வீட்டுக்குள் நம்பி நண்பனை அனுமதித்த டிரைவர்! மனைவியை அபகரித்து உயிரையே பறித்த தகாத உறவு! பதற வைக்கும் வாக்குமூலம்!

நண்பனின் மனைவியை கள்ளக்காதல் மூலம் அபகரித்து , இடையூறாக இருப்பான் என கருதி திட்டம் தீட்டி தனது நண்பனை கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


விழுப்புரத்தை அடுத்த உள்ள காட்டேரி குப்பத்தை சேர்ந்தவர் கந்தசாமி. இவர் அரசு உதவி பெறும் பள்ளி ஒன்றில் பேருந்து ஓட்டுநராக பணிபுரிந்து வந்தார். இவரது மனைவி புவனேஸ்வரி. இந்த தம்பதியினருக்கு 2 மகன்கள் உள்ளனர். இவர்கள் இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக மனைவி புவனேஸ்வரி தனது தாய் வீட்டுக்கு சென்றுவிட்டார். 

இந்நிலையில் கடந்த மார்ச் மாதம் 14ம் தேதி காட்டேரி குப்பத்தில் இருந்து புதுச்சேரி டவுனுக்கு கந்தசாமி தனது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருக்கும் போது எதிரே வந்த இண்டிகா கார் ஒன்று அவர் மீது வேகமாக மோதியதில் பலத்த காயத்துடன் ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். எனினும் மருத்துவமனையில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 

இந்நிலையில் கந்தசாமி விபத்தில் உயிரிழந்து விட்டதாக வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில் கந்தசாமியின் தாய் தனது மகன் இறப்பதற்கு முன்னால் செல்போனில் பேசிய மரண வாக்குமூலம் என்று கூறி ஒரு ஆடியோவை போலீசாரிடம் ஒப்படைத்துள்ளார். சுமார் பத்து நிமிடம் ஓடும் அந்த ஆடியோவில் விபத்து நடப்பதற்கு ஒரு வாரத்திற்கு முன்பு தனது மனைவியின் சகோதரனும், தனது மனைவியுடன் நெருக்கமாக பழகி வரும் ஓட்டுனர் ஸ்ரீதர் என்பவரும் தன்னை தாக்கியதாகவும் தனது உயிருக்கு ஏதாவது நேர்ந்தால் அதற்கு தனது மனைவி புவனேஸ்வரி அவரது குடும்பத்தினர் மற்றும் அந்த கார் ஓட்டுநர் ஸ்ரீதர் தான் காரணம் என்பதை அவர் இந்த ஆடியோவில் தனது தாயிடம் குறிப்பிட்டிருந்தார். 

இதன் காரணமாக கந்தசாமி விபத்துக்கு காரணமான இண்டிகா கார் ஓட்டுனர் பிரவீன் குமாரை போலீசார் விசாரித்தபோது விபத்துக்கு பின்னர் பிரவீன்குமார் ஸ்ரீதரிடம் பேசியது தெரிய வந்துள்ளது. இதனை அடுத்து ஸ்ரீதரை விசாரித்த போது பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. தொண்டமாநத்தம் கிராமத்தில் வாடகை வீட்டில் வசித்து வந்த கந்தசாமி தனது நண்பரான ஸ்ரீதரை தனது வீட்டுக்கு அழைத்து வந்துள்ளார்.அப்போது விதவிதமான தின்பண்டங்கள் மற்றும் புவனேஸ்வரிக்கு பிடித்த பரிசுப் பொருட்களைக் கொடுத்து புவனேஸ்வரியை ஸ்ரீதர் கவர்ந்துள்ளான் எனவும் தெரியவந்துள்ளது. இதனால் புவனேஸ்வரிக்கும் ஸ்ரீதருக்கும் இருக்கும் இடையே கள்ளக்காதல் ஏற்பட்டுள்ளது. தினமும் ஸ்ரீதர் உடன் மணிக்கணக்கில் புவனேஸ்வரி போனில் பேசி வந்ததாகவும் தெரிய வந்துள்ளது. 

தனது மனைவியின் தவறான நடவடிக்கை கந்தசாமிக்கு தெரியவந்ததால் தனது மனைவியை அவர் கண்டித்துள்ளார். இதனால் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக கூடப்பாக்கத்தில் உள்ள தனது அம்மா வீட்டுக்கு புவனேஸ்வரி சென்று விட்டுள்ளார். அம்மா வீட்டுக்கு சென்று தனது சகோதரரிடம் புவனேஸ்வரி தனது கணவர் என்னை சந்தேகப்பட்டு அடித்து துன்புறுத்துவதாக கூறியுள்ளார். 

பின்னர் கந்தசாமி தனது மனைவியை சமாதானப்படுத்தி அழைத்து வர நினைத்து அவரது வீட்டுக்குச் சென்றபோது புவனேஸ்வரியின் சகோதரர் கந்தசாமி அடித்து விரட்டி உள்ளார் என்பது தெரியவந்துள்ளது. தனது கூட்டாளியால் தன்னுடைய வாழ்க்கை இப்படி ஆகி விட்டதே என்று மனம் வருந்திய கந்தசாமி எப்படியாவது தனது மனைவியை சமாதானப்படுத்தி வீட்டுக்கு கூட்டிக்கொண்டு வரவேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார். அதேநேரத்தில் கந்தசாமி உயிரோடு இருந்தால் தங்களது கள்ளக்காதலுக்கு இடையூறாக இருப்பான் என்று கருதி புவனேஸ்வரியும், ஸ்ரீதரும் திட்டம் தீட்டி கார் ஏற்றி கந்தசாமியை தீர்த்துக்கட்ட முடிவு செய்தனர். 

இதன்மூலம் கடந்த 14ம் தேதி மோட்டார் சைக்கிளில் கந்தசாமி சென்று கொண்டிருக்கும் போது ஸ்ரீதர் தனது நண்பரான பிரவீன்குமாரை பயன்படுத்தி இண்டிகா கார் மூலம் அவரை ஏற்றி கொலை செய்ததாக ஸ்ரீதர் போலீஸாரிடம் ஒப்புக்கொண்டுள்ளார். இதன் காரணமாக விபத்து வழக்கு கொலை வழக்காக மாற்றப்பட்டு புவனேஸ்வரி, ஸ்ரீதர், பிரவீன்குமார் ஆகியோர் போலீசாரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.