மொறுமொறு உளுந்து வடை... கமகம சாம்பார் எப்படி? சூப்பரோ சூப்பர் டிப்ஸ்!

முள்ளங்கியை வேக வைக்கும்போது சிறிது சர்க்கரையை சேர்த்து வேக வைத்தால் வாசனையுடனும் சுவையாகவும் இருக்கும்.


தோசை மாவு, வெண்பொங்கல் போன்றவற்றில் சீரகத்தை கைகளால் சிறிது தேய்த்துப் போட்டால் சுவையுடன் மணமாக இருக்கும். சாம்பார் இறக்கும் தருவாயில் வெந்தயமும், பெருங்காயமும் வறுத்து பொடி செய்து போட்டு அத்துடன் சிறிது கசகசாவையும் சேர்த்து பொடி செய்து போட்டால் சாம்பார் ருசியாகவும், மணமாகவும் இருக்கும்.

அரிசி, பருப்பு வகைகளைப் பத்திரப்படுத்தி வைக்கும்போது காய்ந்த வேப்பிலைகளை போட்டு வைத்தால் புழு பூச்சிகள் வராது. நன்றாக முற்றிய தேங்காயை பத்து நிமிடம் தண்ணீரில் ஊற வைத்து பிறகு துருவினால், மிகவும் எளிதாக துருவலாம். அடி பிடித்த பாத்திரத்தை சுத்தம் செய்ய அப்பாத்திரத்தில் சிறிது நீர் ஊற்றி வெங்காயத்தை போட்டு கொதிக்க விட்டால் பாத்திரம் பளிச்சென்று இருக்கும்.

பொங்கல் செய்யும்போது நீர் அதிகமாகி விட்டால், அதில் வறுத்த ரவையை ஒன்று அல்லது இரண்டு கைப்பிடி போட்டு கிளறினால் பொங்கல் கெட்டியாகி விடும். சுவையாகவும் இருக்கும். புதினா, தக்காளி இரண்டையும் நன்கு அரைத்து பஜ்ஜி மாவுடன் கலந்து செய்தால் பஜ்ஜி சுவையாக இருக்கும்.

பிளாஸ்க்கில் சூடான திரவத்தை ஊற்றும்போது பிளாஸ்க்கை சாய்வாக வைத்து ஊற்ற வேண்டும். அப்பொழுதுதான் பிளாஸ்க்கை நீண்ட நாட்களுக்கு பயன்படுத்த முடியும். உளுந்தம் பருப்பை ஊறவைத்து மிருதுவாக அரைக்க வேண்டும். உளுந்தம் பருப்பை அரைத்து எடுக்கும் சமயத்தில் அதனுடன் வேகவைத்த உருளைக்கிழங்கு, பச்சை மிளகாய், உப்பு ஆகியவற்றை சேர்த்து அரைத்து வடை செய்தால் வடை நன்றாக இருக்கும்.