என்ஜினியரிங் படித்துவிட்டு ஆடு, மாடு, கோழி மேய்க்கும் சகோதரர்கள்..! மாத வருமானம் மட்டும் ரூ.5 லட்சம்..! 9 ஏக்கர் டூ 40 ஏக்கருக்கு ஓனர்ஸ்!

விழுப்புரத்திற்கு அருகே உள்ள கிராமத்தில் இன்ஜினியரிங் படித்த சகோதரர்கள் இருவர் இணைந்து இயற்கை விவசாயம் மற்றும் கால்நடைகளை வளர்த்து நல்ல வருமானம் ஈட்டி கலக்கி வருகிறார்கள்.


விழுப்புரம் மாவட்டத்திலுள்ள செஞ்சிக்கு அருகே அப்பம்பட்டு என்ற கிராமத்தில் சந்தோஷ் குமார் மற்றும் கௌரிசங்கர் என்ற சகோதரர்கள் வசித்து வருகின்றனர். இன்ஜினியரிங் படித்த இவர்களிருவரும் படிப்பு சம்பந்தமான வேலைகளை செய்யாமல் தங்களுக்கு பிடித்த இயற்கை விவசாயத்தில் தற்போது கலக்கி வருகிறார்கள்.

இதுபற்றி சந்தோஷ் குமார் சமீபத்தில் அளித்த பேட்டியில் எங்களுக்கு பெற்றோர் இல்லாததால், சிறுவயது முதல் பாட்டி தான் எங்களை வளர்த்து வருகிறார். மாமாக்கள் தான் எங்களிருவரையும் இன்ஜினியரிங் படிக்க வைத்தார்கள். சிறு வயதிலிருந்தே எனக்கு ஆஸ்துமா பிரச்சனை உள்ளது. இன்ஜினியரிங் படிக்கும் போது காலேஜ் கேம்பஸ் இன்டர்வியூவில் எனக்கு வேலை கிடைத்தது. ஆனால் காலேஜ் முடிந்தவுடன் எனக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் என்னால் அந்த வேலையில் சேர முடியவில்லை. பாட்டி வீட்டிலேயே சில மாதங்கள் ஓய்வில் இருந்தேன். 

என் மாமா ஒருவர் மஸ்கட்டில் தங்கி வேலை செய்து வருகிறார். அவருக்கு இயற்கை விவசாயத்தில் ஆர்வம் அதிகம். ஆனால் அவர் வெளிநாட்டில் தங்கி வேலை செய்து வருவதால் அவர் விவசாயத்தில் ஈடுபட முடியவில்லை. அதனால் என் மாமா என்னை கிராமத்திலேயே வேலை செய்வதுதான் உன்னுடைய உடலுக்கு நல்லது. வேலைக்காக வெளிநாடு வந்து உணவு, உடை, இருப்பிடம் வசதி இல்லாமல் நாங்கள் மிகவும் சிரமப்படுகிறோம். நமது ஊரிலேயே தங்கி விவசாயம் செய். உனக்கு தேவையான அனைத்து உதவிகளையும் நான் செய்கிறேன் என அவர் கூறினார்.எனக்கும் விவசாயம் செய்வதில் ஆர்வம் இருந்தது. ஆனால் விவசாயம் பற்றி எனக்கு எந்த அனுபவமும் இல்லை. மஸ்கட்டில் தங்கியிருக்கும் மாமா எனக்கு பண உதவி செய்தார். வக்கீல் வேலை செய்து வரும் மற்றொரு மாமா எனக்கு நிலம் வாங்க உதவி செய்தார்.

