கஞ்சா கதைக்கும் பெலிக்ஸ் கைதுக்கும் ஸ்டாலினுக்கு எதிர்ப்பு

ஊடக ஆசிரியர் .பெலிக்ஸ் ஜெரால்டு அவர்களை டெல்லி சென்று கைது செய்துள்ளது எந்த‌ அளவிற்கு ஊடகத்தின் மீதான அச்சத்தில் ஊடக சுதந்திரத்தை ஸ்டாலின் அரசு முடக்க நினைக்கிறது என்பதை நாம் அறிய முடிகிறது


டெல்லியில் பெலிக்ஸ் கைது செய்யப்பட்டதற்கு அ.தி.முக. சார்பில் மாஜி அமைச்சர் ஜெயக்குமார் கடுமையான கண்டனம் தெரிவித்திருக்கிறார். அவர், ’பொய் வழக்கு போடுவது ஸ்டாலினுக்கு ஒன்றும் புதிதல்ல! என் மீது எத்தனையோ பொய் வழக்குகள் போட்டு‌ என்னை அச்சுறுத்த எண்ணியது இந்த விடியா திமுக அரசு! வெளியே வந்து இன்னும் கூடுதலாக தான் இந்த அரசை எதிர்த்து வருகிறேன். தற்போது ஊடக ஆசிரியர் .பெலிக்ஸ் ஜெரால்டு அவர்களை டெல்லி சென்று கைது செய்துள்ளது எந்த‌ அளவிற்கு ஊடகத்தின் மீதான அச்சத்தில் ஊடக சுதந்திரத்தை ஸ்டாலின் அரசு முடக்க நினைக்கிறது என்பதை நாம் அறிய முடிகிறது.

சாட்டை‌ துரைமுருகன்,மாரிதாஸ்,அருள்மொழிவர்மன்,சவுக்கு சங்கர்,பெலிக்ஸ் ஜெரால்டு ஆகியோர் எங்கள் அரசின் நிர்வாகத்தின் மீது எத்தனையோ விமர்சனங்களை முன்வைத்தனர். அதை சரி செய்யவே எங்கள் அரசு முற்பட்டதே தவிர அவர்களை முடக்கவோ அடிக்கவோ எண்ணவில்லை! இன்று பெலிக்ஸ் போன்றோருக்கு ஏற்பட்டுள்ள இந்த நியாயமற்ற நிலை நாளை நான் மேற்கோள் காட்டியுள்ள தனி மனித பத்திரிக்கையாளர்களுக்கும் நிகழ வாய்ப்புள்ளது! பாதி ஊடகங்களை உண்மையை போட கூடாது என மிரட்டி விட்டனர். மீதி ஊடகங்களையும் மிரட்டி பணிய வைக்க முயற்சி எடுத்துள்ளார் சேடிஸ்ட் முதல்வர் ஸ்டாலின். பழிவாங்குவதை விட்டுவிட்டு மக்களுக்கு பயனுள்ள வகையில் எதுவும் செய்ய பாசிச முதல்வருக்கு நேரமில்லை‌ போல... விரைவில் யூடியூப் நிறுவனத்தின் மீதும் ஏதாவது நடவடிக்கை எடுக்கலாமா என ஆலோசனை நடத்தினாலும் நடத்துவார்’ என்று கண்டனம் தெரிவித்திருக்கிறார்.

அதேபோல் நாம் தமிழர் சீமான், ‘சவுக்கு சங்கர் பேசிய கருத்துகளுக்காக பல்வேறு வழக்குப் பாய்ச்சப்பட்டு, ஏற்கனவே அவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவரது நேர்காணலில் நெறியாளுகை செய்ததற்காக பெலிக்ஸ் ஜெரால்டையும் தற்போது கைதுசெய்திருப்பது சட்டவிரோத நடவடிக்கையாகும். இது எவ்விதத்திலும் ஏற்புடையதல்ல!

பங்கேற்பாளரின் கருத்துக்கு நெறியாளரையும் சேர்த்துக் கைதுசெய்யும் இச்செயல்பாடு ஊடகச்சுதந்திரத்தைக் குழிதோண்டிப் புதைக்கும் கொடுஞ்செயலாகும். இது ஊடகச்சனநாயகத்திற்கு முற்றிலும் எதிரானது. காட்சி ஊடகங்கள், வலையொளிகளின் நேர்காணல்களில் பங்கேற்பாளர்கள் பேசும் கருத்துகளுக்கு அதன் நெறியாளர்களோ, அதனை ஒளிபரப்பும் ஊடகங்களோ ஒருபோதும் பொறுப்பேற்பதில்லை என்பது அடிப்படை ஊடகச்செயல்பாடு. அப்படியிருக்கையில், எதற்காக இந்த கைது நடவடிக்கை? திமுக அரசின் மீது விமர்சனங்களை வைக்கும் பத்திரிக்கையாளர்களுக்கும், அரசியல் விமர்சகர்களுக்கும் வெளிப்படையாக விடுக்கும் அச்சுறுத்தல் இல்லையா இது?

தமிழ்நாடு முழுமைக்கும் போதைப்பொருட்களைப் புழங்கவிட்டுவிட்டு, சவுக்கு சங்கரின் வாகனத்தில் கஞ்சாவை எடுத்ததாகக் கூறுவது நம்பும்படியாக இருக்கிறதா? எப்போது வேண்டுமானாலும் கைதுசெய்யப்படலாம் எனும் நிலையிலிருந்த சவுக்கு சங்கர், தனது வீட்டிலும், அலுவலகத்திலும், வாகனத்திலும் கஞ்சாவை வைத்துக்கொண்டு சுற்றுவாரா? எதற்கு இத்தனைத் திரைக்கதை அமைக்கிறீர்கள் பெருந்தகைகளே? அம்மையார் இந்திரா காந்தியின் ஆட்சிக்காலத்தில், அவசர நிலையின்போது காவல்துறையால் சிறைக்குள் துன்புறுத்தப்பட்டதை இன்றளவும் பேசும் ஐயா ஸ்டாலின் அவர்கள், காவல்துறையை வைத்துக் கொண்டு இத்தகையக் கொடூரங்களை நிகழ்த்தலாமா? இதுதான் சமூக நீதி ஆட்சியா? விடியல் ஆட்சியா? வெட்கக்கேடு’ என்று அறிக்கை வெளியிட்டுள்ளார்.

இதே பாணியில் தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகனும் இந்த கைதுக்கு எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார்.