பழுக்காத பாகற்காய், மொறுமொறு வெண்டைக்காய்! சமையலுக்கு சூப்பர் டிப்ஸ்!

இன்றைய காலத்தில் பெண்களுக்கு பல வேலைகள் இருக்கிறது. அதனால் பலருக்கு சமைக்கும் திறன் ஓரளவுக்கு தான் உள்ளது.


இந்த துரிதமான வாழ்க்கையில் உணவிற்கு நாம் அதிகமாக முக்கியத்துவம் கொடுப்பதில்லை. மேலும் நாம் அவசரமாக சமைக்கும் உணவுகள் ருசியாகவும், சத்துக்கள் நிறைந்ததாகவும் இருக்கிறதா? என்றுக் கேட்டால் ஒரு கேள்விக்குறியாகத்தான் இருக்கும்.

அந்த வகையில் இன்று நாம் அசத்தலான சமையல் செய்வதற்கான சில டிப்ஸ்களை பற்றி பார்ப்போம். நீங்கள் சப்பாத்தியோ, பூரியோ செய்யும்போது கோதுமை மாவில் சாதம் வடித்த நீர் சேர்த்து மாவை பிசைந்து செய்தால், மிகவும் ருசியாக இருக்கும்.

வறுத்து அரைத்து செய்யும் குழம்புக்கு 2 ஸ்பூன் எள்ளை வெறும் வாணலியில் வறுத்துப் போடலாம். குழம்பு வாசனை ஊரையே கூட்டும். சேமியா பாயசம் செய்யும்போது, அவை குழைந்து போய்விட்டால் இரண்டு சொட்டு எலுமிச்சை சாறு அதில் சேர்த்தால் சேமியா தனித்தனியாகிவிடும். 

ஜவ்வரிசியை வறுத்து பொடி செய்து வைத்துக்கொண்டு அடை, வடை, தோசை செய்யும்போது சிறிது ஜவ்வரிசி மாவு சேர்த்து செய்தால் மொறுமொறுவென்றிருக்கும். காய்ந்த மிளகாயை வறுக்கும்போது நெடி வரும். அவை வராமல் இருப்பதற்கு சிறிது உப்பு போட்டு வறுக்கலாம்.

கேழ்வரகை ஊற வைத்து, பிறகு அவற்றை அரைத்துப் பால் எடுத்து, கோதுமை அல்வா போன்று செய்யலாம். கோதுமை அல்வாவைவிட ருசியாகவும், மணமாகவும் இருக்கும். பாகற்காய் வாங்கி வந்ததுமே அதன் இருமுனைகளை நறுக்கி காற்று புகாத பையில் போட்டு பிரிட்ஜில் வைக்கவும். இப்படிச் செய்தால் பாகற்காய் சீக்கிரம் பழுக்காது.

வெண்டைக்காயை பொரியல் செய்யும்போது புளித்த மோரைச் சிறிதளவு சேர்த்தால் வெண்டைக்காய் மொறுமொறுவென்று இருக்கும். சாதம் வடிக்கும்போது சற்று குழைந்து விட்டது போன்று தெரிந்தால் உடனே சிறிதளவு நல்லெண்ணெய்யைச் சேர்த்தால் மேலும் குழையாமல் இருக்கும்.

உருளைக்கிழங்கு வேக வைத்த தண்ணீரில் பாத்திரங்களை கழுவினால் பாத்திரங்கள் பளபளப்பாக இருக்கும். நெய் காய்ச்சும்போது முருங்கை இலையோ வெந்தய இலையோ சேர்ப்போம். அவற்றை அன்று சப்பாத்திக்கு மாவு பிசியும்போது சேர்த்துப் பிசைந்து சப்பாத்தி செய்யலாம். சுவையாகவும் மணமாகவும் இருக்கும்.

காய்கறிகளை வேகவைக்கும்போது அதிக தண்ணீர் வைத்து வேக வைக்கக்கூடாது. ஏனென்றால் காய்கறிகளில் உள்ள வைட்டமின் சத்துகள் குறைந்துவிடும். மேலும் அதில் உள்ள மனமும் போய்விடும்.

வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு, ஒரு வெங்காயம், தக்காளி, காய்ந்த மிளகாயை பொடியாக நறுக்கி வதக்கவும். பின்னர் அதை மிக்ஸியில் போட்டு, சிறிது மஞ்சள்தூள், உப்பு சேர்த்து அரைத்து எடுத்தால் உடனடி சட்னி தயார். இதை இட்லி, தோசை, அடை, சாதம் என எதனுடன் வேண்டுமானாலும் தொட்டுக்கொள்ளலாம்.

ரவா, மைதா உள்ள டப்பாவில் பூச்சி, புழுக்கள் வராமல் இருப்பதற்கு கொஞ்சம் வசம்பை தட்டிப் போட்டால் பூச்சி, புழுக்கள் எதுவும் வராது. அதிக கனமுள்ள கல்லை தோசைக்கும், கனமில்லாத மெலிதான கல்லை சப்பாத்திக்கும் உபயோகிக்க வேண்டும். பொரியல் செய்யும்போது உப்பு, காரம் அதிகமாகிவிட்டால் உலர்ந்த பிரெட் அல்லது ரஸ்கைப் பொடித்துத் தூவினால் அவை சரியாகிவிடும்.

வெங்காயம் சேர்த்த தயிர் பச்சடி சாப்பிட்டால், பிறரிடம் நாம் பேசும்போது நம் வாயிலிருந்து ஒருவிதமான் வாடை வரும். இதைத் தடுக்க, பச்சடி செய்யும்போது சிறிதளவு சீரகப்பொடியை கலந்து கொள்ளலாம்.