MLAக்களுக்கு பெருந்தொகை பேரம்! ஆட்சியை கவிழ்க்க சதி! கதறும் முதலமைச்சர்!

பெங்களூரு: கர்நாடகாவில் ஆட்சியை கவிழ்ப்பதற்காக, ஆளுங்கட்சி எம்எல்ஏ ஒருவரிடம் மிகப்பெரிய தொகையை கையூட்டு தருவதாகக் கூறி, பாஜக.,வினர் பேரம் பேசியதாக, முதல்வர் குமாரசாமி குற்றம் சாட்டியுள்ளார்.


கர்நாடக அரசியலில் தற்போது மிகக் கொந்தளிப்பான சூழல் நிலவுகிறது. எந்த நேரத்திலும் ஆட்சி கவிழுமோ என்ற அச்சத்தில் பலரும் உள்ளனர். காங்கிரஸ் கட்சியின் ஆதரவில் முதல்வராகப் பதவியேற்ற குமாரசாமி, இருதலைக் கொள்ளி எறும்பாக தவித்து வருகிறார். 

ஒருபுறம், காங்கிரஸ் கட்சி எப்போது வேண்டுமானாலும் ஆதரவை வாபஸ் பெறக் கூடும் என்ற அச்சமும், மறுபுறம் தனது கட்சி எம்எல்ஏ.,க்களை பாஜக வளைத்துப் போட முயற்சிப்பதும் குமாரசாமிக்கு பெரும் மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளது. 

ஆட்சியமைக்க இன்னும் சொற்ப எம்எல்ஏ.,க்களின் ஆதரவு மட்டுமே பாஜக.,வுக்கு தேவை என்ற சூழலில், 2வது பெரிய கட்சியாக இருந்த காங்கிரஸ் திடீரென பல்டி அடித்து, சொற்ப எம்எல்ஏ.,க்களை மட்டுமே வைத்திருந்த மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியை ஆட்சியமைக்க கேட்டுக் கொண்டது. 

   இது கர்நாடகா அரசியலில் பெரும் திருப்பத்தை ஏற்படுத்தினாலும், முதல்வர் பதவியை ஏற்றுக் கொண்ட நாள் முதலாக, குமாரசாமி அதிருப்தியுடனே காணப்படுகிறார். இந்நிலையில், காங்கிரஸ் கட்சி அல்லது மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியை சேர்ந்த சில எம்எல்ஏ.,க்களை விலைக்கு வாங்க, பாஜக தீவிர முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. 

100க்கும் அதிகமான எம்எல்ஏ.,க்கள் கைவசம் இருந்தும், ஆட்சி அமைக்க போதிய அளவு இன்னும் ஓரிரு எம்எல்ஏ.,க்களின் ஆதரவு இல்லையே என்ற ஏக்கம் பாஜக.,வுக்கு உள்ளதே இதற்கு முக்கிய காரணமாகும்.  

இதன்படி, யாரேனும் ஒரு எம்எல்ஏ சிக்குவாரா, என பாஜக.,வினர் குதிரை பேரம் பேசுவது வாடிக்கையாகவே உள்ளது. இதற்கிடையே, தனது கட்சியை சேர்ந்த எம்எல்ஏ சிலரிடம் பாஜக.,வினர் குதிரை பேரம் பேசியதாக, முதல்வர் குமாரசாமி குற்றம் சாட்டியுள்ளார். 

அதிலும் குறிப்பாக, ஒரு எம்எல்ஏ.,விடம், மிகப்பெரிய பணத் தொகையை தருவதாகக் கூறி, பாஜக.,வினர் பேரம் பேசியுள்ளனர். ஆனால், அவர் பேரத்திற்கு அடிபணிய மறுத்துவிட்டார் என்றும் குமாரசாமி குறிப்பிட்டுள்ளார். 

பணத்தைக் காட்டி எப்படியேனும் ஆளுங்கட்சி எம்எல்ஏ.,க்களை விலைக்கும் வாங்க நினைக்கும் பாஜக.,வின் முயற்சி ஒருபோதும் வெற்றிபெறாது எனக் கூறியுள்ள அவர், கோடிகளில் பேரம் பேசுவதை விட்டு, இப்போது அதைவிட அதிகமான அளவுக்கு பணத்தாசை காட்டும் முயற்சியில் பாஜக ஈடுபட்டுள்ளது ஜனநாயகத்திற்கு எதிரான செயல் என்றும் வன்மையாகக் கண்டித்துள்ளார். 

போதிய எம்எல்ஏ.,க்களின் ஆதரவுடன் கூட்டணி ஆட்சியமைத்திருந்தாலும், இப்படி பேரம் பேசியே பாஜக.,வினர் மன உளைச்சல் தருவதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.