தமிழ்நாட்டுக்கு வெட்டுக்கிளி ஏற்கெனவே வந்திருக்காமே, ஆதாரமாய் பேசுகிறார் கி.ராஜநாராயணன்

தமிழ்நாட்டுப் பக்கம் வெட்டுக்கிளி எட்டிப்பார்க்க வாய்ப்பே இல்லை என்றுதான் பல விஞ்ஞானிகளும் அதிகாரிகளும், அரசியல்வாதிகளும் சொல்கிறார்கள். ஆனால், தமிழ்நாட்டில் வெட்டுக்கிளி வேட்டை நடந்திருக்கிறது என்பதை தன்னுடைய கோபல்லபுரம் நாவலில் பதிவு செய்திருக்கிறார் எழுத்தாளர் கி. ரா. அந்தப் புத்தகத்தில் இருந்து சில பகுதிகள் இங்கே..


திடீரென்று சூரிய வெளிச்சம் மங்கி இருட்டியது ...குப்பையில் கிளறிக் கொண்டிருந்த கோழிகள் எல்லாம் இருட்டத் தொடங்கிவிட்டது என்று நினைத்து கூடுகளை நோக்கித் திரும்பத் தொடங்கின.. எங்கச்சி வளர்க்கும் கூண்டுக்கிளி திடீரென்று கீச்சுக் குரல் கொடுத்த அலறியது.

 என்னமோ ஏதோ என்று சீனி நாயக்கரும் , எங்கச்சியும் ஓடி வந்து முற்றத்தில் பார்த்தபோது திடுக்கிட்டுப் போனார்கள்.

 அவர்கள் பிரியமாக வைத்து வளர்த்த கருவேப்பிலை செடி மீது இலை தெரியாமல் விட்டில்கள் (வெட்டுக்கிளிகள்) மொய்த்துக்கொண்டிருந்தன. அவைகளை விட்டில்கள் என்று சொல்வதா அல்லது அதுக்கு வேறு ஏதாவது பெயர் உண்டா என்பது அவர்களுக்கு தெரியாது. பார்த்துக் கொண்டிருக்கும்போதே அந்த வளர்ப்புச் செடியில் ஒரு இலை கூட இல்லை!

அதில் உட்கார்ந்திருந்த விட்டில் பூச்சியின் நீளம் முக்கால் சாண் ஒருச்சாண் என்றிருந்தது ! இதுக்கு முன்னால் அவர்கள் ஆயுளில் இப்படி, இத்தனை பெரிய விட்டிலைப் பார்த்தது கிடையாது ; கேள்விப்பட்டதும் கிடையாது. எங்கச்சி பயந்து போய் புருஷனை சேர்த்துக் கட்டிக் கொண்டாள். 

என்ன இது! உலகம் அழிவு காலத்துக்கு வந்துவிட்டதா? உலகம் அழியப் போகும் போது மழை பெய்யுமாம் ; நாள்கணக்கில் நிற்காமல் சரமழை பெய்யுமாம் . அந்த மழைச்சரத்தின் கனம் யானைத் துதிக்கைத் தண்டி இருக்குமாம். ஆனால் யாரும் விட்டில் பூச்சி வந்து உலகத்தை அழிக்கும் என்று சொல்லவில்லையே ?

 அவர் மனைவியை உதறி விட்டுக் கோபத்தோடு போய் அந்த விட்டில்களை அடித்து விரட்டினார் . செழுமையான அந்தச் செடி இருந்த இடத்தில் ஒரு கம்பும் அதில் சில விளாருகளுமே நின்று கொண்டிருந்தது பரிதாபமாக இருந்தது. அவருக்கு தொண்டையை அடைத்தது . எந்தப்பக்கம் எங்கே திரும்பினாலும் படபடவென்ற சத்தத்துடன் அதே விட்டில்கள்.

 கோபல்ல கிராமமே ஒரு தேன்கூடு மாதிரியும் இந்த விட்டில்கள் அதில் மொய்க்கும் ஈக்களை போலவும் காட்சி தந்தது. கொஞ்ச நேரத்துக்கெல்லாம் மனித அபயக் குரல்கள் கர்ண கடூரமாக ஒலிக்க ஆரம்பித்தது . ஜனங்கள் நெஞ்சிலும் வாயிலும் அறைந்து கொண்டு அழும் கூக்குரல் கேட்டது. 

 காடுகளில் விளைந்த கம்மங்கதிர்களுக்கு காவலாக பரன் மேல் உட்கார்ந்து கொண்டிருந்தவர்கள் திகைத்து , இறங்கி வந்து விட்டில்களை விரட்டி பார்த்தார்கள். கம்புகளால் அடித்துப் பார்த்தார்கள். சோ சோ என்று கூப்பாடு போட்டுப் பார்த்தார்கள்.

 கதிர்களை மறைத்துக் கொண்டு உட்கார்ந்திருந்து விட்டில், பிறகு கதிர் காணாமல் விட்டில் மட்டுமே கண்ணுக்குத் தெரிந்தது. ஒவ்வொரு பயிரின் கீழிருந்து உச்சி வரைக்கும் அவைகள் மேயும் சத்தம் நெறுக் நெறுக்கென்று காடெல்லாம் ஒன்று போலக் கேட்டது .

எதைக் கொல்லுவது; எப்படி கொல்வது. விட்டிலைப் பிடித்தால் அதன் ரம்பம் போன்ற பின்னத்தங்கால்களால் உதைத்துக் கையை ரணமாகி விடுகிறது. 

நல்ல மனசு நாயக்கர் விட்டில்களை விரட்டிப் பார்த்தார் . தன்னை மூடி இருந்த துப்பட்டியை எடுத்து அவைகளை அடித்து அடித்து விரட்டினார். அசையவே இல்லை. அடியினால் பல விட்டில்கள் விழுந்து குற்றுயிராயின் .சிலது செத்தன. ஆனால் போகவே இல்லை. அவ்வளவு பசி அவைகளுக்கு. தன் கண்ணெதிரே தன் சிரமப்பட்டு உண்டுபண்ணிய மகசூல் அழிய எந்த சம்சாரி தான் சம்மதிப்பான்.

பக்கத்துப் புஞ்சைக்காரனை துணைக்குக் கூப்பிடலாமென்றால் அங்கேயும் இதே சோகம். நாயக்கர் ஓடி ஓடி அலுத்துப் போனார். வருசத்துக்கு ஒரு மகசூல் ; அடுத்த தை மாசத்தை இனி எப்படிப் பார்க்கிறது? மனுசருக்கு உணவு இல்லை ; கால்நடைகளுக்கு கூளம் இல்லை . எல்லாம் முடிந்தது. முடிந்தது எல்லாம் .

" அய்யோ தேவுடா ...." என்று மண்ணில் விழுந்து அழுதார். என்று விட்டில் நிகழ்வுகளைக் குறித்திருக்கிறார். 

அதனால், தமிழகத்துக்கு வெட்டுக்கிளி வராது என்று அசட்டையாக இராமல், முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுப்பது நல்லது.