விஜயாவின் உயிர் குடித்த கஜா

பட்டுக்கோட்டையை அடுத்துள்ள அணைக்காடு என்ற கிராமத்தைச் சேர்ந்த கூலித்தொழிலாளியின் மகள்தான் விஜயா. ஏழாம் வகுப்பு படித்துவரும் விஜயா, சமீபத்தில் பருவத்துக்கு வந்திருக்கிறார். பருவம் அடைந்ததை தீட்டு என நினைத்து, அவளை தனிக் குடிசையில் தங்குமாறு சொல்லியிருக்கிறார்கள். 15-ம் தேதி கடுமையான புயல் வீசும் என்பதைக் கேள்விப்பட்ட விஜயா, ‘இரவு புயல் வருகிறது என்கிறார்கள், எனக்கு தனியே தங்குவதற்கு பயமாக இருக்கிறது, இன்று ஒரு நாள் உங்களுடன் தங்கிக்கொள்கிறேன் என்று கெஞ்சியிருக்கிறார்


கஜா புயல் மரங்களை மட்டும் சாய்க்கவில்லை, எத்தனையோ லட்சக்கணக்கான மக்களின் தலையெழுத்தையும் மாற்றி எழுதிவிட்டது. லட்சாதிபதிகளாக, கோடீஸ்வரர்களாக முதல் நாள் படுத்துத் தூங்கியவர்கள், எழுந்து பார்த்தபோது கடன்காரர் என்ற நிலைக்கு வந்திருந்தனர். அந்த அளவுக்கு தோட்டம், காடு, வயல்வெளிகளை அழித்து வாழ்வாதாரத்தை அழித்துவிட்டது.

வீட்டில் இருந்தவர்கள், வாகனத்தில் சென்றவர்கள் என்று பலருக்கும் பலவிதமான மரணத்தை கஜா கொடுத்தது. அதில் மனதை அதிரவைக்கும் மரணம், விஜயாவுடையது.

பட்டுக்கோட்டையை அடுத்துள்ள அணைக்காடு என்ற கிராமத்தைச் சேர்ந்த கூலித்தொழிலாளியின் மகள்தான் விஜயா. ஏழாம் வகுப்பு படித்துவரும் விஜயா, சமீபத்தில் பருவத்துக்கு வந்திருக்கிறார்.

பருவம் அடைந்ததை தீட்டு என நினைத்து, அவளை தனிக் குடிசையில் தங்குமாறு சொல்லியிருக்கிறார்கள். 15-ம் தேதி கடுமையான புயல் வீசும் என்பதைக் கேள்விப்பட்ட விஜயா, ‘இரவு புயல் வருகிறது என்கிறார்கள், எனக்கு தனியே தங்குவதற்கு பயமாக இருக்கிறது, இன்று ஒரு நாள் உங்களுடன் தங்கிக்கொள்கிறேன் என்று கெஞ்சியிருக்கிறார்.

ஆனால், அம்மாவோ, ‘நம்ம ஊருக்கு புயல் வராது, சும்மா எதையாச்சும் சொல்வாங்க. அப்படி பயமா இருந்தா புயல் வீசும்போது வா - என்று சொல்லி தனியே தங்க வைத்திருக்கிறார்கள். இவர்கள் இருப்பதும் ஒரு சிறிய குடிசைதான். விஜயாவுக்காக பிரத்யேகமாக சின்னதாக குடிசை போட்டுக் கொடுத்திருக்கிறார்கள்.

அன்று இரவு கொடூரமாக கஜா புயல் ஊரையே துவம்சம் செய்து சென்றது. தங்கள் மகள் விஜயா தைரியமாக இரவை குடிசைக்குள் கழித்துவிட்டாளே என்று குடிசையில் இருந்து வெளியே வந்தார்கள்.

அங்கே அவர்கள் கண்டது கஜா கொடூரம். ஆம், விஜயா இருந்த குடிசையின் மீது தென்னை மரம் ஒன்று விழுந்து படுகாயம் அடைந்திருக்கிறார். எத்தனை நேரம் காயத்துடன் தாக்குப்பிடித்தாரோ... பெற்றவர்கள் எழுந்து பார்ப்பதற்குள் உயிர் பிரிந்துவிட்டது.

தொட்டால் தீட்டு என்று சொல்லி ஒதுக்கிவைத்ததாலோ என்னவோ, யாரும் தொடவே முடியாத இடத்துக்குச் சென்றுவிட்டாள் விஜயா.

கஜா இன்னும் எத்தனையெத்தனை மரணங்களை மறைத்திருக்கிறதோ..?