மாஸ் காட்டி செம டஃப் கொடுத்த ஆப்கன்! கடைசியில் மானம் காத்த முகமது ஷமி! இல்லை என்றால்..?

இந்தியாவுக்கும் ஆப்கானிஸ்தானுக்கும் இடையே நடந்த உலகக்கோப்பை ஆட்டத்தில் இந்திய அணி போராடி 11 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.


நேற்று நடந்த உலகக்கோப்பை ஆட்டத்தில் இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணியினர் இங்கிலாந்து நாட்டிலுள்ள சவுத்தாம்டன் நகரில் மோதினர். டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி முதலில் பேட் செய்ய தீர்மானித்தார்.

தொடக்கத்திலிருந்தே ஆப்கானிஸ்தான் பந்துவீச்சாளர்கள் இந்திய பேட்ஸ்மேன்களுக்கு நெருக்கடி அளித்து வந்தனர். முஜிபுர் ரஹ்மான் பந்தில் ரோகித் சர்மா 1 ரண்ணில் கிளீன் போல்டானார். பின்னர் கே.எல்.ராகுல் மற்றும் விராட் கோலி அணியை சரிவிலிருந்து ஓரளவிற்கு மீட்டனர். கேஎல் ராகுல் 30 ரன்களிலும், விராத் கோலி 67 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.

ஆப்கானிஸ்தானின் சுழற்ப்பந்து வீச்சாளர்களான முகமது நபி, ரஷித் கான், முஜிபுர் ரஹ்மான், ரஹ்மத் ஷா ஆகியோர் திறம்பட பந்து வீசியதால் இந்திய அணி தடுமாறினர். அவர்கள் மொத்தமாக வீசிய 34 ஓவர்களில் இந்திய அணி யினரால் 119 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.

கேதார் ஜாதவ் 52 ரன்களும், மகேந்திர சிங் தோனி 28 ரண்களும் குவித்தனர். இருப்பினும் இருவரும் மந்தமாக விளையாடினர். பின்னர் வந்த ஹர்திக் பாண்டியாவும் சொதப்ப நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் இந்திய அணியினர் 8 விக்கெட் இழப்பிற்கு 224 ரன்கள் குவித்தனர்.

225 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடிய ஆப்கானிஸ்தான் அணியினர் தொடக்கத்திலிருந்தே சிரமப்பட்டனர். இந்திய அணியின் பந்துவீச்சாளர்கள் துரிதமாக பந்து வீசி ஆப்கானிஸ்தான் பேட்ஸ்மேன்களுக்கு எளிதில் ரன்களை விட்டுக் கொடுக்கவில்லை. பேட்டிங் மற்றும் பவுலிங்குக்கு இடையே மல்யுத்தமே நடந்து கொண்டிருந்தது.

ஆப்கானிஸ்தான் அணியின் கேப்டன் குல்பதின் நைப் 29 ரன்கள் எடுத்தார். பிற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தாலும் மறுபக்கம் நட்சத்திர வீரரான முகமது நபி நிலைத்து நின்று ஆடிக்கொண்டிருந்தார். ஆட்டத்தை கடைசி கட்டம் வரை எடுத்து சென்றார்.

49-வது ஓவரில் வீசிய பும்ரா 5 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுக்க கடைசி ஓவரில் 16 ரன்கள் தேவைப்பட்டன. முதல் பந்தை பவுண்டரிக்கு விரட்டிய முகமது நபி, மூன்றாவது பந்தில் அவுட்டானார். அடுத்த இரு பந்துகளிலும் முகமது சமி விக்கெட் எடுக்க அவருக்கு ஹாட்ரிகாக அமைந்தது. இறுதியில் 11 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி போராடி வெற்றி பெற்றது. 

வெற்றியின் மூலம் இந்திய அணி புள்ளி பட்டியலில் 3-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது