கருணாநிதி தமிழரா..? குஷ்பு கேள்வியால் கொந்தளித்த ஸ்டாலின்., கூட்டணி களேபரத்தில் ராகுல்

கருணாநிதி தமிழர் இல்லை என்ற ரீதியில் குஷ்பு சொல்லியிருக்கும் விவகாரம் தி.மு.க.வில் பெரும் களேபரத்தைக் கிளப்பியிருக்கிறது. அதனால் காங்கிரஸ் கட்சியின் கூட்டணியில் சிக்கல்...


சமீபத்தில் ஒரு பத்திரிகைக்கு குஷ்பு கொடுத்த அரசியல் பேட்டி காரசார விவாதமாக மாறியிருக்கிறது. ரஜினிகாந்த் அரசியலுக்கு வரவதை சீமான் எதிர்க்கிறாரே என்பதுதான் கேள்வி. குஷ்புவும் வெளி மாநிலத்தவர் என்பதால் இந்தக் கேள்விக்கு ஷார்ப்பாக பதில் சொல்லியிருந்தார் குஷ்பு.

அதாவது தமிழகத்தை ஆண்ட கருணாநிதி தமிழர் கிடையாது. எம்.ஜி.ஆர். தமிழகத்தைச் சேர்ந்தவர் அல்ல. ஜெயலலிதா கர்நாடகத்தில் இருந்து வந்தவர். அப்படி இருக்கும்போது இதைப்பற்றிப் பேசுவது தவறானது. மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என நினைப்பவர்கள் யாராக இருந்தாலும் அரசியலுக்கு வரலாம். 

ஜாதி, மதம், தமிழன் என்றெல்லாம் பார்க்கக்கூடாது. அரசியல் ரீதியாக ரஜினிகாந்தை விமர்சனம் செய்யலாம். ஆனால், அவர் தமிழர் இல்லை என்றெல்லாம் விமர்சனம் செய்வது தவறானது என்று சொல்லியிருந்தார்.

இந்த விஷயம் வெளியே வந்ததும் தி.மு.க.வில் இருந்து கே.எஸ்.அழகிரிக்கு கடுமையான டோஸ் விழுந்ததாம். உங்கள் கட்சியில் ஆளுக்கு ஒன்றாக பேசிக்கொண்டு இருக்கிறீர்கள். இப்போது எங்கள் தலைவரையே கேலி செய்வதுபோல் குஷ்பு பேசியிருக்கிறார். எங்கள் வருத்தத்தை ராகுலுக்குத் தெரியப்படுத்துங்கள் என்று சொல்லியிருக்கிறார்.

அதனால் வேறு வழியின்றி குஷ்பு விவகாரத்தை ராகுல் கவனத்துக்குக் கொண்டுபோயிருக்கிறார் அழகிரி. கூட்டணியில் குளறுபடி எதுவும் வந்துவிடக் கூடாது என்பதால், யாரும் எதுவும் பேச வேண்டாம். தேவையெனில் நானே ஸ்டாலினுக்குப் பேசுகிறேன். குஷ்புவை அமைதியாக இருக்கச் சொல்லுங்கள் என்று கடுமையாகவே சொன்னாராம்.

இந்த விஷயத்தை தி.மு.க.வும் காங்கிரஸும் கண்டுகொள்ளாமல் விட்டாலும், அ.தி.மு.க.வும் நாம் தமிழர் சீமானும் விடுவதாக இல்லையாம். கருணாநிதி யார் என்பதை இன்றைய தலைமுறைக்கு அடையாளம் காட்ட வேண்டிய நல்ல வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அதனால் விட மாட்டோம் என்று விவகாரத்தை பெரிதாக்கி வருகிறார்கள்.

குஷ்பு இப்போது என்னதான் சொல்கிறார். தி.மு.க.தான் என்னுடைய முதல் கட்சி, கலைஞர்தான் எனக்கு முதல் அரசியல் குரு என்றெல்லாம் சொல்லி சமாளித்துவருகிறார். பார்க்கலாம், பிரச்னை எந்த அளவுக்குப் போகும் என்பதை. கூட்டணியில் சிக்கல் ஏற்படாத வரையிலும் சரிதான்.