காசிம் சுலைமானி கொலையும்..! அமெரிக்கா - ஈரான் போர் பதற்றமும்..! இந்தியாவுக்கும் காத்திருக்கும் ஆபத்து! என்ன தெரியுமா?

தளபதி காசிம் சுலைமானி கொலையை தொடர்ந்து அமெரிக்கா - ஈரான் இடையே போர் வெடிக்கும் பட்சத்தில் நேரடியாக பாதிக்கப்படும் நாடுகள் பட்டியலில் இந்தியா முதலிடத்தில் உள்ளது.


ஈரானின் மிக முக்கியமான தளபதியாக செயல்பட்டு வந்த காசிம் சுலைமானி கடந்த வாரம் அமெரிக்காவால் கொடூரமாக கொலை செய்யப்பட்டார். ஈராக்கில் அமெரிக்காவிற்கு இருந்த தொடர்புகளை துடைத்து எறியும் பணியில் ஈடுபட்டிருந்த சுலைமானி கொலை ஈரானை பேரதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. ஏனென்றால் ஈரானின் நாடு கடந்த ராணுவ விவகாரங்களை கவனித்துக் கொண்டவர் சுலைமானி தான்.

சிரியா பிரச்சனை, சவூதியுடனான பதற்றம், ஈராக் உடனான ஈரானின் நல்லுறவு மேலும் மத்திய கிழக்கு நாடுகளில் ஈரானின் வியூகம் போன்றவற்றுக்கு சுலைமானி தான் பொறுப்பாளராக இருந்து வந்தார். சுலைமானியை பொறுத்தவரை ஈரானில் அவர் ஒரு ஹீரோ. அந்நாட்டு மக்களில் பெரும்பாலானவர்கள் சுலைமானியை அந்நாட்டின் ஜேம்ஸ் பாண்டாக கருதி வந்தனர்.


ஒரு கட்டத்தில் சினிமா நடிகர்களுக்கு இருக்கும் ரசிகர் பட்டாளம் போல சுலைமானிக்கு ரசிகர்கள் உருவாகத் தொடங்கினர். இதனால் பெரும் எண்ணிக்கையில் சுலைமானியை சமூக வலைதளங்களில் பின்தொடர ஆரம்பித்தனர். இதற்கு எல்லாம் காரணம் சுலைமானியின் போர் வியூகம் தான் என்கிறார்கள். சவூதியின் அராம்கோ எண்ணெய் ஆலையில் கடந்த ஆண்டு நடத்திய தாக்குதலின் பின்னணியில் சுலைமானி இருப்பதாக நம்பப்பட்டது.

இந்த சூழலில் தான் அமெரிக்காவை காக்கும் பொருட்டு சுலைமானியை கொலை செய்ததாக அறிவித்தது அமெரிக்கா. சுலைமானி இறப்பு ஈரானிற்கு பேரிழப்பு. அதனால் தான் அவர் உடல் இறுதிச்சடங்கிற்காக ஈரான் தலைநகர் டெஹ்ரொன் கொண்டு வரப்பட்ட போது லட்சக்கணக்கில் மக்கள் திரண்டனர். அனைவருமே கருப்பு உடை அணிந்திருந்தனர். இதனால் ஈரான் சாலைகள் கருப்பு நிறத்திற்கு மாறிப்போயிருந்து.