கிஷ்கிந்தா பொழுது போக்கு பூங்காவில் வெடித்துச் சிதறிய மர்ம பொருள்! இளைஞர் கால் துண்டிப்பு! 4 பேர் காயம்! சென்னை பரபரப்பு!

பிரபல புகழ்பெற்ற பொழுதுபோக்கு பூங்காவில் மர்ம பொருள் வெடித்து ஒருவரது கால் துண்டிக்கப்பட்டுள்ள சம்பவமானது சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


சென்னை புறநகரான தாம்பரத்திற்கு அருகில் "கிஷ்கிந்தா" என்ற புகழ்பெற்ற பொழுதுபோக்கு மையம் இயங்கி வருகிறது. நாள்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் குடும்பத்தினருடனும், நண்பர்களுடனும் வந்து சந்தோஷமாக துள்ளி குதித்து விளையாடி செல்வர். குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த பொழுதுபோக்கு பூங்காவாக கிஷ்கிந்தா விளங்கி வருகிறது. 

நேற்று எதிர்பாராவிதமாக விபத்து ஒன்று நடந்துள்ளது. பூங்காவிற்கு உரிய குடோனில் பழைய பொருட்களை பிரிக்கும் பணியில் சிட்டிபாபு, கண்ணபிரான், வேதநாயகம், சதீஷ், என்னும் 4 ஊழியர்கள் ஈடுபட்டு வந்துள்ளனர். அப்போது திடீரென அங்கிருந்த பொருள் ஒன்று வெடித்துச் சிதறியுள்ளது.

பழைய பொருட்களை உடைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த 4 பேருக்கும் கை, கால், கண், காது ஆகிய பகுதிகளில் பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளன. உடனடியாக அருகில் இருந்த சக ஊழியர்கள் அவர்களை தாம்பரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இதில் சிட்டிபாபுவின் உடல் கவலைக்கிடமாக இருப்பதாக தெரியவந்துள்ளது. அவரின் இடது கால் துண்டிக்கப்பட்டுள்ளது. பிறருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விபத்து குறித்து அறிந்த ஊழியர்களின் உறவினர்கள் நிர்வாகத்தினருடனும், காவல்துறையினருடனும் தீவிர வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இந்த விபத்து குறித்து சோழமங்கலம் காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கப்பட்டு வருகிறது. சம்பவமானது கிஷ்கிந்தா பூங்காவில் நேற்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனிடையே குடோனில் இருந்து வெடித்தது பழைய சிலிண்டர் என்று கூறப்படுகிறது.