வர வர தோனி சரியில்லை! நேற்று ரொம்ப மோசம்! சச்சின் விளாசல்!

நேற்று நடந்த இந்தியா-ஆப்கானிஸ்தான் ஆட்டத்தின் போது தோனி மற்றும் கேதார் ஜாதவ் இடையேயான பார்ட்னர்ஷிப் மந்தமாக இருந்ததாக கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இந்தியா தன்னுடைய உலகக்கோப்பை ஆட்டத்தில் நேற்று ஆப்கானிஸ்தான் அணியை எதிர்கொண்டது. முதலில் பேட் செய்த இந்திய அணி தொடக்கத்திலிருந்தே மந்தமாக விளையாடி வந்தது. வீராத் கோலி அதிகபட்சமாக 67 ரன்னும், கேதார் ஜாதவ் 52 ரன்களும் குவித்தனர்.

இருப்பினும் 50 ஓவர் முடிவில் இந்திய அணியினர் 8 விக்கெட் இழப்பிற்கு 224 ரன்களே எடுக்க முடிந்தது. ஆப்கானிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர்கள் அற்புதமாக பந்து வீசினர். 225 என்ற இலக்கை துரத்திய ஆடிய ஆப்கானிஸ்தான் இந்திய அணிக்கு கடும் நெருக்கடியை கொடுத்தது.

அணியின் நட்சத்திர வீரரான முகமது நபி இறுதிவரை விளையாடி 52 ரன்கள் குவித்தார். இருப்பினும் கடைசி ஓவரில் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளரான முகமது சமி ஹாட்ரிக் எடுத்து 11 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணியை வெற்றி பெற செய்தார்.

ஆட்டத்திற்கு பிறகு இந்திய அணியின் முன்னாள் கேப்டனான சச்சின் டெண்டுல்கர், இந்திய அணியின் பேட்டிங் மெச்சும்படி இல்லை என்று விமர்சித்தார். கேதார் ஜாதவ் மற்றும் தோனி இடையேயான பார்ட்னர்ஷிப் மிகவும் மந்தமாக சென்றது. ஆப்கானிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர்கள் அற்புதமாக பந்துவீசினர்.

அவர்கள் வீசிய 34 ஓவர்களில் வெறும் 119 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்தனர். இருப்பினும் இந்திய அணியின் பேட்ஸ்மேன்கள் உத்வேகத்துடன் விளையாடவில்லை. மிடில்-ஆர்டர் பேட்ஸ்மேன்களுக்கு போதிய வாய்ப்பு வரவில்லை என்பதனால் கேதார் ஜாதவ் அதிரடியாக விளையாட தயங்கினார்.

கேதார் ஜாதவ் மற்றும் தோனி அவர்கள் நினைத்த அளவிற்கு அதிரடியாக விளையாடவில்லை, விளையாட இயலவில்லை என்றும் சச்சின் கூறியிருந்தார். ஆப்கானிஸ்தானை சாதாரணமாக எடைபோட்டதற்கு இந்திய அணியினர் நேற்று நன்கு அனுபவித்தனர் என்று ரசிகர்கள் வலைத்தளங்களில் பதிவு செய்தனர்.