பிரசாந்த் பூசன் கேட்கும் மன்னிப்பில் தான் நீதிமன்றத்தின் மாண்பு இருக்கிறதா..? என்னங்க சார் உங்க சட்டம்.

பிரசாந்த் பூசன் வைத்துள்ள குற்றச்சாட்டுகள் நூறு சதவிகித உண்மை என்பது நாட்டு மக்களுக்கு நன்கு தெரிந்த நிலையில், ’அவர் ஒருவர் மட்டும் மன்னிப்பு கேட்டுவிட்டால் போதும் தங்கள் மீதான கறைகள் மறைந்துவிடும்’ என அந்த நீதிபதிகள் நினைப்பது நகைப்பிற்குரியது என்று மூத்த பத்திரிகையாளர் சாவித்திரி கண்ணன் பதிவிட்டுள்ளார்.


பிரசாந்த் பூசனிடம் மீண்டும்,மீண்டும் நீதிபதிகள், ’’மன்னிப்பு கேள்’’ என்று கேட்டதை ’எங்களை மன்னித்துவிடு’ என்று கெஞ்சியதாகவே மக்கள் புரிந்து கொள்வார்கள்!

இந்த விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட்டின் சம்மந்தப்பட்ட நீதிபதிகள் தாங்களாகவே வந்து தங்கள் தலையை கொடுத்து சிக்கிக் கொண்டு, இப்போது எடுக்கவும் முடியாமல்,விட்டுவிடவும் முடியாமல் தவிக்கின்றனர். முக்கியமாக ஓய்வு பெற்ற நான்கு தலைமை நீதிபதிகள் மீது பிரசாந்த் பூசன் ஊழல்வாதிகள் என குற்றம் சாட்டியிருந்தார்.

தற்போது இந்த வழக்கை விசாரிக்கும் அருண் மிஸ்ரா மீதும் ஏற்கனவே குற்றம் சொல்லியிருந்தார்!( ராஜஸ்தான் எம்.எல்.ஏக்களை சபாநாயகர் நீக்கிய வழக்கில் இவர் தான் தடை விதித்து எம்.எல்.ஏக்களுக்கு பாதுகாப்பு கொடுத்தவர்) குற்றம் சாட்டப்பட்டவரே நீதிபதியாக வந்து விசாரிக்க கூடாது என்ற தார்மீக நெறிகளையாவது அவர் மதிக்க வேண்டாமா?

பிரசாந்த் பூசன் தெரிவித்த கருத்து என்ன? கடந்த ஆறு ஆண்டுகளில் தேசத்தின் ஜனநாயகத்தை அழிப்பதில் முந்தைய நான்கு தலைமை நீதிபதிகள் பங்கு வகித்தனர் என்பது தான். அது குறித்த விரிவான விளக்கத்தை நீதிமன்றம் பிரசாந்த் பூசனிடம் கேட்டு பெற்றிருக்க வேண்டாமா?

மாறாக, ’’நீ எப்படி எங்க ஆட்கள் மீது குற்றச்சாட்டு வைக்கலாம்’’ என்ற கோணத்தில் விசாரித்தால், இது நியாயமற்றது என்ற எண்ணம் மக்களுக்கு ஏற்படுமா…? இல்லையா?

அந்த மனுஷன் என்னவோ மனசு தாங்காமல் டிவிட்டரில் பதிவிட்டார்.அதை அப்படியே விட்டிருந்தால் ஏதோ சில ஆயிரம் பேர் பார்த்ததோடு விவகாரம் முடிந்திருக்கும். ஆனால்,விதி யாரைவிட்டது.

’’நாங்கள் சுப்ரீம் கோர்டு நீதிபதிகளாச்சே எங்களையே சொன்னால் விடுவோமா? எங்கள் அதிகாரத்தை காட்டுகிறோம்’’ என்று இறங்க போய் இன்று ஒட்டுமொத்த ஊடகங்களிலும் பிரசாந்த் பூசன் எழுதியது வெளியாகிவிட்டது!

இப்போது நாட்டு மக்களில் பெரும்பாலானோர் ’’பிரசாந்த் பூசன் நம்ம நினைத்தை தான் பேசியிருக்கார். ஆகா,அவரை நாம் கைவிடக் கூடாது ஆதரிக்க வேண்டும்’’என்ற நிலைமைக்கு வந்துவிட்டனர்.

ஏராளமான முன்னாள் நீதிபதிகளே பிரசாந்த்பூசனை ஆதரிக்கின்றனர். வக்கீல்கள் நாடெங்கும் பிரசாந்த் பூசனுக்கு ஆதரவாக போராட்டம் நடத்துகிறார்கள்! உண்மைக்கு இருக்கும் வலிமையின் வெளிப்பாடுகளே இவை!

