அம்பதி ராயுடு , விஜய் ஷங்கர் அசத்தல்: 5வது போட்டியில் நியுசியை தெறிக்க விட்ட இந்தியா!

இந்தியா மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கு இடையேயான ஐந்தாம் ஒரு நாள் போட்டியில் இந்திய அணி 35 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை வென்றுள்ளது.


இந்திய மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கு இடையேயான கடைசி ஒரு நாள் போட்டி இன்று காலை தொடங்கியது. டாஸ் வென்று பேட்டிங் செய்த இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் மற்றும் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். 

ஒரு கட்டத்தில் இந்திய அணி 18 ரன்களுக்கு நான்கு விக்கெட்களை இழந்து திணறியது. பின்னர் களமிறங்கிய தமிழக வீரர் விஜய் ஷங்கர் மற்றும் அம்பதி ராயுடு பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். சிறப்பாக விளையாடி இந்திய அணியை சறிவிலிருந்து மீட்ட விஜய் ஷங்கர் 45 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். 

பின்னர் அம்பதி ராயுடு கேதார் ஜாதவுடன் இணைந்து சிறப்பாக ஆடிய அம்பதி ராயுடு 90 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். கேதர் ஜாதவ்  34 ரன்களுக்கு அவுட் ஆனார். பின்னர் களமிறங்கிய ஹர்டிக் பாண்டியா தனது அதிரடியில் கலக்கினார். இவர் 22 பந்துகளில் 45 ரன்கள் எடுத்தார். இந்தியா அணி 49.5 ஓவர்களில் அணைத்து விக்கெட்களையும் இழந்து 252 ரன்கள் எடுத்தது. 

253 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய நியூஸிலாந்து அணியின் தொடக்கவீரர்களும் இந்திய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறினர். அந்த அணியின் நீஷம் அதிகபட்சமாக  44 ரன்களும் , வில்லியம்சன் 39 ரன்களும் எடுத்தனர். 

நியூஸிலாந்து அணி 44.1 ஓவர்களில் அணைத்து விக்கெட்களையும் இழந்து 217 ரன்களை மட்டுமே எடுத்தது. இதனால் இந்திய அணி 35 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது . 

இதனால் 5 போட்டிகள் கொண்ட தொடரை இந்திய அணி 4-1 என்ற விகிதத்தில் வென்றுள்ளது. இந்திய அணியின் சார்பாக சஹால் 3 விக்கெட்களை வீழ்த்தினார். சிறப்பாக விளையாடிய அம்பதி ராயுடு ஆட்ட நாயகனாகவும் ஷமி தொடர் நாயகனாகவும் தேர்வு செய்யபட்டார்.