கடந்த 2015 ஆம் ஆண்டு ஒன்பது ஏக்கர் நிலத்தில் விவசாயத்தை தொடங்கிய எனக்கு ஏமாற்றமே கிடைத்தது. பின்னர் அதிலிருந்து கஷ்டப்பட்டு மீண்டு வந்தோம். நிலத்தின் வரப்பை சுற்றி தென்னை, சவுக்கு மரங்களை நட்டேன். ஆனால் அது குறிப்பிட்ட உயரத்திற்கு மேல் வளரவில்லை ஆனால் அது வாடாமல் இருந்தது . விவசாய அதிகாரிகள் மூலம் முன்பு இந்த இடத்தில் பயிரிட்டவர்கள் ரசாயன உரங்களைப் பயன்படுத்தியதால் நிலத்தின் அடியில் ஒன்றரை அடிக்கு மண் இறுகிப் போனது தெரியவந்தது. பின்னர் விவசாய அதிகாரிகளின் அறிவுரையின்படி இயற்கை உரங்களை பயன்படுத்தி நெல்லை விதைத்து விவசாயத்தை செய்ய தொடங்கினேன். அதில் ஓரளவுக்கு நல்ல மகசூல் கிடைத்தது. இவ்வாறு ஆரம்பகட்ட விவசாய வேலைகளை செய்து கொண்டிருக்கும்போது என் தம்பியும் இன்ஜினியரிங் படிப்பை முடித்தான்.

விவசாயத்தில் கிடைத்த வருமானத்திலும் எங்களது மாமா செய்த உதவியிலும் சுற்றி இருக்கிற சில நிலங்களை வாங்கினோம். அந்த நிலங்களில் கோழி ,ஆடு ,மாடுகளை வாங்கி வளர்க்க ஆரம்பித்தோம். பல்வேறு ரகங்களில் 300 ஆடுகள் வளர்த்து வந்திருந்தோம். ஊரடங்கு உத்தரவுக்கு முன் 150 ஆடுகளை நல்ல விற்பனை நிலைக்கும் வந்ததால் விற்று விட்டோம். ஆடுகள் விற்பனை மூலமாக சுமார் 5 லட்சம் வருமானம் கிடைத்தது.

தொடக்கத்தில் 12 மாடுகள் வைத்திருந்தோம். இப்பொழுது 62 கறவைமாடுகள் வைத்துள்ளோம். தினமும் எங்களது தேவைக்கு போக மீதமுள்ள 150 லிட்டர் பாலை சொசைட்டிக்கு கொடுத்துவிடுவதன் மூலமாக 3000 ரூபாய் எங்களுக்கு கிடைக்கிறது. அதேபோல 250 வகை கைராலி நாட்டுக்கோழிகளை வளர்த்து வந்தோம். அதிக முட்டையிடும் இந்த கோழி முட்டைகள் பத்து ரூபாய்க்கு விற்று வந்தோம். தற்போது முட்டைகளுடன் கோழி விற்பனை செய்து வருகிறோம். இதன் மூலம் 800 ரூபாய் வருவாய் கிடைக்கிறது. விவசாயம் மற்றும் கால்நடைகளை வளர்த்து வருவதால் நாங்கள் இருவரில் யாராவது ஒருவர் கண்டிப்பாக நிலத்திலேயே இருக்கவேண்டும். ஆடு மாடு கோழிகள் எல்லாம் எனது தம்பி சென்னையில் இருந்து வாங்கி வருவான். அதை வளர்த்து விற்பனை பருவத்திற்கு வந்த பிறகு நல்ல விலைக்கு விற்று விடுவோம். 

மொத்தம் தற்போது உள்ள 40 ஏக்கர் நிலத்தையும் விவசாயம் கால்நடை வளர்ப்பு முறை எல்லா பணிகளையும் நானும் என் தம்பியும் மட்டுமே பார்த்துக்கொண்டு வருகிறோம். உடல்நிலை சரியில்லாத நிலையில் விவசாயம் செய்ய ஆரம்பித்தேன். ஆனால் சுத்தமான காற்று ,குடிநீர், உணவு மூலமாக இப்போது நிம்மதியாக இருக்கிறேன். காலேஜ் படிக்கும்போது நான் இன்ஹேலர் பயன்படுத்துவேன். ஆனால் தற்போது அதற்கு அவசியமில்லை. இஞ்சினியரிங் படித்துவிட்டு வேலைக்குப் போய் இருந்தால் கிடைக்கும் வருமானத்தை விட தற்போது நல்ல வருமானம் கிடைக்கிறது. எடுக்கும் லாபத்தை எங்கள் பண்ணையிலேயே நாங்கள் முதலீடு செய்கிறோம் என்றும் அவர் கூறினார்.