நீதிபதி சொல்கிறார்,’’ ஆ.. நீதிபதிகளை பற்றியும், நீதிமன்றத்தை பற்றியுமான மரியாதையை பிரசாந்த் பூசன் சீர்குலைக்கிறார்!’’ உச்ச நீதிமன்றம் என்பது ஒரு தனி மனிதனால் மரியாதையை சீர்குலைத்துக் கொள்ளும் அளவுக்கு பலவீனமானதா? நீதிமன்றத்தின் மீதான மரியாதையான தோற்றம் மக்களுக்கு அதில் நீதி வழங்கும் நீதிபதிகள் மூலமாகத் தானே உருவாக முடியும். 

அந்த பீடத்தில் இருப்பவர்களுக்கே அந்த பொறுப்பு இருக்காது என்றால் – நீதிபதிகள் தங்கள் நடத்தைகளின் மூலமாக அதை சிதைப்பார்கள் என்றால் - வெளியில் இருப்பவர்கள் தங்களை மதிக்க வேண்டும் என்று எப்படி அவர்கள் எதிர்பார்க்கலாம்?

ஒரு முன்னாள் நீதிபதி பேசியுள்ளார். ‘’பிரசாந்த் பூசனை கடுமையாக தண்டிக்க வேண்டும்.இல்லையென்றால், நீதிமன்றத்திற்கு யாரும் பயப்படமாட்டார்கள்’’ நீதிமன்றத்திற்கு மக்கள் பயப்பட வேண்டும் என்ற கருத்தே பிழையானது. நீதிமன்றத்தை நினைக்கையில் மக்கள் பாதுகாப்பாக உணர வேண்டுமேயன்றி, பயமாக உணரலாகாது!

ஆனால், நடைமுறையில் தங்கள் தீர்ப்புகளின் மூலம் உச்ச நீதிமன்றம் மக்களை அச்சப்படுத்திக் கொண்டே இருக்கிறது. அதற்கு சிறந்த உதராணம் வேண்டும் என்றால் ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் இந்த உச்ச மன்றம் தானே மூடப்பட்ட ஆலையை 100 கோடி அபராதம் விதித்து திறந்து கொள்ளலாம் என 2011 ல் தீர்ப்பளித்தது! 

பல்லாயிரக்கணக்கான மக்களின் உடல் நலனுக்கு பெரும் கேடு செய்யும் ஒரு ஆலையை அபராதப் பணம்கட்டி திறந்து கொள்ளலாம் என்ற தீர்ப்பை தொடர்ந்து தானே மீண்டும் மக்கள் பாதிப்புக்கு உள்ளானதும், போராட்டம் இடையறாது நடந்து 13 உயிர்கள் பலியானதும்!

ஊரடங்கு நேரத்தில் மக்களின் கடும் எதிர்ப்பையும் மீறி டாஸ்மாக் சாராயக் கடைகளை திறக்கும் தைரியத்தை தமிழக அரசுக்கு தந்தது எந்த நீதிமன்றம்? தண்டனையைக் காட்டி தங்கள் மரியாதையை தக்க வைத்துக் கொள்ள வேண்டிய பரிதாப நிலைக்கு உச்ச நீதிமன்றத்தை ஆளாக்கியது யார்?

பிரசாந்த் பூசனை தண்டிக்க முன்றால், இன்னும் ஆயிரக்கணக்கான பிரசாந்த் பூசன்கள் தோன்ற அது வழிவகுக்கும் என்பதால் தானே, ’மன்னிப்பு கேள் ’என்று அவகாசம் தந்து கெஞ்சுகிறீர்கள்..!

பிரசாந்த் பூசன் தெளிவுபடுத்திவிட்டார்.

# நான் வைத்த விமர்சனத்தை நீதித்துறை சிறப்பாக செயல்படுவதற்கான வாய்ப்பாக பார்க்க வேண்டும்.

# நான் கடமையைச் செய்தேன்.அதனால்,கருணையை கோரவில்லை!

# மன்னிப்பு கேட்க அவகாசம் தருவது நேரத்தை வீணடிப்பது ஆகும்! ஆகவே, தண்டனை தாருங்கள் மகிழ்ச்சியுடன் ஏற்கிறேன்.

அப்போதும் நீதிபதி சொல்கிறார்; உங்கள் கருத்தை மறுபரிசீலனை செய்யுங்கள் பிரசாந்த் பூசன்’’ பிரசாந்த் பூசன் கூறுகிறார்; நான் கூறிய குற்றசாட்டுகள் தொடர்பாக நீதிபதிகள் தங்களை மறுபரிசீலனை செய்து கொள்வது தான் சரியாக இருக்கும்!

சபாஷ்,உண்மைக்கான் உறுதிப்பாடே இது! என்ன முடிவு என தெரிய நாடே காத்திருக்கிறது. நீதிபதிகள் தங்களை நேர்படுத்திக் கொண்டால் நாடே அதற்கு நன்றிகாட்டும்!