கலைஞர் சிலை திறப்பு! மேடையேற்றப்படாமல் அவமானப்பட்ட வைகோ, திருமா!

முன்னாள் முதல்வர் கருணாநிதி முழு உருவச்சிலை திறப்பு விழா பொதுக்கூட்டம் இராயபேட்டை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நடைபெற்றது.


   விழா மேடை அண்ணா அறிவாலயம் போல் அமைக்கப்பட்டிருந்தது  மேலும் சிலை திறப்பு விழாவை காண பெரிய திரைகள் அமைக்கப்பட்டுருந்தது/ விழாவினை ஒட்டி நந்தனம் பகுதி முழுவதும் பலத்த போலிஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. காங்கிரஸ் தலைவர்கள் மற்றும் தி.மு.க நிர்வாகிகளுக்கு மட்டுமே மேடையில்இடம் வழங்கப்பட்டிருந்தது.

   அண்மையில் தி.மு.கவில் இணைந்த செந்தில் பாலாஜிக்கு முக்கிய பிரமுகர்கள் அமரும் இடத்தில் முதல் வரிசையில் இடம் அளிக்கப்பட்டிருந்து. கலைஞர் குடும்ப உறவுகளுக்கு முன் வரிசையில் இடம் ஒதுக்கப்பட்டிருந்தது. விழாவில், அனைவரையும் வரவேற்று தி.மு.க பொருளாளர் துரைமுருகன் பேசினார். அப்போது, நேரு குடும்பமும் கோபாலபுரம் குடும்பமும் மீண்டும் இணைந்திருப்பது மட்டற்ற மகிழ்ச்சி என்றார்.

   மேலும் கலைஞர் கைராசிக் காரர் என்றும் ஸ்டாலினும் அப்படித்தான் என்றும் துரைமுருகன் கூறினார். சென்னை வந்து சென்ற பிறகு ராகுலுக்கு இனி அரசியலில் ஏறுமுகம் தான், என்றும் துரைமுருகன் பொடி வைத்து பேசினார். நிகழ்ச்சியில் புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி பேசியதாவது: கலைஞர் அவர்கள் முதல்வராகவும், எதிர்கட்சி தலைவராகவும் இருந்த போது அவரிடம் ஆசி பெற்றவன் நான். தமிழை செம்மொழியாக மாற்ற அயராது பாடுபட்டவர் கலைஞர். உழைப்பின் காரணமாகமும், தமிழ் மக்கள் மீது கொண்ட பற்றினாலும், பல்வேறு திட்டங்களை கலைஞர் கொண்டுவந்தார்.  

  

கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் ஆங்கிலத்தில் உரையாற்றினார். அவர் பேசியதாவது: தமிழுக்காகவும், திராவிடத்திற்காகவும் அயராது பாடுபட்டவர் கலைஞர். அரசியல் தலைவர்கள், பேச்சாளர்கள் பலர் மேடையில், பொது இடங்களில் பேசுவதற்கு தங்களை முன்கூட்டியே தயார் செய்து வருவார்கள். ஆனால் கலைஞர் எவ்வித முன் தயாரிப்பும் இல்லாமல் தன்னுடைய பேச்சு திறமையிலும், தமிழ் மீது கொண்ட பற்றினாலும் மக்களை பெரிதும் கவர்ந்தவர்.

   கலைஞர் சிறந்த எழுத்தாளர் பேச்சாளர். அவர் தான் பெண்களுக்கு சொத்தில் சம உரிமையை 1989ல் முதன்முதலாக கொண்டுவந்தவர். தமிழ் சினிமாத்துறையிலும் சிறப்பாக செயல்பட்டவர். அவர் 5 முறை தமிழக முதல்வராக இருந்துள்ளார். மக்களுக்கு எப்போதும் சிந்தித்து செயல்பட்டுகொண்டே இருந்த ஒரே தலைவர். கலைஞர் ஒரு சிறந்த மனிதர்.

ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு தமிழில் தனது உரையை தொடங்கினார். சந்திரபாபு நாயுடு தமிழில் பேசியதை சோனியா காந்தி, ஸ்டாலின் உள்ளிட்டோர் ரசித்து கேட்டுக் கொண்டிருந்தனர். சந்திரபாபு நாயுடு பேசியதாவது: இந்திய அரசியலில் மூத்த தலைவர் கலைஞர் அவர்கள். அவருடைய சிலை திறப்பு விழாவில் கலந்துகொள்வதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன். 80 ஆண்டுகால அரசியலில் மக்களுக்கு பாடுபட்டவர்.

