கர்நாடகா தங்கத் திருப்பதியை தரிசனம் செய்தீர்களா? பாவங்களை தீர்த்துவைக்கும் திருத்தலம்!

கர்நாடக மாநிலம், கோலார் தங்க வயலுக்கு 15 கி.மீ. தொலைவில் உள்ளது பேத்தமங்களா ஏரி, அங்கிருந்து முல்பாகல் செல்லும் சாலையில் 3 கி.மீ. தூரம் சென்றால், குட்டஹல்லி என்ற எழிலார்ந்த - மரங்கள் அடர்ந்த கிராமம்.


இங்குள்ள சிறு குன்றில் கோயில் கொண்டிருக்கிறார் வெங்கடாசலப் பெருமாள். இந்தத் தலத்துக்குப் பெயர், ‘பங்காரு திருப்பதி!’ பங்காரு என்ற கன்னட சொல்லுக்குத் தமிழில் ‘தங்கம்’ என்று பொருள். அருகாமைப் பெரிய நகரான கோலார் தங்க வயலில் பூமிக்கடியில் சுரங்கம் தோண்டி தங்கம் எடுப்பதால், அதையொட்டி இந்தத் தலத்துக்கு ‘தங்கத் திருப்பதி’ என்று பெயர் சூட்டப்பட்டதாகக் கூறுகிறார்கள்!

அமைதியான சிற்றூர். பூஜை சாமான்கள், புஷ்பம் விற்கும் கடைகள் _ அவற்றைத் தாண்டிப் படியேறிப் போனால் கோயில் தீர்த்தக்குளம். குளத்தை ஒட்டிக் காணப்படும் கோபுரம் வழியாக நுழைந்து படிகளில் ஏறிப் போகும்போது, குன்றின் உச்சியில் வெங்கடேசப் பெருமாளின் சன்னிதியும் அதற்கு முன்னால், பிரம்மாண்ட கருடாழ்வார் சிறகடித்துப் பறக்கும் காட்சியும் மனசைத் தொடுகிறது!

திருப்பதி வெங்கடாசலபதியை நினைவூட்டும் விதமாக குன்றின் மீது வேங்கடவன் குடிகொண்டு பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். சின்ன மூர்த்தி. சுவாமிக்கு முன்னால் சுவரில் ஒரு ஜன்னல். இதிலுள்ள இடைவெளி வழியாகத்தான் பெருமாளைப் பக்தர்கள் தரிசிக்க முடியும்! பக்கவாட்டின் வாசல் வழியாக அர்ச்சகர் உள்ளே போய், சுவாமிக்கு கற்பூர ஆரத்தி காட்டுகிறார்; அர்ச்சனை, அபிஷேகம், பூஜைகளைச் செய்கிறார். பின் அதே பக்கவாட்டு வாசல் வழியாக வெளியே வந்து தீபம், தீர்த்தம், துளசி பிரசாதம் ஆகியவற்றைப் பக்தர்களுக்கு வழங்குகிறார்; சடாரி சார்த்துகிறார்!

வெங்கடேசப் பெருமாள் சிறிய உருவில், பொலிவுடன் ஜொலிக்கிறார். சுவாமி தரிசனம் முடிந்து சன்னிதியை வலம் வந்தபோது, அத்தனை உயரத்திலிருந்து, தாங்கள் வந்த வழியில் இருந்த கோபுரத்தைப் பார்த்தபோது பிரமிப்பு பக்தர்களைக் கவ்வுகிறது. கோபுரத்தின் இரு புறமும் நெடிதுயர்ந்த பச்சைப் பசேல் மரங்கள்! ஒரு காட்டின் நடுவில் இருப்பதைப் போலத் தோற்றம் கொடுத்துக் காண்போரைப் பரவசத்தில் ஆழ்த்துகிறது..

அங்கிருந்து கிளம்பி படிக்கட்டுகளில் இறங்கி, பக்கத்தில் உள்ள வேறு ஒரு குன்றின் படிக்கட்டுகளில் ஏறிப் போனால் அங்கிருக்கும் அலர்மேல் மங்கைத் தாயாரைத் தரிசிக்கலாம்! திருவேங்கடவனை ஜன்னலின் துவாரம் வழியாகத் தரிசிப்பதைப் போல அல்ல; சன்னிதிக்கு முன் நின்று தாராளமாக அம்பிகையைத் தரிசிக்கலாம்!

இந்தத் திருத்தலம், 108 வைணவத் திருப்பதிகளுள் ஒன்று. ஆந்திர மாநிலத்தில் உள்ள திருப்பதியின் திருமலையில் உள்ளவரேதான் இங்கு பக்தர்களை ஆட்கொள்கிறார். பிருகு முனிவர் இந்தப் பெருமாளைத் தபஸ் செய்து, மோட்சம் பெற்றதாக புராணம் கூறுகிறது. இங்கு ஸ்ராவண மாதத்தில் திருவிழா, தெப்போற்சவம் என்று அமர்க்களமாக நடக்கும்! பங்காரு திருப்பதியின் வெங்கடாசலப் பெருமானை வழிபட்டால், பக்தர்கள் மனக்குறை நீங்கும். கூடவே, உயரிய பல செல்வங்கள் தேடி வரும்! பிருகு மகரிஷிக்கு மோட்சம் அளித்ததைப் போல, இவரைத் துதிப்போர்க்கு, பாவங்கள் நீங்கி, மோட்சம் கிடைப்பது உறுதி!’’

சப்த ரிஷிகளில் ஒருவரான பிருகு முனிவர்தான் உலகில் முதன் முதலில் ஜோதிடக் கலையைக் கண்டறிந்து எழுத்தில் வடித்தவர். ஜோதிடக் கலையின் உன்னதமான நூலான ‘பிருகு சம்ஹிதை’யை இயற்றியவரும் இவரே! இவர் பிரம்மாவின் புத்திரர்; தந்தைக்கு அவருடைய படைப்புத் தொழிலில் உதவியாக இருந்தவர் என்று புகழப்படுபவர்; தட்சனின் மகள் கியாதியை மணந்தவர். அசுரர்களின் குருவான சுக்கிராச்சாரியார், பிருகு மகரிஷியின் மகன் ஆவார்!