குருபகவானின் பூரண அருள் வேண்டுமா? வணங்கவேண்டிய மந்திரம் இதுதான்!

கிரகங்களில், குருவை ‘பிரகஸ்பதி’ என்பர். ஸத்வ குணம் பொருந்தியவர் அவர்.


கிரக வரிசையில் செவ்வாய்க்கும் சனிக்கும் நடுவில் இருப்பார், குரு. அண்டவெளியில் அவரின் ஓடு பாதை, இந்த இரண்டு பேருக்கும் இடையே அமைந்திருக்கும். தன் இரண்டு பக்கங்களிலும் உள்ள செவ்வாயையும் சனியையும் கட்டுப்படுத்தி, இருவரையும் ஸத்வ குணத்துடன் இணைத்து உலக இயக்கத்தின் பயனை உணர வைப்பவர்,

குரு பகவான். ஆம்! வாழ்க்கையின் திசையையே தடம் புரளச் செய்யும் ரஜோ மற்றும் தமோ குணங்களைக் கட்டுப்படுத்த, ஸத்வ குணம் அவசியம். அதனைத் தந்து அருள்பவர், குரு. மற்ற சுப கிரகங்கள் பாப கிரகத்துடன் இணைந்தால், பாப கிரகத்தின் தன்மை சுப கிரகங்களுக்கும் வந்துவிடும்.

ஆனால், குருவோடு சேர்ந்த பாப கிரகங்கள், தனது இயல்பை மாற்றி, குருவின் இயல்பை ஏற்றுக்கொண்டு விடும். இப்படியொரு பெருமை, குருவுக்கு மட்டுமே உண்டு. இந்தப் பெருமை, பரம்பொருளான - உலக குருவான ஸ்ரீதட்சிணாமூர்த்தியிடமிருந்து கை மாறியது. அறிவுக்கு ஈசனை நாடு என்கிறது சாஸ்திரம் (ஞானம் மஹேச்வராதி ச்சேத்).

அதுபோல, உலக குருவான ஸ்ரீதட்சிணாமூர்த்தியின் அறிவுத் திறன், நவகிரக குருவுக்குள் ஊடுருவியது. ஆக, ஸ்ரீதட்சிணாமூர்த்தி பகவானை வழிபடுவதன் மூலமும் குருவின் திருவருளை பரிபூரணமாகப் பெறலாம்.

வரும் குருப்பெயர்ச்சியில், கோச்சார ரீதியில் குரு பகவானின் திருவருளை - குரு பலத்தைப் பரிபூரணமாகப் பெற, அனுதினமும் குரு பகவானை தியானித்து வழிபட வேண்டும். வேதம் ஓதுபவர்கள் ‘ஸ்ரீகுருப்யோ நம:’ என்று குரு வணக்கத்தோடு செயல்படுவார்கள்.

அதேபோல், ‘கும் குருப்யோ நம:’ என்ற வரியைச் சொல்லி 16 உபசாரங்கள் செய்து குரு பகவானை வழிபடலாம். `குருர் பிரம்மா, குருர் விஷ்ணு: குருர் தேவோ மஹேச்வர: குரு: ஸாஷாத் பரம்ப்ரம்ம தஸ்மை ஸ்ரீகுருவே நம:’ என்று செய்யுளைச் சொல்லியும் வணங்கலாம்.