விழுப்புரத்தில் பிரமாண்டமான அ.தி.மு.க. தேர்தல் மாநாடு... அமித்ஷா வருகை

அ.தி.மு.க. சார்பில் பிரமாண்டமாக மாநில மாநாடு வருகிற 28-ம் தேதி நடத்த ஏற்பாடுகள் நடந்து வருகிறது. விழுப்புரம் அருகே விக்கிரவாண்டி வி.சாலை பகுதியில் இதற்காக 100 ஏக்கர் பரப்பளவில் மைதானம் தயார்படுத்தப்படுகிறது. இதற்கான பூமி பூஜை போடப்பட்டு பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது.


அ.தி.மு.க. கூட்டணியில் பா.ஜனதா, பா.ம.க., தே.மு.தி.க., த.மா.கா. ஆகிய கட்சிகள் இடம் பெறுவது உறுதியாகி விட்டது. ஆகவே, இந்த மாநாட்டில் லட்சக்கணக்கில் தொண்டர்களை திரட்டுவதற்காக அ.தி.மு.க.வினர் ஏற்பாடு செய்து வருகிறார்கள். தேர்தலையொட்டி நடத்தப்படும் இந்த மாநாடு மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தும் வகையில் அமைய வேண்டும் என்று முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதல்- அமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும் கட்சியினருக்கு உத்தரவிட்டுள்ளார்கள்.

மத்திய மந்திரி அமித்ஷா வருகிற 28-ந்தேதி தமிழகம் வருகிறார். ஊட்டி ராணுவ கல்லூரியில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். அதைத் தொடர்ந்து தேர்தல் பிரசார கூட்டங்களிலும் கலந்து கொள்ளும் வகையில் அவரது பயணத் திட்டம் வகுக்கப்படுகிறது. விழுப்புரத்தில் நடைபெறும் அ.தி.மு.க. மாநாட்டிலும் அவர் பங்கேற்கிறார்.

அமித்ஷா வருகை உறுதியாகி இருக்கும் நிலையில் கூட்டணி கட்சி தலைவர்கள் அனைவரையும் பங்கேற்க வைத்து தேர்தல் பிரசார கூட்டமாக நடத்தவும் திட்டமிட்டுள்ளனர். எனவே விழுப்புரம் மாநாடு அனைத்து தலைவர்களும் பங்கேற்கும் பிரமாண்டமான அ.தி.மு.க. கூட்டணியின் பிரசார மாநாடாக இருக்கும் என்று தெரியவந்துள்ளது.