கொரோனா வார்டில் நர்ஸாக பணியாற்றும் தாய் - வாசலில் நின்று கதறிய மகள்! நெஞ்சை உலுக்கும் பாசப்போராட்டம்!

கொரோனா வார்டில் செவிலியராக பணிபுரிந்து வரும் பெண்ணுக்கும் அவரது 3 வயது குழந்தைக்கும் இடையே மருத்துவமனை முன்பு பாசப்பிணைப்பை வெளிப்படுத்தும் விதமாக நிகழ்ந்த சம்பவம் மனதை நெகிழ வைத்துள்ளது.


கர்நாடக மாநிலத்தில் பெலகாவி மாவட்டத்தில் உள்ள பால்கா என்ற கிராமத்தை சேர்ந்தவர் சுனந்தா. 31 வயதாகும் இந்த பெண்மணிக்கு திருமணம் நடைபெற்று 3 வயதில் ஐஸ்வர்யா என்ற மகள் உள்ளார். பெலகாவியிலுள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த நான்கு வருடங்களாக செவிலியராக பணிபுரிந்து வரும் சுனந்தா தற்போது தனியார் மருத்துவமனைகளில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா சிறப்பு வார்டில் பணிபுரிந்து வருகிறார். 

இவர் கடந்த 15 நாட்களாக வீட்டிற்கு செல்லாமல் மருத்துவமனையிலேயே தங்கி வேலை பார்த்து வருகிறார். இதனால் அவரது மூன்று வயது மகள் ஐஸ்வர்யா தனது அம்மாவை பார்க்க முடியாமல் ஏங்கி, தனது தந்தையிடம் அம்மாவை நான் பார்க்க வேண்டும் என்று கதறி அழுது வந்துள்ளார். இதனால் வேறு வழியின்றி ஐஸ்வர்யாவை மருத்துவமனைக்கு அவரது தந்தை அழைத்து வந்துள்ளார். இதுகுறித்து அவர் சுனந்தா விற்கும் தகவல் தெரிவித்திருந்தார்.

சுனந்தா கொரோனோ சிறப்பு வார்டில் வேலை செய்து வருவதால் , தூரமாக நின்று தனது மகள் ஐஸ்வர்யாவை பார்த்துள்ளார். தனது அம்மாவைப் பார்த்தவுடன் மகள் ஐஸ்வர்யா "அம்மா வா போகலாம்" என்று கதறி அழுதுள்ளார். தனது மகள் கதறி அழுவதைப் பார்த்து அவளை தூக்கி கொஞ்ச முடியவில்லையே என்று அவரது தாயும் கதறி அழுதார். 

அம்மா மகளின் இந்த பாசப் போராட்டம் அப்பகுதியில் இருந்தவர்களின் மனதை நெகிழ வைத்தது. இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.