வேளாளர் சமுதாயத்தினருடன் பேச்சு வார்த்தை நடத்த வேண்டும். முதல்வருக்கு கொங்கு ஈஸ்வரன் கோரிக்கை.

ஏழு சமுதாயங்களை ஒன்றிணைத்து தேவேந்திரகுல வேளாளர் என்ற பெயர் கொண்டு அழைப்பதற்கு முதலமைச்சர் பரிந்துரைப்பதாக அறிவித்த நாளிலிருந்து தமிழகத்தில் பதற்றம் ஏற்பட்டிருக்கிறது. தொன்று தொட்டு வேளாளர் பெயர் கொண்ட மற்ற சமுதாயங்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கொண்டிருந்த நிலையில் அனைத்து தரப்பினரையும் தமிழக முதலமைச்சர் அழைத்து பேச வேண்டும் என்று கொங்கு ஈஸ்வரன் கேட்டுகொண்டுள்ளார்.


தமிழக முதலமைச்சரின் பரிந்துரைக்கு எதிர்ப்பு தெரிவித்து வேளாளர்கள் நடத்தும் போராட்டமானது உணர்வு பூர்வமானது. தமிழகமெங்கும் உள்ள வேளாளர்கள் அனைவரும் ஒன்றிணைந்து போராட்டத்தை முன்னெடுத்து கொண்டிருக்கிறார்கள். அப்படி நடத்தும் போராட்டங்களில் காவல்துறையை கொண்டு அதிகார அத்துமீறல்களையும் தமிழக அரசு நடத்தியிருக்கிறது.

வேளாளர்களின் போராட்டம் அனைத்து பகுதிகளிலும் தீவிரமடைந்து வரும் நிலையில் இரு தரப்பினர்களுக்கும் இடையே கார் கண்ணாடி உடைப்பு சம்பவங்களால் மோதல் போக்கு ஏற்படும் நிலை உருவாகியிருக்கிறது. இந்த சூழல் தொடருமானால் தமிழகத்தில் மிகப்பெரிய சாதி கலவரம் வெடிக்க வாய்ப்பிருக்கிறது. 

வேளாளர் பெயர் பிரச்சினையில் சுமூகமான தீர்வையே வேளாளர் பெயர் கொண்ட சமுதாய இயக்கங்கள் விரும்புகிறது. தங்கள் தரப்பு நியாயங்களை சொல்ல வேளாளர் சமுதாய இயக்கங்கள் ஒன்றிணைந்து தமிழக முதலமைச்சரை நேரில் சந்திக்க நேரம் கேட்டு கடந்த டிசம்பர் 10-ஆம் தேதி கடிதம் கொடுத்திருக்கிறார்கள். ஆனால் தமிழக முதலமைச்சர் இதுவரை வேளாளர் சமுதாய இயக்கங்களுக்கு நேரம் ஒதுக்காமல் காலம் தாழ்த்தி வருகிறார்.

இந்த தாமதத்தின் மூலம் இருதரப்புக்கும் மோதல் ஏற்பட்டு தமிழகத்தில் சாதி கலவரம் வர வேண்டுமென்று முதலமைச்சர் ஆசைப்படுகிறாரா ? என்ற சந்தேகம் எழுகிறது. எனவே தமிழக முதலமைச்சர் வேளாளர் பெயர் பிரச்சினையின் வீரியத்தை புரிந்து கொண்டு உடனடியாக வேளாளர் சமுதாய இயக்கங்களை அழைத்து பேச்சுவார்த்தையின் மூலம் இந்த பிரச்சினைக்கு தீர்வு காண முன்வர வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.