ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சியில் கெத்து காட்டிய HCL டெக்னாலஜிஸ் அதிபர் ஷிவ் நாடார்!

ஆர்.எஸ்.எஸ் அணிவகுப்பில் பிரபல தனியார் நிறுவனமான ஹெச்.சி.எல் நிறுவன தலைவர் ஷிவ் நாடார் பங்கேற்றிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


மகாராஷ்டிரா மாநிலத்தில் அமைந்துள்ள நாக்பூர் நகரில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் சார்பில் விஜயதசமி விழா நடைபெற்றது. இதில் ஆர்எஸ்எஸ் தலைவரான மோகன் பகவத் கலந்து கொண்டார். இந்த விழாவின் சிறப்பு விருந்தினராக பிரபல தனியார் நிறுவனமான ஹெச்.சி.எல் தலைவரான ஷிவ் நாடார் கலந்து கொண்டார்.

ஆர்.எஸ்.எஸ் சார்பில் உறுப்பினர்களின் அணிவகுப்பு நிகழ்ச்சியும் நடைபெற்றது. இந்த அணிவகுப்பு ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் ஏற்றுக்கொண்டார். 

இந்த விழாவில் மத்திய அமைச்சரான நிதின் கட்கரி, மத்திய இணை அமைச்சர் மற்றும் முன்னாள் ராணுவ தளபதியான வி.கே.சிங், மகாராஷ்டிரா மாநிலத்தின் முதலமைச்சரான தேவேந்திர பட்னாவிஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

விழாவில் பேசிய மோகன் பகவத், "நாட்டில் இந்து கும்பல் சிலர் வேண்டுமென்றே கலவரங்களில் ஈடுபடுவதாக மேற்கத்திய நாடுகள் தவறான கருத்தை பரப்பி வருகின்றனர். காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்தது வரலாற்று சிறப்புமிக்க சம்பவங்களில் ஒன்றாகும். இந்த முடிவை தைரியமாக எடுத்த இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கும், உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கும் மனமார்ந்த நன்றியை உரித்தாக்குகிறேன்" என்று இருவரையும் மனமுவந்து பாராட்டினார்.

 இந்த நிகழ்ச்சியில் அனைவரது கவனத்தையும் ஈர்த்தவர் ஷிவ் நாடார் தான். ஏனென்றால் மேடையில் அவருக்கு முன்வரிசையில் இடம் அளிக்கப்பட்டிருந்தது. ஆர்எஸ்எஸ் காரியக்காரர்கள் உறுதிமொழி எடுத்த போது அனைவரும் தங்கள் கைகளை நெஞ்சுக்கு நேராக வைத்திருந்தார்கள். ஆனால் ஷிவ் நாடார் அதனை பொருட்படுத்தாமல் இயல்பாக நின்று கெத்து காட்டினார்.