சாத்தான்குளத்தில் நீதிபதிக்கே இந்த நிலையா..? லத்தியை ஒளித்துவைத்து விளையாடும் போலீஸ்காரர்கள்.

ஒரு வழக்கு நீதிமன்றத்தில் நிற்க வேண்டும் என்றால், வழக்கு தொடர்பான சாட்சியங்கள் அவசியம் தேவை. சாத்தாங்குளம் வழக்கில், ஜெயராஜ், பென்னிக்ஸ் இருவரையும் அடித்த லத்தியை கண்டுபிடிப்பதற்கு நீதிபதி எடுத்த முயற்சி தோல்வியைத் தழுவியுள்ளது.


சாத்தான்குளம் இரட்டை கொலை வழக்கை உயர்நீதிமன்ற வழிகாட்டுதலின் படி விசாரணை செய்யும் கோவில்பட்டி நீதிதுறை நடுவர் பாரதிதாசன் இன்று, அதிர்ச்சிகரமான அறிக்கை ஒன்றை உயர்நீதிமன்றத்திற்கு தாக்கல் செய்திருக்கிறார்.

அந்த அறிக்கையில், அவர் போலீசாரால் அவமதிக்கப்பட்டத்தையும், மிரட்டப்பட்டதையும் தெளிவாகவே குறிப்பிட்டுள்ளார் மாவட்ட கூடுதல் கண்காணிப்பாளர் குமார் மற்றும் சாத்தான்குளம் காவல் துணை கண்காணிப்பாளர் பிரதாபன் ஆகியோர் தன்னை வரவேற்கவோ, வணக்கம் கூறவோ இல்லை என்பதுடன், தன்னை அலட்சியமாக நடத்தியதாகவும், மிரட்டல் தொனியில் தனது உடல் அசைவுகளை வெளிக்காட்டியதாகவும் மாஜிஸ்திரேட் பாரதிதாசன் தெரிவித்துள்ளார்.

மேலும் ஜெயராஜ், பென்னிக்ஸை காவலர்கள் விடிய விடிய லத்தியால் அடித்ததாகவும் காவலர் ரேவதி சாட்சியம் அளித்துள்ளார். சாத்தான் குளம் காவல்நிலைய டேபிள், லத்தியில் ரத்தக்கறை படிந்துள்ளதாக காவலர் ரேவதி மிகவும் அச்சத்துடன் கூறியுள்ளார் என்றும், லத்திகளை கேட்டபோது ஆளுக்கொரு காரணம் சொல்லி கொண்டுவர மறுத்தனர் என்றும் கூறியுள்ளார். 

சிசிடிவி புட்டேஜ் வைப்பதற்கு போதுமான ஸ்டோரேஜ் வசதி இருந்தும், அன்றன்றைக்கு அழியும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றும், அதனை மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் கூறியுள்ளார். மேலும், தன்னுடைய முதுகுக்குப் பின்புறம், ‘உன்னால ஒரு மயிரும் புடுங்க முடியாது’ என்று காவலர் பேசியதையும் குறிப்பிட்டுள்ளார்.

நமது நாட்டில் ஒரு உயர் பதவியில் இருக்கும் நீதிபதிக்கே காவல் நிலையத்தில் இந்த நிலைமை என்றால், சாதாரண குடிமகன்கள் எல்லாம் பின்பக்கம் கிழிய நிற்க வேண்டியதுதான்.