    தமிழில் பேசுவதில் மகிழ்ச்சி அடைகிறேன். அரசியல்வாதிகளுக்கு முன் உதாரணமாகவும் ,உந்து சக்தியாகவும் இருந்தவர் கலைஞர் அவர்கள். சிறந்த ஆளுமை திறமை படைத்தவர். திராவிடர்களுக்காக பாடுபட்டவர்.. ஆந்திராவில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் வருவதற்கு முக்கிய பங்காற்றியவர். தமிழ்நாடு அரசு ரிமோட் கன்ட்ரோல் மூலம் இயக்கப்பட்டு வருகிறது. சிபிஐ உள்ளிட்ட அனைத்து துறைகளையும் பாஜக நாசம் செய்துவிட்டது. கோவா, மணிப்பூர், தமிழ்நாடு, கர்நாடக உள்ளிட்ட மாநில ஆளுநர்களை பாஜக அரசு தவறாக பயன்படுத்தி வருகிறது.

    விவசாயிகளுக்கு எதிரான அரசாக மட்டுமல்லாமல் பொதுவாகவே மக்கள் விரோத அரசாக பாஜக செயல்பட்டு வருகிறது. ஓட்டு இயந்திரம், ஆர்.பி.ஐ., சிபிஐ உள்ளிட்ட எல்லாவற்றையும் பாஜக கபளிகரம் செய்துவிட்டது. நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் அனைத்து இடங்களிலும் திமுக வெற்றி பெறும். வெற்றி அலை திமுகவை நோக்கி அடிக்கிறது. 100சதவீதம் தமிழகத்தில் திமுக வெற்றி பெற வாய்ப்பு உள்ளது.

    நிகழ்ச்சியில் ராகுல் காந்தியும் ஆங்கிலத்தில் உரையாற்றினார். அவரது பேச்சை தட்டுத்தடுமாறி திருநாவுக்கரசர் மொழிபெயர்த்தார். ராகுல் காந்தி விழாவில் பேசியதாவது: மிகப்பெரும் தமிழின தலைவர் கலைஞர் அவர்களின் நினைவை பெற்ற இங்கு கூடியுள்ளோம். சாதாரணமான தலைவர் இல்லை கலைஞர். தமிழின தன்மான தலைவர். அனைவருக்காகவும் பிரதிபளிக்கும் ஒரே தலைவர். அவருடைய சிறப்பு எல்லா இடத்திலும் பிரதிபலிக்கும்.

   

மக்களுக்கான தலைவராக இருந்தவர். வாழ்வின் பெரும் பகுதியை மக்களுக்காக அர்பனித்தவர். கலைஞரின் இல்லத்திற்கு முதன் முறையாக செல்லும் போது, பெரிய வீட்டில் பெரிய பொருள்கள் இருக்கும் என எண்ணி இருந்தேன். ஆனால் அவர் இனிமையாகவும், எளிமையாகவும் இருந்தார்.  முதல்வராக இருந்தாலும் அவர் எளிமையாக இருந்ததை நினைத்து ஆச்சரியமடைந்தேன்.

    கலைஞர் தான் எனக்கு அரசியலில் உந்துதலாக இருந்தார். அவர் தான் எனக்கு வழிகாட்டியாக இருந்ததை ஞாயபகபடுத்தி பார்க்கிறேன்  தற்போது இருக்கும் அரசு, அவர்களின் தேவையை மட்டும் நிறைவேற்றும் அரசாக இருக்கிறது. மக்களின் கலாச்சாரம், பண்பாட்டை மதிக்க வேண்டாம் என நினைக்கும் அரசாக இருக்கிறது. மக்களின் எதிர்பார்ப்பை நிவர்த்தி செய்ய இயலாத இந்த பாஜக அரசை விரட்ட வேண்டும்.

   அனைத்து துறையையும் ஒடுக்கும் அரசாக இருக்கும் பாஜாக வை விரட்டி அடிக்கும் நேரம் நெருங்கி விட்டது. தமிழக மக்களின் குரலாக கலைஞர் இருந்தார் என்பதை இங்கும் கூடியிருக்கும் மக்களை பார்த்து தெரிந்து கொள்கிறேன். அனைவருக்கும் நன்றி.

