கட்சியைக் காப்பாற்ற தீபம் ஏற்றுங்கள்... அ.தி.மு.க.வினருக்கு இ.பி.எஸ்., ஓ.பி.எஸ். அன்பான அழைப்பு

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்த நாளைக் கொண்டாடும் வகையில், ஒவ்வொரு தொண்டரும் தீபம் ஏற்றி உறுதியேற்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து இன்று கட்சியினர் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பன்னீர்செல்வம் ஆகியோர் அறிவிப்பு வெளியிட்டுள்ளனர்.


தமிழ் நாட்டில் மட்டுமல்ல, இந்தியாவில் மட்டுமல்ல, உலகிலேயே உள்ள மக்கள் இயக்கங்களில் நம் எழுச்சி மிக்க அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் மாபெரும் சரித்திரம் படைத்துக் கொண்டிருக்கின்ற ஒரு இயக்கமாகத் திகழ்ந்து வருகிறது. இப்பேர்பட்ட இயக்கத்தை தாய்போல் சீராட்டி, பல இன்னல்கள் வந்தபோதும் காவல் தெய்வமாக காப்பாற்றி, ஈடு இணையில்லாத வீரியமும், உயிரோட்டமும் உள்ள ஓர் இயக்கமாக 

நம் கைகளில் தந்துவிட்டுச் சென்றிருக்கிறார்கள் நம் பாசத் தலைவி அம்மா அவர்கள்.

அம்மா அவர்கள் இம்மண்ணுலகைவிட்டுப் பிரிந்திருந்தாலும், அம்மாவின் புனித ஆன்மா நம் ஒவ்வொருவரின் செயல்களையும் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறது என்பது எங்கள் நம்பிக்கை. அவர் உழைப்பாலும், தியாகத்தாலும் உயிரூட்டி வளர்த்த இந்த இயக்கத்திற்கு நன்மை செய்வோரை அன்போடு ஆசீர்வதித்தும், தீங்கு செய்ய நினைப்போரை அறத்தின் வழி நின்று அழித்தும், ஒழித்தும் அம்மாவின் ஆன்மா இந்த இயக்கத்தை என்றும் காத்துவரும் என்பதும் நம் நம்பிக்கை. இந்த நம்பிக்கையிலிருந்து தான், எப்பேர்பட்ட இன்னலை நாம் சந்திக்க நேர்ந்தாலும், துளியும் அச்சம் இல்லாமல் அதை எதிர்கொள்ளும் துணிச்சலை நாம் பெறுகிறோம் என்பது நம் இதயங்களுக்குத் தெரியும்.  

இன்னும் இரண்டே மாதங்களில் நாம் மீண்டும் ஒரு பரீட்சையை சந்திக்க உள்ளோம். இதில் நல்லாட்சி பெற்ற மக்களும், நண்பர்கள் பலரும் நம் பக்கம் இருந்தாலும், எதிரிகளும், துரோகிகளும் கைகோர்த்துக்கொண்டு எப்படியாவது நம் படையை வீழ்த்த வேண்டும் என்ற தீய எண்ணத்தோடு செயல்படத் தொடங்கி இருக்கிறார்கள். இவர்களையெல்லாம் நம் உழைப்பாலும், உத்வேகத்தாலும், ஒற்றுமை உணர்வாலும், மக்கள் மீதுள்ள நேசத்தாலும், திசை மாறா விசுவாசத்தாலும் தோற்கடித்து, மக்கள் விரோதிகளுக்கு மீண்டும் ஒரு மாபெரும் பாடத்தை நாம் கற்பிக்க வேண்டும். 

 இந்த குறிக்கோளோடு கழகக் கண்மணிகள் அனைவருக்கும் ஒரு அன்பு வேண்டுகோளை விடுக்கிறோம். பிப்ரவரி 24 - மக்களை கண் இமைபோல் காத்த கடவுள் அம்மாவின் பிறந்த நாள்! இந்த பொன்னாளன்று நீங்கள் ஒவ்வொருவரும் ``என் இல்லம் அம்மாவின் இல்லம்’’ என்று உளமார நினைத்துக்கொண்டு உங்கள் வீடுகளில் சரியாக மாலை 6 மணிக்கு தீபம் ஒன்றினை ஏற்றி, கண்களை மூடியவாறு உள்நோக்கிப் பார்த்து, நம் ஒப்பற்ற தலைவியின் புனித ஆன்மாவிடம் பிரார்த்தனை செய்து, கீழ்க்கண்ட உறுதிமொழியை எங்களுடன் இணைந்து எடுத்துக்கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.  

 உறுதிமொழி :

 "உயிர்மூச்சுள்ளவரை அம்மாவின் வழியில் மக்களையும்,

 மக்களுக்கான இந்த அண்ணா-திமுக இயக்கத்தையும் காப்பேன்! 

 இது அம்மா மீது ஆணை!""

 அம்மாவின் பிள்ளைகளாகிய நாம் மக்களுக்காக என்றும் ஓடி ஓடி உழைப்போம்! இன்னும் இன்னும் பல நன்மைகளை ஊருக்கெல்லாம் கொடுப்போம்! வரும் தேர்தலிலும் ஜெயித்து எதிரிகளை வீழ்த்தி! வரும் நூற்றாண்டுகளுக்கும் அன்பை மட்டுமே வளர்த்து, கோட்டையில் நம் கொடியை உயர பறக்கச் செய்வோம்! இது உறுதி! உறுதி! உறுதி. 

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.