காயத்ரியை விட சிறந்த மந்திரமில்லை; தாயை விட சிறந்த தெய்வமில்லை; ஏகாதசியை விட சிறந்த விரதமில்லை என்கிறது புராணம்..
ஏகாதசியை விட சிறந்த விரதம் வேறு எதுவும் இல்லை! ஏன் அப்படி?
மனிதர்களாக பிறந்த நாம் ,அடுத்த நிலைக்கு செல்ல வேண்டும் என்றால் முக்தி கிடைக்க வேண்டும். அந்த முக்தி நிலை அடைவது என்பது அத்தனை எளிதான விஷயமா... எதை செய்தால் முக்தி நிலை அடையலாம்... எதைப் பின்பற்றினால் மேன்மை அடையலாம் என்று நாராயணீயத்தில் ஒரு ஸ்லோகத்தின் மூலம் சொல்லப்பட்டுள்ளது.
கங்கையில் குளித்தல், பகவத் கீதையை படித்தல், காயத்ரி மந்திரத்தை உச்சரித்தல், துளசி கொண்டு வீட்டில் பூஜை செய்தல், கோபி சந்தனம் அணிதல், சாளக்கிராம பூஜை செய்தல், ஏகாதசி விரதமிருத்தல், பகவான் நாமாவை உச்சரித்தல். இவைகளை கடைபிடித்தால் நிச்சயம் முக்தி என்கிறது நாரயணீயம். இந்த முறைகளில் நம் அனைவரும் எளிதாக பின்பற்றக்கூடிய ஒன்று ஏகாதசி விரதம்.
வருடம் முழுவதும் ஏகாதசி விரதத்தை கடைபிடிக்க இயலாதவர்கள், மார்கழி மாதம் வரும் வைகுண்ட ஏகாதசியில் மட்டுமாவது விரதம் இருப்பது சிறப்பான பலனை தரும். மூன்றுகோடி ஏகாதசிகளில் விரதமிருந்த பலனை தர கூடியது என்பதால் இது ‘முக்கோடி ஏகாதசி’ எனவும் அழைக்கப்படுகிறது.
ஏகாதசி விரதம் இருப்பவர்கள் முதல்நாளான தசமி அன்று ஒருபொழுது உணவு உண்ணவேண்டும். ஏகாதசி அன்று அதிகாலையிலேயே கண்விழித்து குளித்து விட்டு, பூஜை செய்து விரதத்தை மேற்கொள்ள வேண்டும். ஏகாதசி திதி முழுவதும் முடிந்தவரை பூரண உபவாசம் இருக்க வேண்டும். குளிர்ந்த நீரை குடிக்கலாம்.
ஏழு முறை துளசி இலையை சாப்பிடலாம். ஏகாதசி குளிர் மாதமான மார்கழியில் வருவதனால், உடலுக்கு வெப்பம் கிடைக்க துளசியை சாப்பிட வேண்டும். முதியோர்கள் உடல் நலிவுற்றவர்கள், பூஜையில் வைத்து நிவேதனம் செய்யப்பட்ட பழங்களை சாப்பிடலாம்.
அன்றைய தினம் இரவு முழுவதும் தூங்காமல் விழித்திருந்து புராண நூல்களை படிப்பதும், விஷ்ணு சகஸ்ர நாமம், விஷ்ணு பாடல்கள் மற்றும் ரங்கநாதர் ஸ்துதி முதலியவற்றை ஓதுவதுமாக இருக்க வேண்டும். ஏகாதசி அன்று விஷ்ணு ஆலயங்களில் நடைபெறும் சிறப்பு பூஜைகளில் கலந்து கொண்டு இறைவனை வழிபடலாம்.
வைகுண்ட ஏகாதசிக்கு மறுநாளான துவாதசியன்று, காலையில் 21 வகையான கறி சமைத்து உண்ணவேண்டும். இதில் அகத்தி கீரை, நெல்லிக்காய், சுண்டை காய் இடம் பெற வேண்டியது அவசியமாகிறது. விரதத்தை முடிக்கும் போது, நீரை கூட அருந்தாமல் பூரண விரதம் இருந்தவர்கள் துளசி தீர்த்தத்தையும், மற்றவர்கள் பகவானுக்கு தானிய உணவை படைத்தும் உண்ணலாம்.
ஏகாதசிவிரதத்தை எப்படி சிரத்தையுடன் கடைப்பிடிக்கிறோமோ, அது போன்றே விரதத்தை முடிப்பதும் மிக மிக முக்கியமாகும். இல்லாவிடில் விரதம் இருந்த முழு பலனும் கிடைப்பதில்லை. உணவு சாப்பிடும் முன் அதை பெரியோர்களுக்கு வழங்க வேண்டும். அன்று பகலில் தூங்காமல் இருக்க வேண்டும். விரதம் அனுஷ்டிப்பவர்கள், கண் விழிக்கிறேன் என்று திரைப்படம் பார்ப்பதோ, கேளிக்கை விளையாட்டுக்களில் ஈடுபடுவதோ கூடாது.
அன்று இரவு முழுவதும் நாராயணனை மனதில் இருத்தி அவர் நாமாக்களையே வாய் நிறைய சொல்ல வேண்டும் வெங்காயம், பூண்டு, காரட், தக்காளி, கத்திரிக்காய், காலி ப்ளவர், பட்டாணி, பீன்ஸ், வெண்டைக்காய், முருங்கை, வாழைப் பூ, தானியங்கள், தானியங்களால் ஆக்கப்பட்ட மாவு வகைகள் மற்றும் எண்ணெய்கள், தேன் முதலிய பொருட்களை தவிர்த்தல் நலம்.
ஏகாதசி விரதம் மேற்கொள்வதன் மூலமாக தீராத நோய்கள் அகலும், சகல செல்வங்களும் உண்டாகும். முக்திக்கான வழியை அடைவீர்கள் என்பது நம்பிக்கை!