CRPF வீரர்களின் குடும்பத்துக்கு ரூ.50 லட்சம்! அள்ளிக் கொடுத்த சத்குரு!

ஈஷா அறக்கட்டளை சார்பில் சி.ஆர்.பி.எஃப் வீரர்களின் குடும்பத்துக்கு ரூ.50 லட்சம் நிதியுதவி


பயங்கரவாதிகளின் தாக்குதலில் உயிர் நீத்த சி.ஆர்.பி.எஃப் வீரர்களின் குடும்பத்துக்கு ஈஷா அறக்கட்டளை சார்பில் ரூ.50 லட்சம் நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள புல்வாமா பகுதியில் பயங்கரவாதிகள் கடந்த 14-ம் தேதி நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் 40-க்கும் மேற்பட்ட சி.ஆர்.பி.எஃப் வீரர்கள் உயிரிழந்தனர். தேசத்துக்காக உயிர் தியாகம் செய்த அவர்களின் குடும்பத்துக்கு தேவையான ஆதரவு அளிக்க வேண்டியது இந்திய குடிமக்களின் கடமை.

அதன் அடிப்படையில், உயிர் தியாகம் செய்த சி.ஆர்.பி.எஃப் வீரர்களின் குடும்ப நலனுக்காக ஈஷா அறக்கட்டளை ரூ.50 லட்சம் நிதியுதவி வழங்கி உள்ளது. இந்திய ராணுவம் மற்றும் துணை ராணுவ வீரர்களின் நலனுக்காக ஈஷா அறக்கட்டளை தொடர்ந்து செயலாற்றி வருகிறது. குறிப்பாக, பல்வேறு படை பிரிவுகளில் உள்ள வீரர் மற்றும் வீராங்கணைகளுக்கு சத்குரு அவர்களால் வடிவகைப்பட்ட சிறப்பு யோகா பயிற்சிகள் கற்றுக்கொடுக்கப்பட்டு வருகின்றன.

தேசத்தை பாதுகாக்கும் பணியில் தைரியம் மற்றும் தியாக உணர்வுடன் ஈடுபட்டு வரும் இளம் வீரர், வீராங்கணைகள் குறித்து சத்குரு கூறும்போது, “நம்முடைய அனைத்து செயல்கள் மற்றும் சாதனைகளுக்கு, தைரியமிக்க நம் ராணுவ வீரர்களின் தியாகம் மற்றும் சேவையே அடித்தளமாக உள்ளது” என்று தெரிவித்துள்ளார்.