பிறந்த குழந்தையை எப்படி தூக்குவீங்க? - குழந்தைக்கு பாதுகாப்பான தூக்கம் கிடைக்கிறதா? - டார்டிகோலிஸ் அப்படின்னா என்ன தெரியுமா?

பிறந்த குழந்தையை பார்த்ததுமே தூக்கி கொஞ்சவேண்டும் என்ற ஆசை அனைவருக்கும் ஏற்படுவது இயல்புதான். ஒரு மெல்லிய கண்ணாடி பாத்திரத்திற்கு இணையானது பிறந்த குழந்தை என்பதால் மிகவும் ஜாக்கிரதையாக தூக்கவேண்டியது அவசியம்.


·         பிறந்த சில மாதங்களுக்கு குழந்தையின் தலை நிற்காமல் இருக்கும். அதனால் குழந்தையை  சரியாகத் தூக்கவில்லை என்றால் சுளுக்கு ஏற்படலாம்.

·         கழுத்து சுளுக்கும்போது குழந்தைக்கு அதிகமான வலி ஏற்படும். இதற்கு சுயமருத்துவம் செய்வதாலும் அதிக வலி உண்டாகலாம்.

·         அதனால் கைகளை போதுமான அளவுக்கு அகட்டிவைத்து, குழந்தையின் கழுத்தையும், தலையையும் பிடிமானம் கொடுத்தே தூக்க வேண்டும்.

·         குழந்தையை படுக்க வைக்கும் போதும், தூக்கும்போதும் தலையையும், கழுத்துப் பகுதியையும் ஒன்றாக பிடித்துக்கொள்ள வேண்டும்.

குழந்தையின் அவயங்களை  பஞ்சு போல் மென்மையாகக் கையாள வேண்டும். முடிந்தவரை நிறையபேர் கைகளில் குழந்தையை கொடுப்பதை தடுக்கவேண்டும்.குழந்தைக்கு பாதுகாப்பான தூக்கம் கிடைக்கிறதா?

இந்த உலகத்திலேயே பாதுகாப்பான இடம் தாயின் மடி என்பார்கள். முழு நேரமும் தாய் மடியில் ஏந்தியிருக்க முடியாது என்பதால், பாதுகாப்பாக தாய்க்கு அருகே பிள்ளையை படுக்கவைப்பதுதான் ஏற்றது.

·         நன்றாக காற்று வரும் என்று காற்றாடிக்கு நேர் கீழாக குழந்தையை படுக்கவைக்கக் கூடாது. இதனால் குழந்தைக்கு மூச்சுத்திணறல் உண்டாகலாம்.

·         தொட்டில் அதிக உயரத்தில் கட்டக்கூடாது. தரையில் இருந்து ஒரு அடி உயரம் இருந்தாலே போதும்.

·         ஜன்னல் அல்லது கதவு வழியே சூரிய ஒளி அல்லது விளக்கின் ஒளி நேரடியாக குழந்தையின் மீது படக்கூடாது.

·         குழந்தையை ஒரே இடத்தில் படுக்கவைத்தால், உடல் உஷ்ணம் அடையலாம் என்பதால் அவ்வப்போது மாற்றி படுக்கவைக்க வேண்டும்.

எப்போதும் குழந்தை தூங்கும்வரையிலும் தாயின் அரவணைப்பில் இருப்பது மிகவும் நல்லது. பாதுகாப்பான தூக்கத்தை குழந்தை உணர்ந்தபின்னரே தனியே படுக்கவைக்க வேண்டும்.  டார்டிகோலிஸ் அப்படின்னா என்ன தெரியுமா?

பச்சிளம் குழந்தைகளுக்கு கழுத்து அல்லது தாடையில் பிடிப்பு அல்லது அழுத்தம் போன்ற பிரச்னையால் வலி உண்டாவதை டார்டிகோலிஸ் என்று சொல்வார்கள். இதனை நிச்சயம் குணப்படுத்த முடியும் என்பதால் பயப்படுவதற்கு அவசியம் இல்லை.

·         குழந்தைகள் வசதியாக படுக்காத நிலை, சரியாக தூக்காத காரணம், தவறி விழுதல் போன்ற காரணங்களால் இந்த பிரச்னை உண்டாகலாம்.

·         இதனால் பாதிக்கப்படும் குழந்தைக்கு தலை ஒரு பக்கமாக சாய்ந்து இருக்கும், இரண்டு கண்களும் வெவ்வேறு திசையில் பார்க்கலாம்.

·         இதுபோன்ற பிரச்னை ஏற்படும்போது சுயமருத்துவமாக சுளுக்கு எடுக்க முயற்சி செய்வது ஆபத்தாக முடியும்.

·         பிரச்னை தென்பட்டதும் உடனே மருத்துவரை அணுகி, பிரச்னையின் தீவிரத்தை அறிந்து சிகிச்சையைத் தொடங்கவேண்டும்.

இந்த டார்டிகோலிஸால் பாதிக்கப்பட்ட குழந்தைக்கு வழக்கம்போல் பால் கொடுத்துவரலாம். குணமடைந்த பிறகு மீண்டும் இந்த பிரச்னை ஏற்படுமோ என்று அச்சப்படத் தேவையில்லை.