமி, குறிப்பாக கார்த்திகை மாத தேய்பிறை அஷ்டமி பைரவ வணக்கத்திற்கு மிகவும் சிறந்தது.

சாதாரணமாக, நாய் வாகனம் பைரவரின் பின்புறம் வலப்பக்கம் தலை உள்ளவாறு இருக்கும். சில இடங்களில் இடப்பக்கம் தலை உள்ளவாறு இருக்கும். மிக அரிதாக, சில இடங்களில் மட்டுமே இருபக்கமும் நாய் வாகனங்களுடன் பைரவர் காட்சி தருகிறார். இவ்வாறு, இடப்பக்கம் மற்றும் இரு வாகனங்களுடன் உள்ள பைரவ பெருமான், மிகுந்த சக்தியுடன் விளங்குவதாக ஐதீகம்.

ஏவல், பில்லி சூனியம், பேய் பிசாசு முதலியவற்றின் தொல்லைகளிலிருந்து பூரண விடுதலை அடைய, வாழ்வில் வளம் பெற, திருமணத்தடைகள் நீங்கிட, பிதுர்தோஷம், சனிதோஷம், நீங்க பைரவர் வழிபாடு மிகவும் உதவும்.