YouTube வீடியோ..! IP அட்ரஸ்..! நள்ளிரவு..! சித்த மருத்துவர் தணிகாசலத்தை சுற்றி வளைத்த போலீஸ்! தேனி பரபரப்பு!

கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடித்துவிட்டதாக வீடியோ வெளியிட்ட நிலையில் தணிகாசலம் உடனடியாக தலைமறைவாகிவிட்டார், இதனால் அவரை மிகவும் பிரயத்தனப்பட்டுத்தான் போலீசார் கைது செய்துள்ளனர்.


கொரோனா வைரஸ் பரவ ஆரம்பித்தது முதலே கபசுர குடிநீர் உள்ளிட்ட சில சித்த மருந்துகளை பயன்படுத்தினாலே போதும் அந்த நோய் நம்மை அணுகாது என்று தொடர்ந்து கூறி வந்தவர் தணிகாசலம். முதலில் இதனை பலரும் கேளியாக பார்த்து வந்த நிலையில் ஒரு கட்டத்தில் தமிழக அரசே கபசுர குடிநீரை அங்கீகரித்தது.

இதன் பின்னர் தணிகாசலத்தின் மார்க்கெட் ஜெட் வேகத்தில் முன்னேறியது. அத்தோடு மட்டும் அல்லாமல் கொரோனா வைரஸ் நோய்க்கு தான் மருந்து கண்டுபிடித்துவிட்டதாகவும் இதனை வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு கொடுத்து பரிசோதனை மேற்கொண்டதாகவும் அதில் வெற்றி கிடைத்துவிட்டதாகவும் கூறி வீடியோ வெளியிட்டார் தணிகாசலம்.

அதோடு தங்களுக்கு கொரோனா இருந்ததாகவும் தணிகாசலம் கொடுத்த மருந்தை சாப்பிட்டதும் குணமாகிவிட்டதாக வெளிநாடு வாழ் இந்தியர்கள் வீடியோவையும் தணிகாசலம் தரப்பு வெளியிட்டது. இதனால் பரபரப்பு ஏற்பட்ட நிலையில் சித்த மருத்துவர் தணிகாசலம் ஒரு போலி மருத்துவர் என்றும் கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடித்துவிட்டதாக அவர் வதந்தி பரப்புவதாகவும் புகார் எழுந்தது.

அத்தோடு இந்திய மருத்துவ மற்றும் ஓமியோபதித்துறை சார்பில் தணிகாசலம் மீது காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அத்துடன் தணிகாசலம் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக அரசு அறிக்கை வெளியிட்டது. இதனை தொடர்ந்து தணிகாசலம் சென்னையில் உள்ள தனது வீட்டில் இருந்து மாயமானார்.

போலீசார் அவரை தீவிரமாக தேடி வந்தனர். அவர் செல்போன் ஸ்விட்ச் ஆஃப் செய்யப்பட்டதால் கண்டுபிடிப்பதில் சிரமம் ஏற்பட்டது. இந்த நிலையில் அவரது YouTube பக்கத்தில் புதிதாக வீடியோக்கள் வெளியாகின. அந்த வீடியோக்கள் எங்கிருந்து அப்லோடு செய்யப்பட்டது என்பதை சைபர் கிரைம் போலீசார் மூலம் மத்திய குற்றப்பிரிவு போலீசார் கண்டுபிடித்தனர்.

தேனியில் உள்ள ஒரு முகவரிக்கான ஐபி அட்ரஸில் இருந்து அந்த வீடியோக்கள் அப்லோடு ஆகின. இதனை அடுத்து இரவோடு இரவாக மத்திய குற்றப்பிரிவு போலீசார் தேனி சென்று வீட்டை சுற்றி வளைத்தனர். பிறகு தணிகாசலத்தை கைது செய்து சென்னை அழைத்து வந்துள்ளனர்.