டிவி பார்த்துக் கொண்டிருந்த பெற்ற மகளை தெருவில் ஓட ஓட விரட்டி வெட்டிக் கொன்ற தந்தை! ஆறுமுகநேரி பயங்கரம்! அதிர்ச்சி காரணம்!

தூத்துக்குடி: டிவி பார்த்த மகளை அவரது தந்தையே அடித்துக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


தூத்துக்குடி மாவட்டம், புன்னக்காயல் பகுதியை சேர்ந்தவர் அந்தோணி (வயது 40). மீனவரான இவருக்கு எபிஷா என்ற மனைவி, 2 மகள்கள் உள்ளனர். இதில், மூத்த மகள் அந்தோணிஸ்டா பிளஸ் 2 தேர்வு எழுதிவிட்டு முடிவுக்காக காத்திருக்கிறார். இந்நிலையில், அந்தோணி கடந்த சில மாதங்களுக்கு முன் மன நிலை பாதித்ததால், புளியம்பட்டி அந்தோணியார் ஆலயத்தில் வைத்து மனநல சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. கொரோனா ஊரடங்கு காரணமாக, அவரை தற்போது வீட்டிற்கு அழைத்து வந்து, பராமரிக்கின்றனர்.

எனினும், மனநிலை பாதிப்பு காரணமாக, வீட்டில் யாரேனும் சத்தம் போட்டு பேசினாலோ அல்லது தெருவில் யாரேனும் சத்தமாக பேசினாலோ உடனடியாக அவர்களிடம் தகராறு செய்தும், அவர்களை தாக்குவதையும் அந்தோணி வாடிக்கையாகச் செய்துள்ளார். இதையடுத்து, அவரை தனி அறையில் வைத்து பூட்டியுள்ளனர். இந்நிலையில், நேற்று முன்தினம் வழக்கம்போல வீட்டில் அந்தோணிஸ்டா டிவி பார்த்துக் கொண்டிருந்தபோது, டிவி சத்தம் காரணமாக, கோபமுற்ற அந்தோணி வெளியே வந்து, மகளிடம் தகராறு செய்துள்ளார்.

பிறகு, மகளை அடித்ததோடு, அருகில் கிடந்த கம்பை எடுத்து, ஓங்கி அடித்துள்ளார். மாணவி ரத்த வெள்ளத்தில் தப்பியோட முயன்றாலும், அவரை விடாமல் தெருவில் துரத்திச் சென்று பலமுறை அடித்துள்ளார். இதில், மாணவி உயிரிழந்தார். இதன்பேரில், போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர். அந்தோணியை மனநல காப்பகத்தில் தற்சமயம் சேர்த்துள்ளனர்.