கிருஷ்ணரைப் போன்ற குழந்தை வேண்டுமா? கிருஷ்ண ஜெயந்திக்கு இந்தப் பூஜை செய்யுங்கள் போதும்!

மஹாவிஷ்ணு, கிருஷ்ணாவதாரம் எடுத்த தினமே கிருஷ்ண ஜெயந்தி (கோகுலாஷ்டமி) பண்டிகையாக நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இந்த வருடம் 23.8.2019 அன்று கிருஷ்ண ஜெயந்தி.


கிருஷ்ண ஜெயந்தி (சமஸ்கிருதத்தில் கிருஷ்ண ஜன்மாஷ்டமி) ஆண்டுதோறும் கிருஷ்ணரின் பிறப்பைக் கொண்டாடுகிற இந்து சமய விழாவாகும். ஆவணி மாதத்தில் தேய்பிறையின் எட்டாம் நிலையில் (அட்டமி)ரோகிணி நட்சத்திரம் சேர்ந்த நாள் இவ்விழா நிகழ்கிறது.

கிருஷ்ண ஜெயந்தி தினத்தில் பகவான் கிருஷ்ணர் நம் வீட்டிற்கு வந்து அருள்பாலிப்பதே கோகுலாஷ்டமியின் முக்கிய அம்சமாக பார்க்கப்படுகிறது. 

கிருஷ்ண அவதாரம் இந்துக்களுக்கு மிக முக்கியமானதாகும். ஏனெனில் போர்க்களத்தில் அர்ஜூனனுக்கு, கிருஷ்ணர் கொடுக்கும் உபதேசங்களே இந்துக்களின் புனித நூலான பகவத் கீதையானது. பகவத் கீதையில் அர்ச்சுனனுக்கு அருளிய உபதேசங்களுடன் இந்திய தத்துவ சாரங்களின் அடிப்படைகளை ஒன்று கலந்து கொடுக்கப்பட்டுள்ள நூல், பகவத் கீதையாகும். 

எப்போதெல்லாம் உலகத்தில் அதர்மம் தலை தூக்குகிறதோ, அப்போதெல்லாம் பகவான் அவதரிக்கிறார். அந்த வகையில் அதர்மத்தை அழிக்க பகவான் கிருஷ்ணன் பூலோகத்தில் வந்து பிறந்த நாளே கிருஷ்ண ஜெயந்தியாகக் கொண்டாடப்படுகிறது.

கிருஷ்ணன் நடுநிசியில் பிறந்ததாகக் கருதப்படுவதால் பூசைகள் மாலை நேரத்தில் நடத்தப்படுகின்றன. கிருஷ்ண ஜெயந்தி நாளில், ஒவ்வொரு வீடு தேடியும் கண்ணன் வருவதன் அடையாளமாக அவரது பாதத்தை, வீட்டு வாசலில் இருந்து பூஜையறை வரை வரைவர். கண்ணன் குழந்தை என்பதால், குழந்தைகளுக்கு பிடித்த சீடை, முறுக்கு, அதிரசம், பால்பாயாசம், வெண்ணெய், நெய் பண்டங்கள், அவல், நாவல்பழம், பால் படையலில் இடம்பெற்றிருக்கும். அன்று மாலையில் சிறுவர், சிறுமியர் கோலாட்டம், உறியடித்தல், வழுக்கு மரம் ஏறுதல் போன்ற விளையாட்டுகளில் ஈடுபட்டு மகிழ்வர். கோகுலாஷ்டமியின் மறுநாளில் "நந்தோற்ஸவம்' என்னும் பெயரில் உறியடி விழா, வடமாநிலங்களில் சிறப்பாக நடக்கிறது.

கிருஷ்ண ஜெயந்தி அன்று காலையில் இருந்து ஸ்ரீமத் பாகவதம், கிருஷ்ணாஷ்டகம், கிருஷ்ணன் கதைகள் படிக்க வேண்டும். துவாதச மந்திரமான ஓம் நமோ பகவதே வாசுதேவாய என்னும் மந்திரத்தை நூற்றியெட்டு முறை ஜெபித்து, மலர்களையும் பழங்களை இனிப்பு வகைகளையும் அவருக்கு படைத்து தூப தீபம் (மணமிக்க ஊதுபத்தி, கற்பூரம் ஆரத்தி) காட்ட வேண்டும்.

பாகவதத்தில் கண்ணனின் பிறப்பை விவரிக்கும் தசம ஸ்கந்தம் எனப்படும் பத்தாவது அத்தியாயத்தை ஒருவர் படிக்க, குடும்பத்தில் மற்றவர்கள் கேட்க வேண்டும். இதனால் பகவான் கிருஷ்ணரின் ஆசீர்வாதம் நமது இல்லத்திற்கும், உள்ளத்திற்கும் கிடைக்கும். கிருஷ்ண ஜெயந்தியன்று பிள்ளை பேறு இல்லாதவர்கள் ஸ்ரீமத் பாகவதத்தில் உள்ள தசம ஸ்காந்தம் படித்து பாராயணம் செய்தால், அழகான ஆண் குழந்தை பிறக்கும் என்னும் நம்பிக்கை உள்ளது.