பிரளயத்திற்குப் பின் தோன்றிய முதல் சுயம்பு ஆதிபுரீஸ்வரர் - திருவொற்றியூர் தரிசனம்!

இச்சாசக்தி கிரியாசக்தி ஞானசக்தி இந்த மூன்று சக்திகளையும் தன்னகத்தே கொண்டவள் அன்னை பராசக்தி.


அன்னை ஞான சக்தியின் அம்சமுடையவளாக அருள்மிகு தியாகராஜசுவாமி ஆதிபுரீஸ்வருடன் வடிவுடையம்மனாக திருவொற்றியூரில் அருள்புரிகிறாள். ஒரு முறை கைலாயத்தில் தியானத்தில் மூழ்கியிருந்தார் சிவபெருமான். அவர் பின்னால் சென்று நிற்கிற பார்வதி தேவி விளையாட்டாய் தனது மலர்க் கரங்களால் அவருடைய கண்களை மூடுகிறாள். அவ்வளவுதான், அண்ட சராசரமும் இருளில் மூழ்குகிறது. பூமிப்பந்து சுற்றுவதை நிறுத்திக் கொள்கிறது.

சிவபெருமான் சட்டென்று தியானம் கலைந்து பார்வதி தேவியின் கைகளை விலக்க, எங்கும் பழையபடி ஒளி வெள்ளம் நிரம்பியது. பார்வதிதேவியின் வளையாட்டால் கோபமுற்ற சிவபெருமான் மூன்று வினாடிகள் என் கண்களை மூடி அண்டசராசரத்தையும் இருளில் மூழ்கடித்ததால் கைலாயத்தில் இருந்து விலகி பூவுலகில் முப்பிறவி எடுப்பாய் என்று கட்டளையிடுகிறார். பார்வதிதேவி சிவபெருமானை வணங்கி தான் செய்த பிழையை மன்னிக்கும்படி கேட்கிறாள்.

மனம்கனிந்த சிவபெருமான் கவலை வேண்டாம், இச்சா சக்தியாகவும், ஞான சக்தியாகவும், கிரியா சக்தியாகவும் பிறவிகள் எடுத்து என்னை நோக்கி தவம் செய். ஒவ்வொரு பிறவியிலும் நானே உன்னை திருமணம் செய்து கொள்கிறேன். பிறகு இருவரும் கைலாயம் வருவோம் என்கிறார். அதன்படி மூன்று பிறவிகள் எடுத்த பார்வதி தேவி ஒவ்வொரு பிறவியிலும் சிவபெருமானை நோக்கி கடுந்தவம் இருந்து அவரை கைப்பிடிக்கிறார். இச்சா சக்தியின் அம்சமான திருவுடையம்மனாக திருமணங்கீஸ்வரருடன் மேலூரிலும், ஞான சக்தியின் அம்சமான வடிவுடை அம்மனாக ஆதிபுரீஸ்வரருடன் திருவொற்றியூரிலும், கிரியா சக்தியின் அம்சமான கொடியிடையம்மனாக மாசிலாமணீஸ்வரருடன் திருமுல்லைவாயிலிலும் எழுந்தருளுகிறாள்.

முன்னொரு காலத்தில் பூமியில் பிரளயம் எற்பட்டது. பிரளயத்திற்குப் பின் புதிய உலகம் படைக்க பிரம்மா கேட்ட போது சிவபெருமான் தன் சகதியால் வெப்பம் உண்டாக்கி அவ்வெப்பத்தால் பிரளய நீரை ஒற்றி எடுத்தார். அந்த வெப்ப கோள வடிவத்திலிருந்து ஒரு மகிழ மரத்தடியில் ஒரு சிவலிங்கம் சுயம்புவாகத் தோன்றியது. பிரளய நீரை ஒற்றி எடுத்தமையால் இத்தலத்திற்கு ஒற்றியூர் எனப் பெயர் அமையப் பெற்றது. மற்றொரு காரணமாக இறைவன் வாசுகி என்கிற பாம்பை தன்னுள் அடக்கிக் கொண்டதால் (ஒற்றிக் கொண்டதால்) அவர் ஒற்றீசர் என அழைக்கப்பட்டு இத்தலம் ஒற்றியூர் என அழைக்கப்பட்டது.

