5 மற்றும் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு தமிழக அரசு கொடுத்த ஷாக்!

5 மற்றும் 8-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு குறித்த தேர்வு நேரம், மதிப்பெண் மற்றும் கட்டணம் உள்ளிட்ட விபரங்களை பள்ளிக்கல்வி இயக்குநரகம் வெளியிட்டுள்ளது.


2018-19 -ஆம் கல்வியாண்டு முதல் அனைத்து வகை பள்ளிகளில் பயிலும் 5 மற்றும் 8-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடைமுறைப்படுத்தப்படுகிறது.

இந்தத்தேர்வு குறித்த விபரங்களை அறிவுறுத்தல்களாக அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கும் பள்ளிக்கல்வி இயக்குநரகம் வழங்கியுள்ளது.

அதன்படி, 20 மாணவர்களுக்கு ஒரு மையம் அமைக்கப்படவேண்டும் ; 20 மாணவர்களுக்கு குறைவாக உள்ள பள்ளிகளை சேர்ந்த 5-ஆம் வகுப்பு மாணவர்கள் அவர்களுக்கு அருகாமையில் உள்ள தொடக்கப்பள்ளி அல்லது நடுநிலைப்பள்ளிகளில் தேர்வு எழுத வேண்டும் ; 

அதேபோல் 20-க்கும் குறைவான மாணவர்கள் கொண்ட பள்ளிகளில் பயிலும் 8-ஆம் வகுப்பு மாணவர்கள் அருகாமையில் உள்ள உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் தேர்வு எழுத வேண்டும் ; 

அனைத்து வகை தொடக்க, நடுநிலை, மேல்நிலை, மற்றும் மெட்ரிக் பள்ளிகளில் பயிலும் 5-ம் வகுப்பு மற்றும் 8-ஆம் வகுப்பு மாணவர்களின் எண்ணிக்கையினை மாவட்டக் கல்வி அலுவலர்கள் வட்டார அளவில் பெற்று , வட்டாரக் கல்வி அலுவலர்கள் மற்றும் வட்டார வள மைய அலுவலர்கள் கொண்ட குழு அமைத்து தேர்வு மையங்களை தேர்வு செய்ய வேண்டும் ;

மாணவர்களுக்கு 60 மதிப்பெண்களுக்கு தேர்வு நடைபெறும் ; 

தேர்வு நேரம் 2 மணி நேரமாக இருக்கும் ; பொதுத்தேர்வு வினாக்கள் 3-ம் பருவத்திற்கான பாடத் திட்டத்திலிருந்து கேட்கப்படும் ; முதல் மற்றும் 2-ஆம் பருவத்திற்கான பாடத்திட்டத்திலிருந்து பொதுவான வினாக்களும் கேட்கப்படும் ; 

அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு தேர்வு கட்டணத்திலிருந்து விலக்கு அளிக்கப்படவேண்டும் ; தனியார், சுயநிதி மற்றும் மெட்ரிக் பள்ளிகளில் பயிலும் 5-ம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வுக் கட்டணமாக 50 ரூபாயும், 8ம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வுக் கட்டணமாக 100 ரூபாயும் வசூலிக்கப்படவேண்டும் ; 

தேர்விற்கான வினாத்தாள் வட்டார வள மைய அலுவலகத்தில் பாதுகாப்பான முறையில் வைக்கப்பட வேண்டும் ; விடைத்தாள்கள் வேறு பள்ளியில் மதிப்பீடு செய்யப்பட்டு அதற்கு பின்,  மதிப்பெண் பட்டியலை சமர்ப்பிக்க வேண்டும் ;  இந்த பணிகளை மாவட்டக் கல்வி அலுவலர்கள் தங்கள் ஆளுகைக்குட்பட்ட, வட்டாரக் கல்வி அலுவலர்கள் மற்றும் வட்டார வளமை மேற்பார்வையாளர்களுடன் குழுவாக இணைந்து மேற்கொள்ள வேண்டும் ;

மேலும், மாணவர்கள் எண்ணிக்கை மற்றும் தேர்வு மைய விவரத்தினை இணைப்பில் உள்ள படிவத்தை பூர்த்தி செய்து இன்று மாலைக்குள் மாவட்டக் கல்வி அலுவலரின் கையொப்பத்துடன் அனுப்பி வைக்க வேண்டும் என்று பள்ளிக்கல்வி இயக்குநரகம் அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கும் அறிவுறுத்தியுள்ளது.

இதற்கான அறிவுறுத்தலை பள்ளிக்கல்வி இயக்குநர் ராமேஸ்வர முருகன் வழங்கியுள்ளார்.