நீ சொல்றத செய்ய நான் காக்கி யூனிபார்ம் போடல..! ஆளும் கட்சி நிர்வாகியை தெறிக்கவிட்ட சப் இன்ஸ்பெக்டர்!

எர்ணாகுளம்: உங்க இஷ்டத்துக்கு வேலை செய்ய நான் ஆளில்லை, என்று கேரள போலீஸ் அதிகாரி அரசியல்வாதி ஒருவரை வெளுத்து வாங்கிய ஆடியோ தற்போது வைரலாகி வருகிறது.


 எர்ணாகுளம் மாவட்டத்தில் கலமாசரி பகுதி போலீஸ் நிலையத்தின் உதவி ஆய்வாளராக பணிபுரிபவர் அம்ருத் ரங்கன். இவரிடம், அதே பகுதியின் சிபிஎம் கட்சி செயலாளர் ஜாகிர் ஹூசேன் ஃபோனில் தொடர்புகொண்டு மிரட்டியுள்ளார். அதாவது, கொச்சின் யுனிவர்சிடி ஆஃப் சயின்ஸ் அண்ட் டெக்னாலஜியில் படிக்கும் மாணவர்கள் தங்களுக்குள் கோஷ்டி மோதலில் ஈடுபட்டுள்ளனர்.

அவர்களில் சிலர் எஸ்எஃப்ஐ அமைப்பின் உறுப்பினர்கள் எனக் கூறப்படுகிறது. அவர்களை உதவி ஆய்வாளர் அம்ருத் கைது செய்திருக்கிறார். இதையடுத்தே, அவரை போனில் தொடர்புகொண்ட ஜாகிர், தனது கட்சிக்காரர்களை எப்படி நீ கைது செய்யலாம், உனக்கு என்ன தலையில் கொம்பு முளைத்துள்ளதா, என மிரட்டுகிறார். இதற்கு, ஜாகிர் சூடாக பதில் கொடுத்துள்ளார்.  

சினிமா படங்களில் வரும் போலீஸ் ஹீரோவைப் போல, யாருக்கும் மரியாதை செலுத்த நான் போலீஸ் வேலைக்கு வரல. நான் வந்ததே என் கடமையைச் செய்யத்தான். சட்டம் ஒழுங்கை காப்பாற்றவே நான் போலீஸ் சீருடை அணிந்துள்ளேன். அரசியல்வாதிகளுக்கு குனிந்து குல்லா போடும் போலீஸ் நான் கிடையாது. என் சீருடை மரியாதையை காப்பாற்ற நான் சாகவும் தயாராக உள்ளேன், என வெளுத்து வாங்கிவிட்டார்.  

இந்த ஆடியோ தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. அதேசமயம், இதனை சம்பந்தப்பட்ட உதவி ஆய்வாளர் அம்ருத் வெளியிட்டு, மலிவான விளம்பரம் தேடிக் கொள்வதாக, சிபிஎம் கட்சியினர் விமர்சிக்கின்றனர்.