இந்தியா-இலங்கை அணிகளுக்கிடையேயான 2-வது டி20 போட்டி! பலம் வாய்ந்த இந்தியாவை சமாளிக்குமா இலங்கை?

இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான 2-வது டி20 போட்டி இன்று இந்தூரில் நடைபெற உள்ளது.


இலங்கை அணி மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாட இந்தியாவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற முதலாவது டி20 போட்டி மழை காரணமாக கைவிடப்பட்டது. ஆடுகளத்தில் இருந்த ஈரப்பதத்தை சரி செய்வதற்காக மைதான ஊழியர்கள் ஹேர் ட்ரையர் மற்றும் அயன் பாக்ஸ் பயன்படுத்திய சம்பவத்தை ஏற்கனவே நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.

இந்நிலையில் இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான 2-வது டி20 கிரிக்கெட் போட்டி இன்று இந்தூரில் நடைபெற உள்ளது. இந்த தொடரில் இந்திய அணியின் துணை கேப்டன் ரோகித் சர்மாவுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. ஆகையால் அவருக்கு பதிலாக ஷிகர் தவான் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். இவர் லோகேஷ் ராகுலுடன் தொடக்க ஆட்டக்காரராக களம் இறங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் முதல் போட்டி மழை காரணமாக கைவிடப்பட்டதால் மீதமுள்ள இரண்டு போட்டிகளிலுமே வெற்றி பெறும் அணி தான் கோப்பையை கைப்பற்ற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் இரண்டு அணிகளுமே இந்த போட்டியில் வெற்றி பெற மும்முரம் காட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.