   

திமுக தலைவர் ஸ்டாலின் நிகழ்ச்சியில் பேசியதாவது: இந்த நாள் மிக முக்கியமான நாள், அண்ணா சிலைக்கு அருகே தலைவர் கலைஞர் சிலை அமைக்கப்பட்டுள்ளது. சென்னை ஜிம்கானா க்ளப் அருகே காமராசர் சிலையை ஜவகர்லால் நேரு திறந்து வைத்தார். இப்போது நேரு குடும்பத்தை சேர்ந்தவர்களே தலைவர் கலைஞர் சிலையை திறந்து வைத்திருப்பதில் மட்டற்ற மகிழ்ச்சி.

   நீதிக்கட்சி தோற்றுவிக்கப்பட்ட தினம் இன்று, பெரியார், அண்ணா, கலைஞர் பிறந்த நாட்கள் வரிசையில் சிலை திறப்பு நாளும்  இணைந்திருக்கிறது. வீடு வரை உறவு என்ற பாடலை கவியரசு கண்ணாதாசன் எழுதினார். அண்ணாவுக்கு கடைசி வரை கலைஞர்தான். கலைஞர்தான். கலைஞர் தான். எனக்கு அண்ணன் கிடையாது என்றும் பேராசிரியர் தான் எனக்கு அண்ணன் என்றும் கலைஞர் அடிக்கடி கூறுவார்.

  இதோ உங்கள் அண்ணன் பேராசிரியர் இங்கிருக்கிறார். நீங்கள் எங்கிருக்கிறீர்கள் கலைஞர் அவர்களே. சொக்கத் தங்கம் என்று நீங்கள் பாராட்டிய சோனியா இங்கிருக்கிறார். எங்கிருக்கிறீர்கள் கலைஞர் அவர்களே? என் தந்தையைப் போன்று வழிநடத்துபவர் கலைஞர் என்று சொன்ன ராகுல் இங்கிருக்கிறார். எங்கிருக்கிறீர்கள் கலைஞர் அவர்களே? சந்திரபாபு நாயுடு, நாராயணசாமி இங்கிருக்கிறார்கள், எங்கிருக்கிறீர்கள் கலைஞர் அவர்களே?

    நீங்கள் எங்கும் செல்லவில்லை. லட்சக்கணக்கான தொண்டர்கள் மத்தியில் சிம்மாசனம் போட்டு அமர்ந்திருக்கீறீர்கள். ஒரு நாட்டின் நல்லிணக்கம் பொருளாதாரம் சீரழிந்து விட்டால் சரி செய்வது கடினம். இன்னும் 5 ஆண்டுகள் மோடியை ஆட்சி செய்ய விட்டால் நாட்டை பல்லாண்டுகள் பின்னோக்கி இழுத்து சென்று விடுவார்.  அதை முடிவுக்கு கொண்டுவரவே இங்கு அனைத்து அரசியல் தலைவர்களும் ஒன்றிணைந்து உள்ளனர்.

    மோடியை வீட்டுக்கு அனுப்புவது மட்டுமல்ல இந்தக் கூட்டணியின் நோக்கம். நாட்டின் வளர்ச்சியையும் கருத்தில் கொண்டுதான் கூட்டணி உருவாகியுள்ளது. தமிழகத்திற்கு ஒத்துவராத பல திட்டங்களை கொண்டு வந்து சேடிஸ்ட் போல நடந்து கொள்கிறார் மோடி. எந்தெந்த நாட்டிலோ நடைபெறும் துயர சம்பவங்களுக்கு ட்வீட் செய்கிறார். ஆனால் தமிழகத்தில் அவ்வளவு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஒரு சிறு ஆறுதல் இல்லை.

