எடப்பாடியாரின் 2500 ரூபாய் பரிசுக்கு அரசாணை வந்தாச்சு..! ஸ்டாலினுக்கு எடப்பாடியார் கடும் கண்டனம்

யாரும் எதிர்பார்க்காத வகையில் திடீரென அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசாக தலா ரூ.2,500 வழங்கப்படும் என்று அறிவித்து அதிரடியைத் தொடங்கிவைத்தார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி.


இதுவரை பொங்கல் பரிசாக ரூ.1000 அளிக்கப்பட்டு வந்த நிலையில் இந்தாண்டு ரூ.2500 வழங்கப்பட உள்ளது. 2.10 கோடி ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ.2500 மற்றும் பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கப்படுகிறது. அரிசி அட்டைகளாக மாற்றம் செய்யக்கூடிய 3,75,235 சர்க்கரை அட்டைகளுக்கு பொங்கல் பரிசு வழங்கப்படும் என்பதற்கான அரசாணை இன்று வெளியிடப்பட்டுள்ளது. 

அதன்படி, 2.10 கோடி அரிசி அட்டைதாரர்களுக்கு வழங்கிட ரூ.5,604.84 கோடி நிதி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. ஜனவரி 4-ம் தேதி முதல் ரேசன் கடைகளில் பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ரூ.2,500 வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த அறிவிப்பை அடுத்து இன்றே பொங்கல் பரிசு தொகுப்பை வழங்கும் திட்டத்தை முதல்வர் இன்று தொடங்கி வைக்கிறார். இந்த திட்டத்தை அரசு விழாவில் அறிவிக்கவில்லை என்று எதிர்க் கட்சிகள் பேசிவரும் நிலையில், ஸ்டாலினுக்கு கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. 

ஏழை மக்களுக்கு கொடுப்பதை யார் தடுத்து நிறுத்துகிறார்களோ அவர்கள் என்றைக்கும் வென்ற சரித்திரம் கிடையாது. நாங்கள் ஏழை மக்களை பார்க்கிறோம், ஏழை மக்களின் எண்ணம் நிறைவேற வேண்டும், அதற்காக இந்த திட்டத்தை அறிவித்திருக்கிறோம். நான் கிராமத்தில் பிறந்து வளர்ந்தவன். கிராமத்தில் இருந்து நகரம் வரை ஏழை மக்களோடு பழகியிருக்கிறேன்.

ஆகவே, ஒரு பண்டிகை வரும்போது அவர்கள் எப்படி கஷ்டப்படுவார்கள் என்று எனக்கு நன்றாகவே தெரியும். அதுவும், கொரோனா காலத்தில் மக்கள் பட்ட துன்பம் அதிகம். புயல், கனமழையால் ஏற்பட்ட துன்பம் அதைவிட கடினம். நான் நேரடியாக டெல்டா மாவட்டத்துக்கு சென்று பார்வையிட்டு வந்தேன்.

தை திருநாள்தான் தமிழர்களுடைய பொன்னான நாள். தைப்பொங்கல் எல்லா தமிழ் இல்லத்திலும் கொண்டாடப்படும். அப்படி சிறப்பாக கொண்டாடுவதற்காக அறிவிக்கப்பட்ட திட்டத்தை, சுயநலத்தோடு அறிவித்ததாக சொல்கின்றார்களே, இது நியாயம்தானா என்பதை பொதுமக்கள் எண்ணிப்பார்க்க வேண்டும்.

என்னைப் பொறுத்தவரை, ஏழை, எளிய மக்களில் இருந்து அனைத்து மக்களும் இன்புற்று வாழ வேண்டும். ஆகவே, யாரைப் பற்றியும் கவலைப்படப்போவதில்லை, மக்களைப் பற்றித்தான் நாங்கள் கவலைப்பட்டுக்கொண்டிருக்கிறோம் என்று ஸ்டாலினுக்கு சூடு போட்டிருக்கிறார் எடப்பாடியார்.