வசந்த நவராத்திரி 25.3.2020 முதல் ஆரம்பமாகிறது. வசந்த நவராத்திரியில் அம்பாளை ஏன் வணங்க வேண்டும்?

காஞ்சி மகா ஸ்வாமிகள் தன்னை நமஸ்கரிக்கும் பக்தர்களுக்கெல்லாம் அடிக்கடி சொல்லும் வார்த்தை: ‘’என்னை நமஸ்காரம் பண்றதைவிட, அம்பாள் அங்கே இருக்கா! அங்கே போய் காமாக்ஷியை நமஸ்காரம் பண்ணிக்கோ. க்ஷேமமா இருப்பே. எனக்கு முக்கியம் அம்பாள்’’ என்பார்.


அந்த அம்பாளுக்கு உகந்த நவராத்திரி திருநாள் நெருங்குகிறது. இந்தத் தருணத்தில் மகா ஸ்வாமிகள் நமக்குச் சொல்லிச் சென்ற அறிவுரைகளை, அம்பாள் தத்துவங்களை, நவராத்திரியின் சிறப்புகளை அறிவது விசேஷம் இல்லையா? ஆகவே, நல்லன யாவும் தரும் நவராத்திரி புண்ணிய தினங்களில் அம்பாளின் அருட்கடாட்சத்தைக் குறையின்றிப் பெற உதவும் மகா ஸ்வாமிகளின் அருள் வாக்கை அறிந்து மகிழ்வோம். 

நவராத்திரியில் பராசக்தியான துர்காபரமேஸ்வரியையும், மகாலட்சுமியையும், சரஸ்வதிதேவியையும் பூஜிக்கிறோம். மூன்று மூர்த்திகளாகச் சொன்னாலும் முப்பது முக்கோடி மூர்த்திகளாகச் சொன்னாலும் அத்தனையாகவும் இருப்பது ஒரே பராசக்திதான். சிருஷ்டி செய்பவளும் அவளே, பரிபாலனம் செய்வதும் அவளே, சம்ஹாரம் செய்பவளும் அவளே என்று விளக்குகிறது, லலிதா சகஸ்ர நாமம்.

ஒரே பராசக்தியே வெவ்வேறு வேஷங்களைப் போட்டுக்கொண்டு வெவ்வேறு காரியங்களைச் செய்கிறது. துர்கையாக இருக்கும்போது வீரம், சக்தி எல்லாம் தருகிறது; மகாலட்சுமியாகி சம்பத்துக்களையும், சரஸ்வதியாகி ஞானச் செல்வத்தையும் அளிக்கிறது. அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம் என்று ஒளவைப் பிராட்டி சொல்லியிருக்கிறாள். தைத்திரீய உபநிஷதமும் ‘மாதாவை தெய்வமாகக் கொள்வாயாக; பிதாவை தெய்வமாகக் கொள்வாயாக’ என்றே அறிவுறுத்தும். இங்கேயும் முதலில் அம்மாதான். இப்படி தாயாரை தெய்வமாக நினைக்க முடியுமானால் தெய்வத்தைத் தாயாராக நினைக்க முடியும். அம்மாவாக பாவித்து ஆதிசக்தியை வழிபடும்போடு நாம் குழந்தையாகி விடுகிறோம். அதனால், தானாகவே காமக் குரோதாதிகள் நம்மைவிட்டு விலகிவிடும்.

எல்லாவிதமான இகபர நலன்களும் வழங்கும் அம்பிகை விசேஷமாக வாக்குவன்மையும் அருள்கிறாள். ஏனெனில் அவளே அக்ஷர ரூபமானவள். லோகம் முழுமைக்கும் காலம் முழுவதற்கும் தாயாக இருந்து அனுக்கிரகம் செய்கிற பராசக்தியின் கடாக்ஷம் எப்படிப்பட்டவனையும் கைதூக்கி ரட்சிக்கும். அந்த அம்பிகையை அன்போடு நாம் தியானம் செய்யவேண்டும். அக்ஷரமயமானவளை வாக்கால் துதிக்க வேண்டும்.

அம்மாவின் சரீரவாகு, மனப்பான்மை எல்லாம் குழந்தைக்கும் வருவதைப்போன்று, அம்பாளே நம் சரீரம், மனஸ் எல்லாமுமாய் இருக்கிறாள் என்ற உணர்வோடு அம்பாளை உபாசித்துக் கொண்டே இருந்தால், நாமும் அன்பே உருவாகி லோகம் முழுமைக்கும் ஆனந்தத்தைக் கொடுக்கலாம். ஆமாம், அம்பாளை வழிபட நம் அகமும் புறமும் அவளின் திருவருளால் நிறையும். உலகமும் அன்பால் நிரம்பும். வேறென்ன வேண்டும்?

வரும் வசந்த நவராத்திரி 25.3.20 முதல் 03.04.20 வரை நடைப்பெறும்.