   ராகுல் காந்தி அவர்களே வருக நாட்டிற்கு நல்லாட்சி தருக. பாசிச, நாசிச மோடி அரசை வீழ்த்தி வெற்றி பெறுவோம். ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக முன்மொழிகிறேன்.இவ்வாறு ஸ்டாலின் பேசினார். நிகழ்ச்சியில் இறுதியாக சோனியா காந்தி பேசினார். சோனியாவின் பேச்சை பீட்டர் அல்போன்ஸ் நேர்த்தியாக மொழி பெயர்த்தார். காங்கிரஸ் நாடாளுமன்ற கட்சி தலைவர் சோனியாகாந்தி பேசியதாவது:-

    கலைஞர் சிலை திறப்பு விழாவில் பங்கு பெற்றதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன், சிலையை திறந்து வைத்ததில் பாக்கியம் என எண்ணுகிறேன். கலைஞர் அவர்களுக்கு மக்களுக்கு பணியாற்றும் ஆசை மட்டுமல்லாது தமிழ் மொழியை வளர்ப்பது தான் அவரின் இன்னுமொரு ஆசை. தமிழ் மொழி மீது கொண்ட பற்றினாலும், ஆர்வத்தினாலும் மொழியை வளர்க்க பாடுபட்டவர். அவர்களுடைய திரைக் கதை எழுதும் திறமையும், வசனங்களும் ஈடுசெய்ய முடியாத ஒன்று.

    கலைஞர் அவர்களின் உழைப்பின் காரணமாக தமிழை செம்மொழியாக ஏற்க முடிந்தது. மாபெரும் சமூக நீதி போராளி, பிற்படுத்தப்பட்டோர்களுக்கு இட ஒதுக்கீடு, பெண்களுக்கு சமஉரிமை, அனைவரும் அர்ச்சகர் ஆகலாம் என பல்வேறு திட்டங்களை கொண்டுவந்தவர். கூட்டடாட்சி தத்துவத்தை தூக்கிபிடித்தவர். மதசார்பற்ற அரசியல்வாதி, தாழ்த்தப்பட்ட, ஏழை, எளிய மக்களுக்கான திட்டங்கள் பெரிதும் உதவியாக இருந்தது.

   காங்கிரஸ்காரர்களாகிய நாங்கள் கலைஞர் அவர்களை மறக்க மாட்டோம். கலைஞர் அவர்கள் 10 ஆண்டுகள் வரை மத்தியில் எங்களுக்கு தந்த ஆதரவை மறக்க மாட்டோம். தேசிய அரசியலில் சட்ட திருத்தத்தை கொண்டுவர எப்படி நாம் இருந்தோமோ, அதே போன்று இந்த அரசை தூக்கி எறிவதிலும் நாம் ஒன்றினைய வேண்டும். இந்த நிகழ்ச்சியில் நான் ஒன்றை மட்டும் சொல்லிக்கொள்கிறேன் அரசியல் சாசனத்தை காக்க நாம் ஒன்றிணைந்து போராட வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

   

   விழாவில் கலந்து கொண்ட சிறப்பு விருந்தினர்களுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் கருணாநிதியின் மார்பளவு சிறிய சிலையை நினைவு பரிசாக வழங்கினார். கருணாநிதி சிலையை வடிவமைத்த சிற்பி தீனதயாளனுக்கு சால்வையும் மோதிரமும் அணிவித்தார். சென்னை மேற்கு மாவட்ட செயலாளர் ஜெ. அன்பழகன் எழுதிய சூரியன் மறைவதில்லை என்ற புத்தகத்தை சோனியா காந்தி வெளியிட ஸ்டாலின் பெற்றுக்கொண்டார். ஸ்டாலின் உட்பட சிறப்பு விருந்தினர்களுக்கு வெள்ளி வாள் பரிசு அளிக்கப்பட்டது.

   நிகழ்ச்சியில் கலைஞரின் மகளான கனிமொழிக்கு வழக்கம் போல் பேச வாய்ப்பு அளிக்கப்படவில்லை. நன்றியுரை கூட தி.மு.க மேற்கு மாவட்டச் செயலாளர் என்கிற வகையில் அன்பழகன் தான் கூறினார். இது போதாது என்றும் தமிழகத்தின் மிக மூத்த சீர்திருத்த இயக்கமான திராவிடர் கழகத்தின் தலைவர் வீரமணி, மூத்த அரசியல்வாதி வைகோ, தி.மு.கவின் நட்பு கட்சியான வி.சி.க திருமாவளவன் ஆகியோர் மேடை ஏற்றப்படவில்லை. அவர்கள் மேடைக்கு முன்பு போடப்பட்டிருந்த சேர்களில் சோகமான முகத்துடன் அமர்ந்திருந்தனர்.