அந்த ஒரு நொடி..! வீடுகள் மீது விழுந்து நொறுங்கிய ஏர் பஸ் விமானம்..! 107 பேர் துடிதுடித்து பலியான பயங்கரம்!

பாகிஸ்தானில் பயணிகள் விமானம் தரை இறங்குவதற்கு சில நிமிடங்களுக்கு முன்னால் கராச்சியில் உள்ள குடியிருப்பு பகுதிகளில் விபத்துக்குள்ளாகி விழுந்து நொருங்கியதால் விமானத்தில் பயணம் செய்த 107 பேரும் உயிரிழந்து விட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.


கொரோனா வைரஸ் லாக்டவுன் காரணமாக கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக பாகிஸ்தானில் விமானப் போக்குவரத்து தடை செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு மீண்டும் பாகிஸ்தானில் உள்நாட்டு விமான சேவை தொடங்கப்பட்டது. இந்நிலையில் பாகிஸ்தான் இன்டர்நேஷனல் ஏர்லைன்ஸ் விமானத்தில் லாகூரில் இருந்து கராச்சிக்கு 99 பயணிகள் மற்றும் 8 விமான ஊழியர்கள் என மொத்தம் 107 பேர் பயணம் செய்தனர். 

இந்த விமானம் கராச்சியில் தரை இறங்குவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பாக கராச்சியில் உள்ள மலிர் பகுதியிலுள்ள மாடல் காலனி குடியிருப்பு பகுதியில் விமானம் நொறுங்கி விழுந்து விபத்துக்குள்ளாகியது. இதனால் அந்த பகுதியில் பெரும் புகை மூட்டம் ஏற்பட்டது. தகவலறிந்த தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து தீவிர மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த விமானம் தனது முழு கட்டுப்பாட்டை இழந்து விட்டதாக விபத்துக்கு முன்னாள் விமானி விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு அறைக்கு தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது. இந்த விபத்தில் பயணம் செய்த 99 பேர் மற்றும் 8 விமான ஊழியர்கள் என அனைவருமே இறந்துவிட்டதாக கராச்சி மேயர் உறுதிப்படுத்தியுள்ளார்.

விமானம் விழுந்து நொருங்கியதில் குடியிருப்பு பகுதியில் 7 முதல் 8 வீடுகள் வரை சேதமடைந்துள்ளதாகவும் வீட்டில் குடி இருந்தவர்களின் நிலை என்ன என்றும் இதுவரை தெரியவில்லை. குடியிருப்பு பகுதியில் ஏற்பட்ட இந்த விமானம் விபத்து அப்பகுதியில் பெரும் சோகத்தையும் , அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.