மோடிக்காகவே உருவாக்கப்பட்டதா தேர்தல் அட்டவணை? தேர்தல் கமிஷன் மீது கிடுகிடு குற்றச்சாட்டு!

நரேந்திர மோடி எந்த தொந்தரவும் இல்லாமல் தேர்தல் பிரசாரம் செய்யவேண்டும் என்பதற்காகவே தேர்தல் அட்டவணை உருவாக்கப்பட்டுள்ளதாக கடும் சர்ச்சை கிளம்பியுள்ளது.


அதாவது மோடி பிரசாரம் செய்தும் உருப்படாது என்று முடிவு செய்யப்பட்ட மாநிலங்கள் அல்லது பி.ஜே.பி. ஜெயிக்காத மாநிலங்களில் தேர்தல் ஒரே கட்டமாக நடக்கிறது.

ஆனால், பா.ஜ.க. ஜெயிக்க வாய்ப்பு உள்ள தொகுதிகள் என்றால், அங்கெல்லாம் குறைந்தது மூன்று முதல் நான்கு கட்டமாக தேர்தல் நடக்கிறது. அதாவது மோடி மீண்டும் மீண்டும் சென்று வாக்கு சேகரிக்க வசதியாக தேர்தல் அட்டவணை தயாரிக்கப்பட்டுள்ளது.

உத்தரப்பிரதேசம், மேற்கு வங்காளம், பீகார் மூன்றுக்கும் ஏழு கட்டமாக தேர்தல் நடக்கிறது. 80 தொகுதிகள் உ.பி என்பதால், அதை வேண்டுமானால் சகித்துக்கொள்ளலாம். ஆனால் 42 தொகுதிகள் மட்டுமே உள்ள மேற்கு வங்காளத்திற்கும் 40 தொகுதிகள் மட்டுமே உள்ள பீகாருக்கும் எதற்காக ஏழு அடுக்குகளாக தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்பதுதான் ஆச்சர்யம்.

 தென் மாநிலங்கள் அத்தனைக்கும் ஒரே கட்டமாகத் தேர்தல் நடக்கிறது. ஆனால், கர்நாடகாவிற்கு மட்டும் இரண்டு கட்டத் தேர்தல். ஏனென்றால் தென் மாநிலங்களில் பாரதிய ஜனதா கட்சிக்கு ஓரளவு வாக்கு வங்கி கர்நாடகாவில் மட்டுமே உள்ளது. அதனால்தான், அங்கு  -பிரசாரம் செய்யும் வகையில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடக்கிறது.  ஆனால், தமிழகத்திற்கு ஒரே கட்டம்தான். இங்கே பா.ஜ.க.வுக்கு என்ன மரியாதை என்பதுதான் நமக்குத் தெரியுமே...

காங்கிரஸ் சமீபத்தில் வென்ற மூன்று மாநிலங்களிலும் பல கட்டங்களாகத் தேர்தல்கள் நடக்கின்றன. சத்தீஸ்கர் - 3 கட்டமாக, மத்திய பிரதேசம் - 4 கட்டமாக மற்றும் ராஜஸ்தான் - 2 கட்டமாக நடக்கிறது. இங்கெல்லாம் மொத்த தொகுதிகள் எண்ணிக்கை குறைவு என்பதை சொல்லவே வேண்டியதில்லை.

ஜம்மு காஷ்மீரில் ஐந்து கட்டமாக நாடாளுமன்றத் தேர்தல் நடக்கிறது. ஆனால் இடைத்தேர்தலை தமிழ்நாட்டில் அறிவிக்கும் தேர்தல் ஆணையம், ஜம்மு காஷ்ரின் மாநிலத் தேர்தலை நிராகரித்துவிட்டது.

48 தொகுதிகள் இருக்கும் மகாராஷ்ட்ராவுக்கும், 21 தொகுதிகள் இருக்கும் ஒடிசாவுக்கும் ஒரே மாதிரியான 4 கட்ட தேர்தல்கள் நடத்துவதில் என்ன உள்ளர்த்தம் இருக்க முடியும்?

 மோடி போட்டியிடும் வாரணாசி தொகுதி கடைசி கட்டத் தேர்தலில் வருகிறது. அப்போதுதான் அவர் எல்லா மாநிலங்களையும் சுற்றிவிட்டு அங்கே போய் தீவிரமாக பிரசாரம் செய்ய முடியும்.

இப்படியெல்லாம் ஆளும் கட்சிக்கு ஆதரவாக தேர்தல் ஆணையம் செயல்பட்டு மோடியை காப்பாற்ற நினைக்கிறது. இதுதான் ஜனநாயகமா என்பது அனைவரும் எழுப்ப வேண்டிய கேள்விதான்.