அம்புபச்சி திருவிழா! காமாக்யா தேவியின் யோனியை வழிபடும் வினோத சடங்கு! ஏன் தெரியுமா?

அஸ்ஸாம் மாநிலம், கௌஹாத்தியில் உள்ள காமாக்யா கோவிலில் பெண் கடவுளின் பெண்ணுறுப்பை (யோனி) வணங்கி வருகின்றனர்.


தந்தை தட்சனால் நடத்தப்பட்ட யாகத்தில் அவமதிக்கப்பட்ட தாட்சாயிணி, அந்த யாகத்தை அழிக்க, அந்த யாகத்திலே விழுந்து எரிந்து போகிறார். இதை அறிந்த சிவன் ஓடோடி சென்று தன் மனைவியின் எரிந்த உடலை எடுத்து செல்வார். அப்போது உடல் பாகங்கள் துண்டுதுண்டாக பல இடங்களில் விழுந்தன. சக்தியின் உடல் பாகங்கள் விழுந்த இடங்களை தான் சக்தி பீடங்கள் என குறிப்பிடுகிறார்கள். அப்படி சக்தியின் யோனி விழுந்த இடம் தான் இந்த காமாக்யா கோவில். தேவியின் அங்கம் விழுந்ததும், மலை நீல நிறமாக மாறியதாம். அதனால்தான் இந்த மலையை, `நீல் பர்வதம்' என்றும் `நீலாச்சல்' என்றும் அழைக்கிறார்கள்.

இக்கோவிலின் வெளித்தோற்றத்தைப் பார்த்தால் மட்டுமே கோவில் போல தோன்றும். உள்ளே சென்றால் இருண்ட பாதாள குகை போன்று இருக்கும். இங்கு சிறு விளக்கு வெளிச்சத்தில் காமாக்யாவின் யோனி பீடத்தை தரிசிக்கலாம். அங்கிருந்து வரும் நீரூற்றின் நீரை பக்தர்கள் தீர்த்தமாகப் போற்றுகின்றனர். இந்தத் திருத்தலத்தில் சக்தி தேவிக்கு உருவம் கிடையாது. தேவியின் யோனியே சக்தியின் வடிவமாக வணங்கப்படுகிறது.

கோயிலில் மிகவும் முக்கியமான பண்டிகை அம்புபச்சி மேளா. 'அம்புபச்சி மேளா' என்பது பருவமழை நிறைவுறும் காலத்தில் தேவிக்கு நன்றி செலுத்தும் விதமாக நான்கு நாள்கள் கொண்டாடப்படும் பெரும் திருவிழா.  ஒவ்வொரு மாதமும் 5 நாட்கள் அன்னைக்கு மாதவிலக்கு நாட்கள். கர்ப்பகிரகத்தினுள் சில படிகள் இறங்கிச் சென்றால் யோனி போன்ற அமைப்பு கொண்ட கற்பலகையைக் காணலாம் இதன் மீது தண்ணீர் ஊறிக்கொண்டே இருக்கிறது. என்ன ஆச்சரியம் என்றால் மாதத்திற்கு மூன்று நாட்கள் இந்த இடத்தில் சிவப்பு நிறம் பளிச்சிடுகிறது.

மாதம்தோறும் காமாக்யா தேவியின் மாதவிலக்குக் காலமான நான்கு நாள்கள் சக்தி பீடத்தை சிவப்பு வஸ்திரத்தால் மறைத்துவிடுவார்கள். ஆனால், தமிழ் மாதக் கணக்குபடி ஆனி மாதம் வரும் மாதவிலக்கு நாள்களில் மட்டும் சக்தி பீடத்தில் வழிபாடுகள் நடைபெறும். அன்றைய தினம் பக்தர்களும் யோகிகளும் ஆயிரக்கணக்கில் வந்து தேவியை வழிபடுகின்றனர்.  நேற்றுத்தான் இந்த வருட ஆனி மாத அம்புபச்சி மேளா சிறப்பாக முடிந்தது.