ஆன்லைனில் ஆர்டர் செய்தால் போதும் மதுபானம் வீடு தேடி வரும்..! கடைகளில் கூட்டத்தை கட்டுப்படுத்த மாநில அரசு முடிவு!

மது கடைகள் திறக்கப்பட்டுள்ள நிலையில் வெளியே வராமல் வீட்டில் இருந்து ஆர்டர் செய்தபடி பெற்றுக்கொள்ளலாம் என்று சத்தீஸ்கர் மாநில அரசின் அறிவிப்பு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


இந்தியா முழுவதிலும் 40,263 பேருக்கு இந்த கொரோனா வைரஸ் தாக்குதல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதுவரை 10,887 பேர் குணமடைந்து இருப்பதாகவும், 1,306 பேர் உயிரிழந்திருப்பதாகவும் கூறப்படுகிறது. மகாராஷ்டிரா, டெல்லி, தமிழ்நாடு, ராஜஸ்தான், மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்கள் பெரிதளவில் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதனால் நாடு முழுவதிலும் நேற்றுவரை ஊரடங்கு உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டிருந்தன‌. நாடு முழுவதிலும் மார்ச் 25-ஆம் தேதி முதல் மதுக்கடைகள் மூடப்பட்டன. இதனால் குடிமகன்கள் மிகுந்த அவதிக்குள்ளாகினர். மேலும் பலரும்  கள்ளச்சாராயம் காய்ச்சி பருக முடிவெடுத்தனர். அவர்களை காவல்துறையினர் மடக்கி பிடித்து வந்தனர். 

இந்நிலையில் கொரோனா வைரஸ் தாக்குதல் குறைவாக உள்ள இடங்களில் இன்று முதல் ஊரடங்கு தளர்த்தப்பட்டுள்ளது. மேலும் பல்வேறு மாநில அரசுகள் வருவாயை ஈட்டுவதற்காக மதுக்கடைகளை நேற்று முன்தினம் முதல் திறந்து வைத்துள்ளன. இந்நிலையில் மக்கள் கூட்டம் மதுக்கடைகளின் முன்னர் அலை மோதுவதால் சமூக இடைவேளை கேள்விக்குறியாகிறது. இதனால் வைரஸ் தாக்குதல் பரவி விடும் என்ற அச்சத்தில் சத்தீஸ்கர் மாநில அரசு வித்தியாசமான ஒரு முறையை செயல்படுத்தி உள்ளது.

அதாவது அந்த மாநிலத்தின் (CSMCL) இணையதளத்தில் நபர்கள் வீட்டில் இருந்தபடியே பதிவு செய்து மதுவகைகளை பெற்று கொள்ளலாம் என்று கூறப்பட்டுள்ளது. அதாவது இந்த இணையதளத்திற்கு சென்று தங்களுடைய ஆதார் அட்டை, செல்போன் எண் முகவரி ஆகியவற்றை பதிவு செய்து கொண்டு மது வகைகளை ஆர்டர் செய்யலாம். ஒருமுறை ஆடர் செய்யும் போது 5 லிட்டர் மது மட்டுமே வழங்கப்படும் என்றும், வீட்டிற்கு சென்று வழங்குவதால் 120 ரூபாய் அதிகமாக வசூலிக்கப்படும் என்றும் அந்த மாநில அரசாங்கம் அறிவித்துள்ளது.

இதற்கு பல்வேறு தரப்பிலிருந்து ஆதரவுகளும், எதிர்ப்புகளும் கிளம்பி வருகின்றன. இந்த அறிவிப்பானது மது பிரியர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.