நீண்ட போராட்டத்துக்கு பிறகு முஸ்லீம் பெண்ணுக்கு திருமணம்! கலவர சூழல்! ஒன்றிணைந்து இந்து இளைஞர்கள் செய்த நெகிழ்ச்சி செயல்!

50க்கும் மேற்பட்ட இந்துக்கள் இணைந்து மனித சங்கிலி அமைத்து இஸ்லாமியர்களுக்கு பாதுகாப்பு அளித்து திருமணத்தை நடத்தி வைத்த சம்பவம் மனதை நெகிழ வைத்துள்ளது.


கான்பூரில் உள்ள பகர்கஞ்ச் பகுதியை சேர்ந்தவர் ஜீனத். 25 வயதான இவர் தனது சிறு வயதிலேயே தனது தகப்பனாரை இழந்துவிட்டார். இதனால் சிறுவயதில் இருந்தே பல இன்னல்களையும் போராட்டங்களையும் கடந்த இவருக்கு ஒருவழியாக ஹஸ்னைன் பரூக்கி என்பவருடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டது.

இவர்களுக்கு திருமணம் நிச்சயக்கப்பட்ட டிசம்பர் 21ஆம் தேதி அப்பகுதியில் குடியுரிமை சட்டத் திருத்தத்துக்கு எதிராக நடந்த போராட்டத்தில் இரண்டு பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். இதனால் அப்பகுதியில் பெரும் பதற்றம் நிலவியது. நிலைமையை கட்டுப்பாட்டில் வைப்பதற்காக போலீசும் துணை ராணுவமும் அப்பகுதியில் குவிக்கப்பட்டனர். 

இதனால் பதற்றம் அடைந்த பெண் விட்டார்கள் மணப்பெண்ணை திருமணம் நடைபெறும் இடத்திற்கு கொண்டுசெல்ல முடியாமல் பதறினர். இதனால் சொந்தக்காரர்கள் மற்றும் மணமகன் வீட்டாரிடம் பேசி திருமணத்தை நிறுத்தவும் கூட அவர்கள் முடிவு செய்து விட்டனர். இந்த விஷயத்தை அறிந்த அப்பகுதியை சேர்ந்த விமல் சபாதியா என்பவர் தனது நண்பர்கள் இருவரிடம் பேசி மணமகன் வீட்டாரிடம் திருமணத்தை நிறுத்த வேண்டாம் மணப் பெண்ணை நாங்கள் அழைத்து வருகிறோம் என்று உறுதியளித்துள்ளனர்.

மேலும் இதுதொடர்பாக பெண்வீட்டார் இடமும் பேசி சுமார் 50க்கும் மேற்பட்டோர் உடன் இணைந்து அவர்கள் மனித சங்கிலி அமைத்து பெண் வீட்டாரை ஒரு கிலோமீட்டர் தொலைவில் உள்ள திருமணம் நடைபெறும் இடத்திற்கு பாதுகாப்பாக கொண்டு வந்து சேர்த்தனர். இதனால் இவர்களது திருமணம் திட்டமிட்டபடி நடைபெற்றது. 

அப்பகுதியில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டின் காரணமாக பெரும் பதற்றம் நிலவியதால் திருமணம் நடைபெறுமா என்ற கேள்விக்குறியான நிலையில் 50க்கும் மேற்பட்ட இந்துக்கள் இணைந்து மனிதச் சங்கிலி அமைத்து திருமணத்தை நடத்தி வைத்த சம்பவம் அப்பகுதி மக்களின் மனதை நெகிழச் செய்துள்ளது.

இதனால் மகிழ்ச்சி அடைந்த மணமகன் ஜீனத் திருமணம் நடந்த பிறகு விமல் சபாதியா மற்றும் அவரது நண்பர்களுக்கு திருமணம் நடைபெற உதவியதற்கு நன்றி தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.