பிரளயத்திற்குப் பின் தோன்றிய முதல் சுயம்பு சிவலிங்கம் ஆனதால் இத்தல இறைவன் ஆதிபுரீஸ்வரர் என்றும்,வாசுகி என்ற பாம்பிற்கு அருள் புரிய புற்று வடிவில் எழுந்தருளி தன்னுள் அடக்கிக் கொண்டதால் படம்பக்கநாதர் என்றும் அழைக்கப்படுகிறார். புற்று மண்ணால் ஆன இந்த லிங்கத் திருமேனி வருடத்தில் 3 நாட்களைத் தவிர மற்ற நாட்களில் லிங்கம் பெட்டி போன்ற அமைப்பில் கவசம் சார்த்தப்பட்டு மூடியே இருக்கும். ஒவ்வொரு வருடமும் கார்த்திகை மாத பெளர்ணமி நாளில் கவசம் திறக்கப்படும். பெளர்ணமியன்று மாலையில் இறைவனுக்கு புனுகு மற்றும் சாம்பிராணி தைலத்தால் அபிஷேகம் செய்கிறார்கள்.

தொடர்ந்து 3 நாட்களுக்கு இறைவனுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்படும். மூன்றாம் நாள் இரவில் மீண்டும் சுவாமிக்கு கவசம் சாத்தி விடுவர். இந்த 3 நாட்களில் இறைவனை புற்று வடிவமாகக் கண்டு தரிசிக்க ஏராளமான பக்தர்கள் வருகின்றனர். இறைவன் இங்கு தீண்டா திருமேனியனாகக் காட்சி தருவதால், இவருக்கு அபிஷேகம் செய்யப்படுவதில்லை. ஆவுடையாருக்கு மட்டும் அபிஷேகம் செய்கின்றனர்.

கிழக்குச் சுற்று வெளிப் பிரகாரத்தின் வலதுபுறம் இறைவி வடிவுடை அம்மன் சந்நிதி அமைந்திருக்கிறது. பெயருக்கு ஏற்றார் போல அம்பிகை வடிவுடன் அழகாக காட்சி தருகிறாள். சுமார் 12 அடி நீள அகலம் தொண்ட கருவறைக்குள் சுமார் ஐந்தடி உயரத்தில் நான்கு திருக்கரங்களுடன், அவற்றில் மேலிரு கரங்களில் பாச அங்குசமும், கீழிரு கரங்களில் அபய வரத முத்திரையும் காண்பித்தபடி, நின்ற கோலத்தில் அருள்புரிகிறாள் வடிவுடையம்மன்.

வடிவுடையம்மனுக்கு வெள்ளிக்கிழமைகளில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகின்றன. சிறுவனின் பசியை போக்கி அந்த சிறுவனை உலக புகழ் பெற செய்தாள் வடிவுடையம்மன். இராமலிங்கம் என்ற சிறுவனின் பசியை போக்க அன்னை தந்த உணவு சிறுவனுக்கு பெரும் ஞானத்தையும் தமிழ் புலமையை தந்தது. இராமலிங்க வள்ளலார் எனும் புகழை தந்தது. ஞானசக்தியான வடிவுடை அம்மனை வணங்கினால் ஞானம் பெறுவர். கல்வியில் புகழ் அடைவார்கள்.

பிரம்மதேவன் இங்கு வந்து வடிவுடையம்மனை வழிபட்டிருக்கிறார். இந்திரன் முதலான தேவர்களும் அம்மனை வழிபட்டிருக்கிறார்கள். தியாகராஜ பாகவதர் வடிவுடையம்மனை போற்றி தெலுங்கு கீர்த்தனைகள் பாடியுள்ளார்.

சென்னை மாநகரை காக்கக்கூடிய அம்மன்களில் வடிவுடை அம்மனும் உண்டு. இந்த வடிவுடை அம்மன் மிக மிக சக்தி வாய்ந்தது. குழந்தைப் பேறு மற்றும் வேறு எந்த விஷயமாக இருந்தாலும் அங்கு சென்று பிரார்த்தனை செய்யலாம். குங்கும அர்ச்சனை செய்து வழிபட்டால் மிகவும் விசேஷமாக இருக்கும். நெய் தீபம் ஏற்றி வழிபட்டாலும் சிறப்பாக இருக்கும்.