கோயிலில் எந்த இடத்தில் மட்டும் விழுந்து வணங்க வேண்டும்? கடவுளை வணங்கும் முன்பு, யாரை வணங்க வேண்டும் தெரியுமா?

இறை வழிபாடு என்பது நமது முன்னோர்கள் வகுத்துத் தந்த வழிகாட்டுதல் ஆகும்.


ஒவ்வொருவரின் குலவழக்கம், குடும்ப வழக்கம் ஆகியவற்றின் அடிப்படையில் தெய்வங்களை தேடிச்சென்று வணங்கி வருகிறார்கள்.  நாம் தினமும் கோவிலுக்குப்போய் கடவுளை வணங்குவது தான் சிறந்தது ஆகும். பலிபீடம், கொடிமரம் ஆகியவற்றுக்கு அருகே மட்டுமே விழுந்து கும்பிட வேண்டும். பிற இடங்களில் விழுந்து வணங்குதல் கூடாது. 

திருக்கோவில் மூடி இருக்கும் போதும், திருவிழாவில் சுவாமி உலாவரும்போதும், அபிஷேகம் நடைபெறும் காலத்திலும், சுவாமிக்குத் திரையிட்டு இருக்கும் போதும், பிரகாரத்தை வலம் வருதல் கூடாது. கடவுளை வணங்கும் போது கடவுள் சந்நிதி கிழக்குத் திசை அல்லது மேற்குத் திசை நோக்கி இருந்தால் நாம் வடக்குத் திசை நோக்கி வழிபாடு செய்யலாம்.

ஒருபோதும் கிழக்கு அல்லது வடக்குத் திசைகளை நோக்கி கால் நீட்டி நமஸ்காரம் செய்யக்கூடாது. நமஸ்காரம் செய்யும் போது பெண்ணாக இருந்தால் முழங்கால் தரையில் படும்படி மண்டியிட்டு நிலத்தில் நெற்றி படுமாறு வணங்க வேண்டும். ஆண்கள் என்றால் குப்புறப்படுத்து அனைத்து புலன்களும் நிலத்தில் படுமாறு சாஷ்டாங்கமாக வனங்க வேண்டும். 

சிவன் கோவில் என்றால், கோவிலுக்குச் சென்றதும் முதலில் விநாயகப் பெருமானுக்குத்தான் முதல் வணக்கம் செய்ய வேண்டும். அப்பொழுது நாம் அறிந்தோ அறியாமலோ ஏதாவது தவறு செய்திருந்தால் அதனை மன்னிக்கும்படி அவர் முன் தோப்புக்கரணம் போட்டு வணங்க வேண்டும். 

முதலில் கை விரல்களை மடக்கி வைத்துக் கொண்டு மெதுவாக நெற்றியிலே மூன்று முறை குட்டிக் கொள்ள வேண்டும். பின்பு நமது வலது காதை இடது கையாலும் இடது காதை வலது கையாலும் மாறிப் பிடித்துக்கொண்டு மூன்று முறை தாழ்ந்து எழுந்து தோப்புக்கரணம் போட்டுக் கும்பிட வேண்டும். அப்போது முடிந்தால் ஒரு நெய் தீபம் அல்லது கற்பூர தீபம் ஏற்றலாம்.

விநாயகப் பெருமானின் முதுகில் சனிபகவான் இருப்பார். அதனால் தவறிக்கூட முதுகில் கை வைக்கக்கூடாது. சந்நிதியை வலம் புறமாகச் சுற்றி வரவேண்டும். மூன்று முறை வலம் வரவேண்டும். கடவுளை வணங்கும் முன்பு அவற்றின் வாகனங்களை வழிபட வேண்டும்.  அப்போது வாகனங்களின் அனுமதியை வேண்டிக் கொண்டு உள்ளே செல்ல வேண்டும். 

கோவிலை விட்டு வெளியே வரும்போது சிறிது நேரம் அங்கு அமர்ந்து இறைவனை பிரார்த்தனை செய்து கொள்ள வேண்டும். மறுபடியும் கொடிக்கம்பத்திற்கு அருகில் சென்று வணங்கி விட்டுத்தான் வெளியில் வரவேண்டும். 

தினமும் கோவிலுக்குப்போய் கடவுளை வணங்குவது எல்லாராலும் இயலாத ஒன்று. அதனால் வாரத்தில் செவ்வாய், வெள்ளி, சனிக்கிழமை நாட்களில் மற்றும் விசேஷ நாட்களில் கோவிலுக்குச் சென்று வணங்கலாம்.