புரட்டாசியில் செய்ய வேண்டிய கேதாரகெளரி விரதம்! தீர்க்க ஆயுளும் குடும்ப சுபிட்சமும் நிச்சயம்!

திருக்கேதாரத்தில் கேதாரேஸ்வரை கௌரியம்மை பூஜித்துப் பேறு பெற்றமையால் இவ்விரதம் கேதாரகௌரி விரதம் எனப் பெயர் பெற்றது.


இவ்விரதம் சிவவிரதங்களுள் முக்கியமான ஒன்றாகும். கேதாரம் என்பது இமயமலைச் சாரலில் உள்ள ஒரு சிவதலம். அதாவது மலையைச் சார்ந்த வயல் பகுதியை கேதாரம் என்பர். இந்த இமயமலைக் கேதாரப்பகுதியில் சுயம்பு லிங்கமாக கேதாரேஸ்சுவரர் தோன்றினார். அன்னை பார்வதி தேவி சிவனை நினைந்து வழிபட்டு அர்த்தநாரீசுவராக ஒன்றுபட்ட விரதமே கேதார கௌரி விரதமாகும்.

வயலில் ஆலமரத்தடியில் இருந்து இவ்விரதம் அனுஷ்டிக்கப்பட்டதால் கேதாரகௌரி விரதம் எனவும் ஈசனை வழிபடுகின்றபடியால் கேதாரேஸ்வரி விரதம் எனவும் பெயர் பெறுகின்றது. அதாவது கேதாரம் எனும் இத்தலத்தில் எழுந்தருளி இருக்கும் சிவனாரை நினைத்து பார்வதி தேவியாகிய - கௌரி அம்பாள் இவ்விரதத்தினை மேற்கொண்டதால் இப்பெயர் உண்டாயிற்று.

கேதாரகௌரி விரதம் என்பது சிவபெருமானுக்குரிய விரதங்களுள் ஒன்றாகும். ஆண்டுதோறும் புரட்டாதி மாதம் சுக்ல பட்ச தசமியில் இவ்விரதம் அனுஷ்டிக்கப்படுகின்றது. ஒவ்வொரு வருடமும் புரட்டாசி மாத வளர்பிறையான தசமி (விஜய தசமி) முதல் ஐப்பசி மாதம் தீபாவளி அமாவாசை வரை மொத்தம் 21 நாட்கள் கடைப்பிடிக்கப்படுகின்றது.

கோதார கௌரி விரதம் தோன்றியதற்கு ஒரு கதை உண்டு. அம்மையப்பராக காட்சி தந்து உலகையெல்லாம் காத்து இரட்சித்து கொண்டிருந்த வேளையில் ஐயன் ஈசனை வணங்க வந்து பிருங்கி மகரிஷி ஈசனை மட்டும் வணங்க வேண்டி வண்டின் உருவம் பெற்று, பரமேஸ்வரனுக்கும், பார்வதி தேவிக்கும் இடையில் சென்று (பார்வதி தேவியை வணங்காது) பரமேஸ்வரனை மட்டுமே 3 தடவை வலம் வந்து பயபக்தியோடு வணங்கினார். இந்த நிகழ்வானது அன்னை பார்வதி தேவியை மிகவும் வேதனைக்குள்ளாக்கியது.

சிவனும் சக்தியும் ஈருடலாக (தனித்தனியாக) காட்சி தருவதனாலேயே இத் துன்பம் நேர்ந்தது என்பதை உணர்ந்த அன்னை பார்வதி தேவி சிவனாரை விட்டுப் பிரிந்து பூலோகம் சென்ற சிவனாரை நினைந்து கடும் விரதமிருந்து ஈருடலும் ஓருடலாக தோற்றமளிக்கும் வரம் வேண்டி; நின்றார்கள். அதன் பலனாக சிவபெருமானின் (இடது பக்க) பாதியுடம்பை பெற்று அர்த்தநாரீசுவரர் ஆனார்கள். இநத விரமே கோதார கௌரி விரதமாகும்.

ஆண்டுதோறும் புரட்டாதி மாதம் சுக்ல பட்ஷ தசமியில் இவ்விரதத்தை ஆரம்பிக்க வேண்டும். இருபத்தோரு இழைகள் கொண்டதும் இருபத்தொரு முடிச்சுக்கள் கொண்டதுமான நு}லினால் உருவாக்கப்பட்ட மந்திரக் கயிற்றை செய்துகொண்டு அன்றுமுதல் சிவபெருமானை மண்ணால் செய்யப்பட்ட விம்பத்திலும், கும்பத்திலும் பூஜித்து இவ்விரதத்தை அனுஷ்டிக்க வேண்டும்.

தூய்மையான இடத்தில் மண்ணால் செய்யப்பட்ட சிவலிங்கத்தை அமைத்து கும்பம் வைத்து வில்வம் (பூக்கள்) முதலியனவற்றால் அர்ச்சனை செய்யவேண்டும். ஒவ்வொரு நாளும் கேதாரேஸ்வரனுக்கு இருபத்தொரு எண்ணிக்கை கொண்ட அப்பம், வடை, பழம், பாக்கு, வெற்றிலை, பாயாசம், சர்க்கரைஅன்னம், புளிஅன்னம் முதலிய நைவேத்தியங்களை வைத்து தூபதீபம் காட்டியும் பூஜை செய்து கேதேஸ்வரனை வழிபடுதல் வேண்டும்.

இருபத்தொரு நாளும் பூஜையில் வைக்கப்பட்ட இருப்பத்தொரு முடிச்சுக்கள் கொண்ட நு}லினை இருபத்தோராவது திதியான அமவாசைத் திதியில் இடது கையில் கட்டிக்கொள்ளவேண்டும்.

இவ்விரதத்தை ஆண், பெண் இருபாலாரும் அனுஷ்டிக்கின்றனர். இவ்விரதத்தைப் பின்பற்றி மகாவிஷ்ணு வைகுண்டத்தைப் பெற்றார் எனவும், பிரம்ம தேவன் படைப்புத் தொழிலை பெற்றார் எனவும், தேவேந்திரன் பொன்னுலகை ஆண்டு வெள்ளை யானையை பெற்றார் எனவும் கருதப்படுகிறது.

கணவரின் தீர்க்க ஆயுள் வேண்டியும் குடும்ப சுபிட்சம் வேண்டியும் கன்னிப்பெண்கள் நல்ல கணவர் அமைய வேண்டியும் குழந்தை பேறு வேண்டியும் ஆண்கள் மங்களகரமான வாழ்க்கை அமைய வேண்டியும் இவ்விரதத்தை அனுஷ்டிக்கின்றனர்.