கொரோனா ரேப்பிட் டெஸ்ட் கிட்..! சத்தீஸ்கர் வாங்கியது ரூ.337க்கு..! தமிழகம் வாங்கியது ரூ.600க்கு..! 300 ரூபாய் கமிசனா?

கொரோனாவை அரை மணி நேரத்தில் உறுதிப்படுத்தும் ரேப்பிட் டெஸ்ட் கிட்களை சத்தீஸ்கர் அரசு வெறும் 337 ரூபாய்க்கு வாங்கிய நிலையில் அதே ரேப்பிட் டெஸ்ட் கிட்டை தமிழக அரசு 600 ரூபாய்க்கு வாங்கியதால் சர்ச்சை எழுந்துள்ளது.


தற்போது தமிழகத்தில் கொரோனாவை உறுதிப்படுத்த ரத்த மற்றும் சளி மாதிரிகளை ஆய்வகத்திற்கு அனுப்பி வைத்து காத்திருக்க வேண்டிய சூழல் நிலவுகிறது. ஒரு நாளைக்கு அதிகபட்சமாக சுமார் 5ஆயிரம் பேரின் ரத்த மாதிரிகளைத்தான் கொரோனா பரிசோதனைக்கு தமிழகத்தில் உட்படுத்த முடியும்.

இதனால் தமிழகத்தில் கொரோனா பரவுவதை சரியாக கணிக்க முடியாத சூழல் நிலவுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. ரேபிட் டெஸ்ட் கிட் மூலம் விரைவாக பரிசோதனை செய்து கொரோனா நோயளிகளை தனிமைப்படுத்துவதன் மூலமே கொரோனாவை கட்டுப்படுத்த முடியும் என்றும் கூறப்பட்டது. 

ரேப்பிட் டெஸ்ட் கிட் மூலமாக ஒருவருக்கு கொரோனா இருக்கிறதா இல்லையா என்பதை 15 நிமிடங்கள் முதல் 30 நிமிடங்களுக்குள் கண்டுபிடித்துவிடலாம். இந்த டெஸ்ட் கிட்களை சீனா மற்றும் தென்கொரியாவில் உள்ள நிறுவனங்கள் தயாரித்து வழங்கி வருகின்றன. அந்த வகையில் தமிழகம் சுமார் 4 லட்சம் டெஸ்ட் கிட்களை வாங்க முடிவு செய்தது.

முதற்கட்டமாக ஒரு லட்சத்து 25 ஆயிரம் டெஸ்ட் கிட்களை சீன நிறுவனத்திடம் வாங்க தமிழக அரசு ஆர்டர் கொடுத்தது. இந்த ஆர்டரில் முதற்கட்டமாக 24 ஆயிரம் டெஸ்ட் கிட்கள் நேற்று முன்தினம் தமிழகம் வந்தன. இந்த கிட்களை கொண்டு சேலம், சென்னை, கோவை, திருச்சியில் உடனடியாக சோதனை துவங்கியது.

இதன் மூலம் கொரோனா பரிசோதனை அரை மணி நேரத்தில் முடிந்தது. ஆனால் தமிழக அரசு கொரோனா கிட்களை கூடுதல் விலைக்கு வாங்கியிருப்பதாக புகார் எழுந்தது. தமிழக அரசு வாங்கிய அதே டெஸ்ட் கிட்களை அதே நிறுவனத்திடம் இருந்து சத்தீஸ்கர் அரசு தலா ஒரு கிட்டை 337 ரூபாய்க்கு கொள்முதல் செய்துள்ளது.

ஆனால் தமிழக அரசு அந்த டெஸ்ட் கிட்களுக்க ரூபாய் 600 வரை செலவழித்துள்ளது. இது தொடர்பாக செய்தியாளர் சந்திப்பின் போது எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு சுகாதாரத்துறை அதிகாரிகள் உரிய முறையில் பதில் அளிக்கவில்லை. ஆனால் பிறகு சுகாதாரத்துறை தரப்பில் இருந்து அளிக்கப்பட்ட விளக்கத்தின் மூலம் டெஸ்ட் கிட்கள் 600 ரூபாய் கொடுத்து வாங்கியது தெரியவந்துள்ளது.

இதன் மூலம் சுமார் 300 ரூபாய் வரை கூடுதல் விலைக்கு ரேபிட் டெஸ்ட் கிட்களை தமிழக அரசு கொள்முதல் செய்துள்ளதாக புகார் எழுந்துள்ளது. மேலும் டெஸ்ட் கிட்கள் கொள்முதலிலும் கமிசன் பார்க்கப்பட்டுள்ளதாகவும் புகார் எழுந்துள்ளது. இது குறித்து தமிழக அரசு தரப்பில் விசாரித்த போது சத்தீஸ்கர் அரசு ஆர்டர் செய்த போது அதன் தேவை குறைவாக இருந்ததாகவும் தற்போது தேவை அதிகரித்துள்ளதால் சீன நிறுவனம் விலையை உயர்த்திவிட்டதாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.